நோட்டாவை ஆயுதமாக ஏந்தும் ஸ்ரீரங்கம் மக்கள்
2021ம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் திருச்சியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஸ்ரீரங்கம் அரங்கமா நகர் நலச் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு தீர்வு காணாவிடில் வரும் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க முடிவு என சங்க தலைவர் ஹேமநாதன் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
துண்டு பிரசுரத்தில்,
ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசுக்கு அரங்கமா நகர் நல சங்கம் அடிமனை உரிமை மீட்பு குழுவின் அவசர அவசிய கோரிக்கை
ஸ்ரீரங்கம் பதிவுதுறை சார் பதிவகத்தில் 2007ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை பதிவு செய்து நிலுவையாக உள்ள 652 பத்திரங்களையும், எந்த வித நிபந்தனைகளும் இன்றி உரியவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும். 1027 டைட்டில் படி உரிமைபட்டயத்தில் உள்ள 700க்கும் மேற்பட்ட சர்வே எண்களை முன்பு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் இணை ஆணையர் கல்யாணி கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதை உடனே ரத்து செய்ய வேண்டும். தற்போது அனைத்து உரிமை பட்டயத்தில் உள்ள சர்வே எண்களையும் கோவில் நிர்வாகம் வருவாய் துறை மூலம் மாற்றம் செய்ய முயல்கிறது. அதையும் அரசு உடனே தடுக்க வேண்டும்.
வீடியோ லிங்க்
பல்வேறு கட்ட போராட்டங்களை பொதுமக்கள் அறிவிக்கும் போது நடைபெறும் சமாதான பேச்சு வார்த்தைகளில் வழக்கு நிலுவையில் உள்ள போது நாங்கள் எதையும் முடிவு செய்ய முடியாது என கூறும் போது வழக்கு நிலுவையில் உள்ள சர்வே எண்களை மாற்றுவதும் பத்திர பதிவை நிறுத்துவதும் தவறு. அதை அரசு உடனே தடுத்து நிறுத்தி வழக்கின் மூலம் தீர்வு வரும் வரை பத்திர பதிவை தொடர்ந்து நடத்த உத்தரவிட வேண்டும். 1864 ஆம் ஆண்டின் IFR இனாம் தூய பதிவேட்டின் படியும் 27.07.1909ஆம் ஆண்டின் அரசு பதிவேட்டின் படியும், ஸ்ரீரங்கத்தில் முதல் நான்கு பிரகாரங்களும் கோவில் புறம்போக்கு மற்றும் பாக்கியுள்ள மூன்று பிரகாரங்கள் நத்தம் புறம்போக்கு என்று உள்ள நிலையில் கோவில் எந்த வகையிலும் உரிமை கொண்டாட வழி இல்லாத போது 1930ஆம் ஆண்டு அரசு பதிவு படி கோவில் பெயரில் கொண்டு வந்ததை ரத்து செய்ய வேண்டும்.
1963ல் இனாம் ஒழிப்பு சட்டம் அமல் படுத்திய பிறகு பொதுமக்கள் ரயத்வாரி பட்டா வழங்க உத்தரவிட்டு குடிமக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதற்கு இழப்பீட்டு தொகையாக தஸ்திக் அலவன்ஸ் என்ற பெயரில் மாவட்ட வருவாய் துறையின் மூலம் இன்று வரை பணம் பெற்று வரும் கோவில் நிர்வாகம் அடிமனைக்கு எந்த வகையிலும் உரிமை கொண்டாட முடியாது. அரசு அதற்கு உடனே முடிவு கட்ட வேண்டும். மேற்கண்ட தாவா தொடர்பான இடங்கள் கோவிலுக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாட எந்த ஒரு உரிமையும் இல்லை என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். 2004ம் ஆண்டுக்கு பிறகு ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று வரை பத்திர பதிவு மறுக்கப்படுவதால் முத்திரைதாள் விற்பனை மற்றும் பதிவு கட்டணம் வராததால் பதிவு துறைக்கு 16 ஆண்டுகளில் சுமார் 200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் இடங்கள் பதிவாகாததால் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் மூலம் பில்டிங் அப்ரூவல் (கட்டிட அனுமதி) வழங்கப்படாதால் மாநகராட்சிக்கு 100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் சுத்தமாக பத்திரபதிவு நிறுத்தியதால், நல்ல வருவாயில் இயங்கி வந்த ஸ்ரீரங்கம் நகர கூட்டுறவு வங்கிக்கு பலகோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் படி பதிவு துறை உயர் அதிகாரிகளோ, அறநிலையத் துறை அதிகாரிகளோ, ஆணையர் பத்திரபதிவினை நிறுத்தி வைக்கவோ, ஏற்றுகொள்ளாமலிருக்க எவ்வித வாய்மொழி உத்திரவும் எழுத்தினாலான உத்திரவும் பிறப்பிக்கவில்லை.
மேற்கண்ட அடிமனை உரிமை பிரச்சனைக்கு கடந்த 2011ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட போது அவர் அளித்த வாக்குறுதியை அவர் வழியில் ஆட்சி நடத்தும் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக போர்கால அடிப்படையில் அடிமனை பிரச்சனையை தீர்ந்து வைக்க வேண்டும்.
வீடியோ லிங்க்
தேர்தல் அறிவிப்புக்கு முன் ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் போதே அடிமனை பிரச்சனையை தீர்க்காவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் அடிமனை உரிமையாளர்கள் அனைவரும் சுமார் 50,000க்கும் மேலான வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க முடிவு செய்யும் நிலையை உருவாக்கிடாத வகையில் அரசு உடனே நடவடிக்கை எடுக்க ஸ்ரீரங்கம் அரங்கமாநகர் நலங்சங்கம் அடிமனை உரிமை மீட்பு குழு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது என்று சங்கத் தலைவர் ஹோமநாதன் துண்டு பிரசுரம் அச்சடித்து முதல்வர் தேர்தல் பரப்புரை செய்து வரும் நேரத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெற்றிச்செல்வன்,
ஒளிப்பதிவு மகேந்திரன்