திகைக்க வைக்கும் திருமண செலவு !
நமது இந்தியாவில் திருமணச் செலவு என்பது ஆண்டுக்காண்டு கூடிக் கொண்டே போகிறது. நடப்பு ஆண்டில் ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கான சராசரி செலவு 37 லட்சம் ரூபாயாக அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது. உலகில் வேறு எந்த நாடுகளிலும் திருமணத்திற்கு இப்படி செலவுகள் செய்வதில்லை.
உலகிலேயே அதிக சேமிப்பு பழக்கம் கொண்ட நாடு இந்தியா என்ற சிறப்பு நமக்கு இருக்கிறது. உள்நாட்டு சம்பாத்தியம் என்றாலும், வெளிநாட்டு சம்பாத்தியம் என்றாலும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பதில் இந்தியர்கள் கைதேர்ந்தவர்கள். எதிர்கால ஓய்வு வாழ்க்கை, பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு, ஆகியவற்றுக்காகவே நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் சேமிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதே நேரம் உலகிலேயே திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களும் இங்குத் தான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் வீடுகளில் நடத்தப்பட்ட திருமணம் இன்று மிகப்பெரிய மண்டபங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கிறது. மண்டபச் செலவுக்கு மட்டும் 25 லட்சம் ரூபாய் வரையிலும் செலவு செய்யக்கூடிய மனப் போக்கு அதிகரித்து இருக்கிறது. அதனால்தான் இந்த ஆண்டில் இந்தியாவில் திருமணச் செலவு என்பது சராசரியாக ஏழு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மொத்தத்தில் ஒரு குடும்பம் 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஒரு திருமணத்திற்கு செலவு செய்கிறது என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் திருமண வைபவம் என்பது ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய வடிவங்களைப் பெற்று வருகிறது. வீடுகளில் வைத்துத் திருமணம் நடைபெற்ற காலத்தில் மணப்பெண் அணியும் தங்க நகைகள் மற்றும் சீர்வரிசைக்கு மட்டும் தான் அதிக செலவு பிடிக்கும். மண்டபச் செலவு கிடையாது; இசைக் கச்சேரிகள் கிடையாது; விருந்து செலவும் பெரிய அளவில் இருக்காது; இதேபோல் வீடியோ- போட்டோகிராபி போன்ற செலவுகளும் அதிகம் இருக்காது. பியூட்டிஷியன் என்ற பெயரில் நடக்கும் தேவையற்ற மணப்பெண் அலங்காரமும் இருக்காது.
ஆனால் இன்று வீடியோ- போட்டோகிராபிக்கு மட்டுமே ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்யக்கூடிய குடும்பங்களும் இருக்கின்றன. இதேபோல் அதிக கட்டணம் வாங்கும் சமையல் கலை வல்லுநர்களைக் கொண்டு பிரத்தியேகமான உணவுகள் தயாரிக்கப்படுவதால் மண்டப வாடகைக்கு இணையாக உணவுக்கான செலவும் கூடியிருக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் திருமண செலவு தொடர்பான ஆய்வுக்காக வெட்மிகுட் என்ற ஒரு நிறுவனம் நாடு முழுவதும் புதிதாக மணமுடித்த 3 ஆயிரத்து 500 தம்பதிகளிடம் கருத்துகளைக் கேட்டு இருக்கிறது.
இந்த ஆய்வில் ஒன்பது சதவீதம் பேர் தங்கள் திருமணத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். சுமார் பத்து சதவீதம் பேர் 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை திருமணத்திற்கு செலவிட்டு இருக்கிறார்கள். சுமார் 40% பேர் தங்கள் திருமணத்திற்கு 15 லட்சம் ரூபாய்க்கு கீழ் செலவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதே போல் 23 சதவீதம் பேர் 25 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள். 19 சதவீதம் பேர் 15 முதல் 25 லட்ச ரூபாய் வரை செலவு செய்து திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள்.
சராசரியாகப் பார்க்கும்போது இந்த ஆண்டில் ஒரு திருமணத்திற்கு 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு பிடித்து இருக்கிறது இது கடந்த ஆண்டின் சராசரி செலவை விட ஏழு சதவீதம் அதிகமாகும். திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுவதாக இந்திய வர்த்தக கூட்டமைப்பு கணித்திருக்கிறது.
இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களிலும், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மேற்கு மாநிலங்களிலும் திருமணத்திற்காகப் பணம் தண்ணீராய் இறைக்கப்படுகிறது.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளாவில் தான் செலவைக் கட்டுக்குள் வைத்துத் திருமணம் நடத்தப்படுகிறது. தற்போது அங்கும் ஆடம்பர திருமணங்களை நோக்கி மக்கள் மனம் திரும்பத்தொடங்கி இருக்கிறது.தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கடன் வாங்கியாவது திருமணத்தை ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்ற மனநிலை அதிகரித்து இருக்கிறது. அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் தான் எளிய முறையில் தங்கள் பண்பாட்டு நடைமுறைகளுக்கு உட்பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் திருமணச் செலவைக் குறைக்க மக்கள் முன் வர வேண்டும். ஆடம்பரமான மண்டபம், கால நேரத்தை விரயமாக்கும் புரோகிதர் சடங்குகள், தங்கள் குடும்ப அந்தஸ்தை உயர்த்தி பிடிப்பதற்காகவே இலையில் வைக்கப்படும் வகை வகையான உணவுகள், மணமகளுக்கு 100 பவுன் தங்கம், மாப்பிள்ளைக்கு 50 லட்சம் ரூபாயில் கார் எனப் பணத்தைக் கொட்டி திருமணம் செய்தாலும் தம்பதியர் வாழ்ந்து காட்டப் போகும் வாழ்க்கை தான் முக்கியம்.
கோவில்கள், தேவாலயங்களில் வைத்து மிக எளிய முறையில் திருமணம் புரியும் தம்பதியர் மற்றும் நண்பர்கள் –உறவினர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் பலர் சமூகத்திற்கு முன்மாதிரியாக அந்தஸ்தோடு வாழ்ந்து காட்டுவதையும் இந்தச் சமூகம் பார்க்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கோடிகளைச் செலவு செய்து ஆடம்பரமாக மணவிழா காணும் தம்பதியரில் பலர் வாழ்க்கையில் தோற்றுப் போய் நீதிமன்றங்கள் முன்பு நிற்பதையும் சமூகம் பார்க்கிறது.
ஆகவே ஒரு திருமணம் எப்படி நடைபெறுகிறது என்பது முக்கியமல்ல திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை முறை தான் முக்கியம் என்பதை நமது சமூகம் உணர வேண்டும். திருமணத்திற்கான செலவுகள் குறைக்கப்பட வேண்டும்; வருங்காலம் அதை நோக்கிப் பயணப்பட வேண்டும்.
முனைவர்.
இனிகோ இருதயராஜ்,
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ