அடுத்த பிரதமர் ராகுலா? மம்தாவா? ஒன்று சேர்ந்து பாஜகவை வெளியேற்ற துடிக்கும் மாநில கட்சிகள்
அடுத்த பிரதமர் ராகுலா? மம்தாவா?
ஒன்று சேர்ந்து பாஜகவை வெளியேற்ற துடிக்கும் மாநில கட்சிகள்
சென்னை வந்திருந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலில் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு ஸ்டாலின் வீட்டுக்குப் போனார். அவருடன் நீண்ட நேரம் பேசினார். பிறகு ஸ்டாலினுடன் அமர்ந்து விருந்தும் சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்பினார். ‘இந்திய ஜனநாயகத்தைப் பொறுத்தவரை கருணாநிதி தான் மூத்த தலைவர். அவரை நினைத்து நான் மட்டுமல்ல, தென்னிந்தியாவே பெருமைப்படுகிறது. ஸ்டாலின் என்னுடைய அன்புக்குரிய சகோதரர். தென்னிந்தியாவின் முன்னேற்றத்துக்கு ஸ்டாலின் பங்களிப்பு மிகவும் முக்கியம்’ என்று பெருமையோடு மீடியாவிடம் சொல்லிவிட்டுப் போனார் சந்திரசேகர ராவ்.
ஸ்டாலின் வீட்டில், ஸ்டாலினிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் சந்திரசேகர ராவ். கையில் சில குறிப்புகளை வைத்திருந்த சந்திரசேகர ராவ், இந்தியா முழுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் இருக்கும் செல்வாக்கின் வித்தியாசத்தைப் பட்டியல் போட்டுப் புள்ளிவிவரங்களுடன் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லச் சொல்ல ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறார் ஸ்டாலின்.
‘ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு காங்கிரஸோடு கூட்டணி போனாலும், அதிக சீட்டுகள் அவர் தான் ஜெயிப்பார்.
ஜெகன் மோகன் ரெட்டி வேண்டுமானால் பிஜேபியோடு போக நேரிடும். தமிழ்நாட்டில் பிஜேபிக்கும் காங்கிரசுக்கும் செல்வாக்கு இல்லை. பிகாரில் லாலு சிறையில் இருந்தாலும் அவரே வலுவாக இருக்கிறார். நிதீஷ் – பாஜக அணிக்குப் பெரிதாக ஒன்றும் கிடைக்காது. உத்தரப் பிரதேசத்தில் முலாயமும் மாயாவதியும் இணைந்துவிட்டால் பிஜேபிக்கு வேலையே இல்லை, காங்கிரசுக்கும் கூட வேலையில்லை. மேற்கு வங்காளத்தில் மம்தாதான் ஜெயிப்பார். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கமே அதிகரித்துவருகிறது.
மாநிலக் கட்சிகளின் தயவோடு காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறது மறுபடியும் மத்தியில் பிஜேபி ஜெயிக்க வாய்ப்பே இல்லை. காங்கிரஸ், பிஜேபி இரண்டு பேருமே சரியாக இல்லை.
கொஞ்சம் கெட்டவங்க… ரொம்பவும் கெட்டவங்க என்று சொல்ற அளவுக்குதான் இவங்க அளவீடு இருக்கு. அவங்களோட போய் நாம எதுக்கு சேரணும்?
மாநிலக் கட்சிகள் எல்லோருமே நீங்க உட்பட, எல்லோருமே நம்மோட உரிமைக்காகத்தான் போராடிட்டு இருக்கோம். நாம எல்லோரும் ஒன்று கூட வேண்டிய நேரம் இது. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் என நாம எல்லோரும் ஒன்று கூடினாலே எப்படியும் 160 சீட்டுக்கு மேல ஜெயிச்சுடுவோம்.
காங்கிரஸைப் பொறுத்தவரை இப்போதைக்கு நாங்க எடுத்த சர்வேயின்படி, 110 சீட்டுக்கு மேல வர வாய்ப்பே இல்லை. 110 சீட் ஜெயிச்சு காங்கிரஸ் சார்பில ராகுல் காந்தி பிரதமர் ஆகணுமா? அவர் என்ன இந்திரா காந்தியா, ராஜீவ் காந்தியா? அவரை எதுக்கு நாம் பிரதமர் ஆக்கணும்? நம் தயவோட காங்கிரஸ் ஆட்சி அமைச்சா, உள்துறை உட்பட பலமான துறைகளை காங்கிரசே வைத்துக்கொள்ளும், ஆளுநர்களை அவர்களே நியமிப்பார்கள், வெளிநாட்டுத் தூதுவர்களை அவர்களே நியமிப்பார்கள்.
நமக்குக் கட்சிக்கு ஒன்று, இரண்டுனு அமைச்சர் பதவிகளைக் கொடுப்பாங்க. இதுவா நமக்கு வேணும்?’ என்று கேட்டிருக்கிறார் சந்திர சேகர ராவ்.
விருந்தின்போது பரிமாறப்பட்ட ஐஸ்க்ரீமை சுவைத்த படியே, ‘நமக்குக் குச்சியைக் கொடுத்துட்டு ஒட்டுமொத்த ஐசையும் காங்கிரஸ் ருசிக்கப் பார்க்குது. இதுக்கு நாம் பலியாகிடக் கூடாது’ என்ற சந்திர சேகர் ராவ்,
‘மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து போட்டியிடுவோம். நம்மில் ஒருத்தர் பிரதமர் ஆவோம். எனக்கு பிரதமர் ஆகும் ஆசையெல்லாம் இல்லை. மம்தாவை பிரதமர் ஆக்குவோம். அதுக்குப் பிறகு காங்கிரஸ் வந்தால், துணை பிரதமராக ராகுல் காந்தி ஆகிட்டுப் போகட்டும். முடிவெடுக்கிற இடத்துல நாம இருக்கணும். அதுதான் என்னோட ஆசை…’ என்று சொன்னதுடன் நிற்காமல், போனில் யாரிடமோ பேசியிருக்கிறார் சந்திரசேகர ராவ்,
‘இருங்க… ஸ்டாலின் ஜி கிட்ட கொடுக்கிறேன்..’ என்று சொல்லிவிட்டு, ‘மம்தாஜி பேசுறாங்க… பேசுங்க..’ என போனை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத ஸ்டாலின், போனை வாங்கிப் பதற்றத்துடனேயே பேசியிருக்கிறார். சந்திரசேகர ராவ் சொன்ன சில விஷயங்களையே மம்தாவும் சொல்லியிருக்கிறார்.
‘பிரிட்டிஷ் யூனியன் போல இந்தியாவையும் மாற்றணும். அதுக்கு நாம எல்லோரும் மனசு வெச்சாதான் முடியும்…’ என மம்தா சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, ‘பேசி நல்ல முடிவாக எடுப்போம்..’ என ஸ்டாலின் சொன்னாராம். இப்படியாக திமுகவை மூன்றாவது அணிக்குள் கொண்டுவரும் முயற்சியாகத்தான் சந்திரசேகர ராவின் தமிழ்நாடு விசிட் இருந்தது.
சந்திரசேகர ராவ் கிளம்பிய பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘அவரு சொல்றதும் சரியாதான் இருக்கு. எத்தனை நாளைக்கு காங்கிரஸையே நம்பிட்டு இருக்க முடியும்? காங்கிரஸோட நடவடிக்கையும் வர வர சரியில்லை. திருநாவுக்கரசர் எந்த நேரத்துல என்ன பேசுவாருன்னே தெரியலை. அதனால இனி காங்கிரஸுடன் அதிகமாக நெருங்கவும் வேண்டாம். அதிகமாக விலகவும் வேண்டாம். அப்படியே பக்குவமாக வெச்சுக்குவோம். தேர்தல் நேரத்துல மத்த எல்லாவற்றையும் முடிவு பண்ணிக்கலாம்…’ என்று சொல்லியிருக்கிறார். அந்த ரூட்டில்தான் பயணிக்கிறது திமுக” அதே நேரத்தில் திருநாவுக்கரசர் பத்திரிகையாளர்களிடம் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறது என்று பேட்டியளித்தார்.
இதை விட ஓரு படி மேலே போய்.. இப்போது வரை திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் (ஏப்ரல் 30) டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்திருக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணியா, மூன்றாவது அணியா என்ற யோசனையில் திமுக இருந்தாலும், அதன் தோழமைக் கட்சிகளான தமிழக மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை மூன்றாவது அணிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. மம்தா இடம்பெற்றுள்ள மூன்றாவது அணியில் மார்க்சிஸ்ட் இடம்பெற வாய்ப்பில்லை. மூன்றாவது அணி என்பது பி.ஜே.பியின் பி. டீம் என்று விமர்ச்சிக்கிறார் தோழர் பாலகிருஷ்ணன்.
இத்தகைய சூழ்நிலையில்தான், ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குத் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரகுலா – மம்தா வா என்கிற பஞ்சாயத்துதான் தற்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.