தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் டாக்டர் ஜெகதீசன் !
தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் டாக்டர் ஜெகதீசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. 2024-2025-ம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட், தமிழக சட்டமன்றத்தில் நான்காவது முறையாக ரூ. 42,281.88 கோடி ஒதுக்கீட்டுடன், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து அவர்களின் வருமானம் உயர்வதற்காக தமிழக அரசின் சார்பில் தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வேளாண் பட்ஜெட்டில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ. 206 கோடி நிதி, அறுவடைக்குப் பின் வேளாண் விளைபொருட்களில் ஏற்படும் இழப்பைத் தடுக்க போதுமான கிடங்குகள் அமைத்தல், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெறும் வகையில் 2482 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 200 கோடி நிதி, பயிர் உற்பத்தித் திறன் ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ. 48 கோடி நிதி, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிர்களின் சாகுபடியை அதிகரிக்க ரூ 45 கோடி நிதி, சிறு தானிய சாகுபடிக்கு ரூ. 36 கோடி நிதி, தரிசு நிலங்களை விளைநிலங்களாக்க ரூ. 200 கோடி நிதி, நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கு ரூ. 773 கோடி நிதி, வேளாண் கருவிகள் வழங்க ரூ. 170 கோடி மானியம், ரூ. 16000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு போன்ற அறிவிப்புகளால் வேளாண் பெருமக்கள் இத்தொழிலில் அச்சமன்றி ஈடுபட ஊக்குவிக்கும்.
ஒரு கிராமம், ஒரு பயிர் என்ற புதிய திட்டம், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்தல், வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைகள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைத் தொகுப்புகள் அமைக்க நிதி, பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க ரூ. 50 லட்சம் நிதி, பூச்சி நோய் தாக்குதலைத் தடுக்க 10 லட்சம் வேப்பமரக் கன்றுகள் வழங்க நிதி, நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களுக்கு ரூ. 90 லட்சம் நிதி, பாசனப் பரப்பை உயர்வடையச் செய்து 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு, நீர்ப் பாசனத்தை உறுதி செய்யும் வகையில் குளங்கள், கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவற்றை அவ்வப்போது தூர்வார்தல் போன்ற நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர்களை இத்தொழிலில் நிரந்தரமாக ஈடுபடச் செய்யும்.
வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு ஏதுவாக ரூ. 5 கோடியில் 10 உழவர் அங்காடிகள், தமிழகம் முழுவதும் 100 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை சீர் செய்ய ரூ. 50 கோடி நிதி, 10 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு, புதிதாக 100 சேமிப்பு கிடங்குகள், புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம், வேளாண் கண்காட்சிகளை நடத்த ரூ. 9 கோடி நிதி, 60 தென்னை நாற்றுப் பண்ணைகள் அமைக்க ரூ. 2.40 கோடி நிதி, முக்கனிகள் மேம்பாட்டு சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி நிதி, காய்கறி பயிரிட நிரந்தரப் பந்தல் அமைக்க ரூ. 9.4 கோடி மானியம், 12000 விவசாயிகளுக்கு நீர்பாசனம் அமைக்க மானியம், கருப்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை மற்றும் சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த நிதி, ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்போருக்கு ரூ. 200 கோடி கடன் வழங்க நிதி, விவசாயிகளுக்குத் தேவைப்படும் விதைகள், உரங்கள், வேளாண் இயந்திரங்கள், வாடகைக் கருவிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவதன் மூலம் விவசாயிகள் தரமான பொருட்களை குறைந்த விலையில் கிடைக்கப்பெற்று சாகுபடி அதிகரித்து அவர்கள் வருமானம் உயர வழி வகுக்கும்.
வேளாண் பட்ஜெட்டில் பட்டு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காய்கறி விவசாயம் போன்று பல்வேறு வேளாண் பொருட்கள் உற்பத்திக்கான வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும்,தமிழகத்தில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் மலர் விவசாயத்திற்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 5.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவு.
மலர் விவசாயம் மூலம், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி வணிகம் நடைபெற்று, அந்நியச் செலாவாணி கிடைத்து வரும் நிலையில், மலர் விவசாயத்திற்கும், மலர் வணிக மேம்பாட்டிற்கும் பெரிய அளவில் மானிய அறிவிப்பும், ஊக்குவிப்புத்திட்டங்களும் இந்த வேளாண் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஆனால் இது குறித்து துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதங்களின் போது மலர் விவசாயிகள் மகிழ்ந்திடும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது எனதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டாக்டர் ஜெகதீசன் அறிவித்துள்ளார்.
ஷாகுல்
படம் – ஆனந்த