ராமரின் முகத்தை சிதைத்த சுள்ளான்கள்…. 12வருடமாக தொடரும் கொலைகள்… கோட்டை விட்ட கரூர் போலீஸார்.
தென் மாவட்டத்தில் மீண்டும் ஜாதி வெறுப்பால் பழிக்குப் பழி கொலைகள் மீண்டும் துவங்கியுள்ளது தான் தமிழகத்தை அதிர வைக்கின்றன. தற்போது நடந்த சம்பவத்தை தெரிந்துக்கொள்ளும் முன்…
தொடரும் பகையின் காரணம்
கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையொட்டி இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வழக்கம்போல அவரது சமூகத்தினர், அரசியல் தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தினர்.
அந்தவகையில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய மதுரை சிலைமான் அருகேயுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த 20 பேர் வந்த வேனில் அருப்புக்கோட்டை வழியாக சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வேன், மதுரை ரிங் ரோட்டில் வந்து கொண்டு இருந்த அவர்கள் ஒரு பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மது அருந்தியவர்கள் அந்தவழியே மஞ்சள் பனியனோடு வந்த 5 பேரை வழிமறித்ததில் பிரச்னை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த வேன் மீது சரமாரியாக கற்களும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டதில், அப்போது வேன் திடீரென லாக் ஆகிவிட வேன் பற்றி எரிந்து வேனில் இருந்த 20 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளி்ல் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த புளியங்குளத்தை சேர்ந்த கணேசன் மகன் ஜெயபாண்டி (18), சேகர் மகன் சுந்தரபாண்டி (19), ராஜா மகன் வெற்றிவேல் (20), தேசிங்குராஜா, ரஞ்சித் குமார் உள்ளிட்ட 7 பேர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவின்போது அவரது நினைவிடம் இருக்கும் பசும்பொன்னுக்குச் செல்போர் பரமக்குடி அருகே தலித் மக்கள் அதிகமுள்ள பொன்னையாபுரம், பாம்புவிழுந்தான், பச்சேரி போன்ற ஊர்களின் வழியாகப் போக அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காக பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட்டை அமைத்து, யாரும் செல்லாமல் தடுத்து விடுவார்கள். ஆனால் இந்த முறை பார்த்திபனூர் மேலப்பெருங்கரையைச் சேர்ந்த 14 பேர் ஒரு வேனில் பசும்பொன் போய் அஞ்சலி செலுத்திவிட்டு, பரமக்குடி வந்தனர். வேனை டிரைவர் சிவகுமார் ஓட்டி வந்தார். பிரச்னைக்குரிய கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்த வேன், பாம்புவிழுந்தான் கிராமத்துக்கு வந்தது. அப்போது வேனில் இருந்தவர்கள் “இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?’ என்றெல்லாம் கோஷம் எழுப்ப, இதைப் பார்த்து டென்ஷனான கிராமமக்கள் அவர்களை வழிமறித்துத் தாக்க, இரு தரப்பிற்கும் இடையில் மோதல் உண்டானது. அந்த மோதலில் ஓட்டுனர் சிவக்குமார் என்பவர் பலியானார்.
இந்த சம்வத்தில் காரணமாக மதுரை சின்ன அனுப்பானடி ராமர், தலைமையில், அனுப்பானடி மோகன், விக்னேஷ்வரன், மதுரை பொட்டப்பாளையம் அடுத்த பாட்டம் முத்துவிஜயன், சிந்தாமணி “பங்க்’ மணி “கிளி’ கார்த்திக், அனுப்பானடி சந்திரசேகர் என்ற மூலக்கரை, சோணையா, “சோப்பு’ நாகராஜ், “வெள்ளகருத்தான்’ முத்துகருப்பன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் அப்போது வயது 25க்குள் தான்.
இந்தச் சம்பவம் நடந்த சிலவாரங்களில் சென்னை உயர்நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றத்தில் நிபந்தனை கையெழுத்து போட்டு வந்தனர்.
மெட்ராஸ் பட பாணியில் பழி தீர்த்த பகை… வேடிக்கை பார்த்த போலீஸார்
கடந்த டிசம்பர் 12 ம் தேதி அந்த வழக்கில் குற்றவாளிகள் 9 பேர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்திற்கு காரில் சென்று, கையெழுத்திட்டு வந்தனர். இவர்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் வாகனமும், உடன் சென்று வந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு, காலை 11 மணிக்கு வாடகை காரில் (TN 59 AL 3081) 9 பேர் உட்பட 11 பேர், அனுப்பானடி திரும்பினர். இவர்களுக்கு பாதுகாப்பாக, முன்னால் 3 டூவீலர்களில் நண்பர்கள் செல்ல, காருக்கு பின்னால், எஸ்.ஐ தனுஷ்கோடி உட்பட 2 போலீஸார் போலீஸ் வாகனத்தில், சென்றனர். ஆனாலும், மதுரை தெப்பக்குளம் – அனுப்பானடி சாலையில் உள்ல பெண்கள் பள்ளிகூடம் அருகில் உள்ள பாக்கியம் தெருவில், ஷேர் ஆட்டோவில் காத்திருந்த 8பேர் கும்பல், தொடர்ச்சியாக, 5 பெட்ரோல் குண்டுகளை வீசியது. அதனையடுத்து 9 பேரும், காரிலிருந்து இறங்கி தெப்பக்குளம் நோக்கி ஓடினர். அப்போது அவர்களுக்காக திட்டமிட்டபடி பனகல் தெருவில், காருடன் காத்திருந்த 7 பேர் கும்பல் வழிமறித்து வெட்ட துவங்கியது. அதில் பாட்டம் முத்துவிஜயன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சோணையா, விக்னேஷ்வரன் ஆகியோரும் அரிவாள் வெட்டு விழுந்தது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு பாதுகாப்புக்காக வந்த அர்ஜூனன், முனீஸ்குமார், ஆகியோருக்கு அரிவாளால் வெட்டிக் காயம் ஏற்பட்டது.
முகத்தை சிதைக்கப்பட்ட ராமர்.. அதே ஸ்டைலில் சேஸிங்.. தீராத பகை
நடந்த சம்பவங்களில் முக்கியக் குற்றவாளியான ராமர் என்கிற குட்டை ராமர், “எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் இவ்வழக்கு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்குக்காக கடந்த 19ம் தேதி ராமர் என்கிற ராமர் பாண்டியை மேற்படி வழக்கு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு தனது நண்பர் கார்த்திக்குடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ராமர் என்கிற ராமர் பாண்டியை அரவக்குறிச்சி அடுத்த தடா கோவில் அருகே பொலிரோ காரில் வந்த மர்ம நபர்கள், ஸேசிங் செய்து காரை இடித்துள்ளனர். தப்பி ஓடிய ராமரை விரட்டிய கும்பல் சாலை அருகே வைத்து முகத்திலும் தலையிலும் வெட்டி சிதைத்தனர். ராமருடன் வந்த கார்த்திக்கு என்கிற முத்து ராஜா வெட்டுக்காயங்களுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸார் சம்பவம் இடம் சென்று விசாரணை செய்தனர். இறந்துபோன ராமரின் உடல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக உடலை பிரேத பரிசோதனை செய்திட போலீஸார் முயன்று வருகிறார்கள். போலீஸார் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை ராமரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியாக இறந்த ராமர் சார்ந்த சமூகத்தினர் திரள்வதால் கரூர் அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக உள்ளது. கரூர், திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் அரசு மருத்துவமனை வளாகத்துக்கு ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் வந்தனர். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த கொலை வழக்கில் நடிகர் கருணாஸுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், ராமர்பாண்டியை கொலை செய்த வழக்கில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தர்மா (25), வினோத்கண்ணன் (26), மகேஷ்குமார் (24), தனுஷ் (21) ரமேஷ் (24) ஆகிய 5 பேர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி உள்ளனர்.
நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று மாலை 4மணியளவில் ராமரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. உடல் மதுரை கொண்டு செல்லும்வரை போலீஸார் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் உண்மைக்குற்றவாளிகளா என்பது குறித்து கரூர் அரவக்குறிச்சி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், குற்றவாளிகளும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் பழிக்குப்பழி கொலைகள் அரங்கேறக் கூடாது என அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கியது. ஆனாலும் கொலைகள் தொடர்கின்றன. கொலையாளிகள் மற்றும் குற்றவாளிகள் அனைவரும் 30 வயதுடையவர்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் ஆஜராகும் குற்றவாளிகளை கண்காணிக்காமல் போலீஸார் இருந்தது ஏன். தமிழக சட்டமன்றம் தற்போது நடந்துவரும் நிலையில் கொடூர கொலை நடைபெறாமல் தடுக்க உளவுத்துறை உஷார் இல்லாமல் இருந்தது ஏன். சமூக வலைத்தளங்களில் நடந்த கொலைக்கு ஆதரவாகவும், இன்னும் பழி தீர்க்க கொலைகள் அரங்கேறும் என பதிவிட்டு வருகிறார்கள்…
மீண்டும் மீண்டும் அரங்கேறும் கொலைகளை தடுக்க உளவுத்துறையை உஷார் படுத்துவாரா முதல்வர்.
– பிரியதர்ஷன்