அடிக்கடி வேட்பாளர்கள் மாற்றும் ரகசியம் – சீமான் கட்சியில் என்ன நடக்கிறது ! ..
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 2024ஆம் ஆண்டு மே திங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களை அவ்வப்போது அறிவித்து வருகிறார். முன்பெல்லாம் சீமான் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு வரிந்துகட்டி வேலை செய்யும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் தற்போது சீமானை எதிர்த்துக் கேள்விகளைக் கேட்டு வருகின்றார்கள். இதுவும் ஜனநாயகம் தானே என்று கட்சித் தலைமை அமைதி காத்து வருகின்றது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக இசை மதிவாணன் என்பவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்த இசை மதிவாணனுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் இசை மதிவாணன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்ற நிலையில் விசாரணைக்கும் அவர் ஆஜராகி இருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக வந்த தகவலின் பெயரில் நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தென்காசி நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் கைலைராஜன் பாஜக மாநில மருத்துவ அணியின் தலைவராக இருந்துள்ளார். இவர் எப்போது நாம் தமிழர் கட்சிக்கு வந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. காரணம் நாம் தமிழர் கட்சி கடந்த 6 மாதக் காலங்களில் நடத்திய எந்தப் போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. கடந்த பொங்கல் நாளின் போது சென்னையில் நடத்தப்பட்ட கட்சியின் பொதுக்குழுவில்கூடக் கையிலைராஜன் பெயர் சொல்லப்படவில்லை. கைலைராஜன் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தென்காசி பகுதி நாம் தமிழர்கள் தேர்தல் பணிகளைத் தொடங்காமல் அமைதி காத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்காசி தொகுதி வேட்பாளர் கைலை ராஜன் என நாம் தமிழர் கட்சியினர் ஏற்கனவே பிரசாரத்தையும் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக நாம் விசாரித்த போது, சீமான் அறிவித்த தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் கைலை ராஜன், பாஜகவில் தீவிரமாக செயல்பட்டவர். பாஜகவில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு தாவியவர். பாஜகவில் தீவிர இந்துத்துவ சக்தியாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தவர் டாக்டர் கைலை ராஜன். பாஜகவில் இருந்து வந்தவருக்கு சீமான் சீட் கொடுத்து விட்டார் என்கிற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்பட்டதால் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஐடிவிங் தலைவர் சுனந்தா தாமரைச்செல்வன் கயிலை ராஜன் வேட்பாளரே இல்லை என பல்டி அடித்துவிட்டார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
நாம் தமிழர் கட்சியின் மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் இரா.இளவஞ்சி அவர்களுக்குத் தூரத்து உறவினர் கைலைராஜன் என்று சொல்லப்படுகின்றது. இளவஞ்சி அவர்களின் பரிந்துரையின்பேரில் கைலைராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. சீமான் கடுமையாக எதிர்த்து வரும் பாஜகவைச் சேர்ந்தவருக்கு நாதகவில் நாடாளுமன்றத்திற்குச் சீட்டா என்ற கொந்தளிப்பு சீமானின் தம்பிகளிடம் இருப்பதை உணரமுடிகின்றது.
இன்னொரு கொந்தளிப்பும் நாதகவில் உள்ளது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்தியச் சென்னை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகச் சா.பாத்திமா பர்கானா அவர்களை அறிவித்தார். அவரும் மத்தியச் சென்னை தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் தன்னுடைய பிரச்சாரப் பணியைத் தொடர்ந்துள்ளார். சா.பாத்திமா பர்கானா நாம் தமிழர் கட்சி உருவான போது சீமானுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்த தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் மகள்.
சீமான் சாகுல் அமீதை பாசத்தோடு ‘தாய் மாமன்’ என்றே அழைப்பார். சா.பாத்திமா பர்கானாவும் சீமான் அவர்களைப் பாசத்தோடு ‘மாமா’ என்றே அழைப்பார். இந்நிலையில் சீமான் மனைவி கயல்விழி மத்தியச் சென்னையில் போட்டியிடும் சா.பாத்திமா பர்கானாவிற்குப் பதிலாகக் கட்சியில் பல் மருத்துவராக உள்ள கார்த்திகேயன் அவர்களைப் போட்டியிட வைக்கவேண்டும் என்று கேட்டுள்ளார். சீமான் முதலில் மறுத்துள்ளார். பின்னர்க் கயல்விழியின் வேண்டுகோளின்படி மத்தியச் சென்னையில் மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிடுவார் என்று கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக x வலைதளத்தில் கபிலன் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஆதரவு வலையொலியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிடும் 20 பெண் வேட்பாளர்கள் குறித்த செய்தியில் சா.பாத்திமா பர்கானா பெயர் இல்லை. இவர் மாற்றப்பட்டு மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் கார்த்திகேயன் கடந்த 2019 தேர்தலில் மத்தியச் சென்னையில் போட்டியிட்டு 30,809 வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மத்தியச் சென்னை வேட்பாளர் மாற்றமும் நாதக தொண்டர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. இன்னும் சிலர், “கட்சியின் பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்படாத நிலையில் சீமான் மனைவி கயல்விழி கட்சியின் உள்விவகாரங்களில் தலையீடு செய்கிறார் என்றால், பொதுச்செயலாளர் என்று அறிவித்தால் நிலைமை என்னவோ” என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேச விரோதச் செயல்களில் நாம் தமிழர் கட்சியின் முன்னணியினர் ஈடுபட்டுள்ளதாக NIA தேசியப் புலனாய்வு முகாமை கட்சிக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், தொண்டர்களாலும் கட்சியில் சீமானுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பது 7% என்று தற்போதுள்ள வாக்கு வங்கியை 15% உயர்த்தும் சீமானின் எண்ணத்திற்குத் தடையாக இருக்குமா? என்பது விரைவில் தெளிவாகிவிடும்.