ஒரு பேச்சுக்கு அழைத்தார்கள்!.. பேச்சு வார்த்தைக்காக அழைக்கவில்லை! – ஐபெட்டோ அண்ணாமலை
*ஒரு பேச்சுக்கு அழைத்தார்கள்!.. பேச்சு வார்த்தைக்காக அழைக்கவில்லை!… எதிர்பார்த்தது நடைபெற்றது!.. ஏமாற்றம் இல்லை!..*
ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ கூட்டமைப்புகள் நேற்று (22.12.2025) சென்னையில் மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தொடர்ச்சியாக எ.வ.வேலு தலைமையில் நடைபெறுகின்ற பேச்சு வார்த்தையில்.. இதுவரையில் என்ன நடந்ததோ?.. அதுதான் இன்றும் நடந்துள்ளது!
நிதி அமைச்சர் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர்கள்!.. ஆனால் அவர்கள் நடப்பதை கேட்பாளர்களாகத்தான் இருந்தார்கள் என்று தெரிய வருகிறது.
போராட்டம் என்று அறிவித்தால்… கிராமப்புறத்தில் சொல்லுகிறது போல “ஒரு பேச்சுக்காக” அழைப்பார்கள்!. அலைபேசி வழியாக காற்றில் மிதந்து வரும் செய்தி தான்.

தேர்தல் ஆணையம் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட இருக்கிறார்கள். கோரிக்கைகளை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்!.. என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு தெரிவித்துள்ளார்கள்.
மத்திய அரசு நிதி தரவில்லை என்கிறார். மக்களுக்கும் செய்ய வேண்டும் என்கிறார்.
இதுவரையில் கோரிக்கைகள் எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தெரியாதா?.. முதலமைச்சர் அவர்களை எத்தனையோ முறை நேரில் சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்து இருப்பார்கள்!.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் நிறைவுற்று விட்டது. இதுவரையில் செய்யாதவர்! இனிமேல் என்ன செய்யப் போகிறார்?.. என்ற குரல் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
ஆட்சியை அவர் நடத்துகிறார். வாக்கு வங்கி அவரது செயல்பாட்டை பொறுத்துதான் அமையும். ஐஏஎஸ் அதிகாரிகள் எப்போதும் மத்திய அரசிடம் இணக்கம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்!.. மாநில அரசு அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்ற செயல்பாடுகளை யூகமாகத்தான் செய்து வருகிறார்கள்!..
போர்க்குண தளபதிகளே!..
ஜேக்டோ ஜியோ, போட்டோ ஜியோ இரண்டு கூட்டமைப்புகளும் ஜனவரி 6ஆம் தேதி முதல் திட்டவட்டமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளார்கள்.
2003இல் இரண்டு கூட்டமைப்புகளும் ஒன்றாக இணைந்த ஜாக்டோ ஜியோவாக களத்தில் நின்றோம்!.. பெயர் தனித்தனியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் ஆறேகால் லட்சம் பேர் புதிய பென்ஷன் (CPS) திட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தினை 2026 இல் பெற்றுத்தர வேண்டியது மூத்தோர்களின் கடமை உணர்வாகும்.
அதுபோல இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் உட்பட அனைத்து பிரிவினர்களின் கோரிக்கைகளை பெற்றுத்தர வேண்டியது இரண்டு கூட்டமைப்புகளின் தலையாய கடமை உணர்வாகும்.
2026 ஆம் ஆண்டு இழந்ததை மீட்டெடுக்கின்ற ஒரு புத்தாண்டாக அமையட்டும்!..
தேர்தல் வருகிற போது தான்.. தேர்தல் வாக்கு எண்ணுகிற போது தான்… இந்த பாதிப்புகள் எதிரொலிக்கும்!.. என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உணரத்தான் போகிறார்கள்!..

தலைவர் கலைஞர் அவர்கள் காப்பாற்றிய வாக்கு வங்கியினை அவரது மகன்காலத்தில் பாதுகாக்க முடியுமா?? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!.
திராவிட மாடல் அரசில்… களத்தில் இருந்து போராடதவர்கள் எந்த பிரிவிலாவது இருக்கிறார்களா?.. என்று கண்டுபிடித்து சொல்லுங்கள்!.. ஒரு ஆறுதலாகவாவது இருக்கட்டும்!..
சங்கங்கள் தோற்றதாக உலகத்தில் வரலாறு இல்லை!..
ஆட்சி செய்தவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தார்கள்!.. என்ற வரலாறும் இடம்பெறவில்லை!..
கரம் கோர்த்து களத்தில் நிற்போம்!.. வெல்லுவோம்!.. வென்று காட்டுவோம்!.. என்ற உணர்வோடு போர்க்குண புறநானூற்று நடையோடு… தொடர் போராட்டத்தினை… தொடருவோம் வாருங்கள்..!
தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும் பொறுப்பில் உள்ளார்கள். ஆனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையின் தலைவராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு அவர்கள் தான் நியமிக்கப்படுகிறார். அவருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் சம்பாதித்து வைத்துள்ள வாக்கு வங்கிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. என்பதை ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்னும் உணராமல் இருந்து வருகிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை.

53 ஆண்டுகால இயக்க பொதுவாழ்வில் போராட்டங்கள் பலகண்டு களத்தில் வெற்றி பெற்ற வரலாறுகளை எல்லாம் தொடர்ந்து பதிவுகளாக வெளியிட உள்ளோம்!.. உண்மை வெளிச்சத்திற்கு வரத்தான் செய்யும்!.. தீர்வா?.. தீர்வை நோக்கி போராடுபவர்கள் பொதுத் தேர்தலில் முடிவு செய்ய வேண்டுமா?.. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!.
தமிழ்நாட்டில் போராடிவரும் அனைத்து துறையினருக்கும் சத்தியம் செய்து அளித்த வாக்குறுதிகளை, நிறைவேற்ற முன்வராத திராவிட மாடல் அரசு என்ற வரலாற்றுப் பிழையினை சுமந்து நிற்கும் திராவிட மாடல் அரசு என்பதை மறுக்கத்தான் முடியுமா?.. மறக்கத்தான் முடியுமா?..
வா.அண்ணாமலை,
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்.
அலைபேசி:9444212060,
மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com








Comments are closed, but trackbacks and pingbacks are open.