கொள்ளையடித்துவிட்டு வேறொரு பூட்டை பூட்டிச் சென்ற கொள்ளையன்
கொள்ளையடித்துவிட்டு
வேறொரு பூட்டை
பூட்டிச் சென்ற கொள்ளையன்
தொடர்ந்து சில நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து 15 பவுன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிய அடையாளம் தெரியாத கொள்ளையன் உடைக்கப்பட்ட பூட்டிற்கு பதிலாக வேறொரு பூட்டை கதவில் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த ருசிகர சம்பவம் கும்பகோணம் அருகே நடைபெற்றுள்ளது.
கும்பகோணம் அருகேயுள்ள திருவிசநல்லூரில் பெருமாள் கோவில் வடக்கு மடவளாகத்தில் வசிப்பவர் ராதாகிருஷ்ணண் (90). இவரது மனைவி பட்டம்மாள்.
இவர்கள் இருவரும் கடந்த 4-ம் தேதி திருச்சியில் வசிக்கும் மகள் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாததால் இம்மாத மின் அளவீட்டை குறிப்பதில் மின்வாரிய ஊழியருக்கு எந்தவொரு தடையும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அவரது ஏரியாவுக்கான மின் கணக்கீட்டாளரிடம் வீட்டின் முன்புற கதவின் சாவியைக் கொடுத்துச் சென்றுள்ளார் ராதாகிருஷ்ணன்.
இந்நிலையில், புதன்கிழமையன்று மின் அளவீட்டைக் குறிக்க வந்த மின்வாரிய ஊழியர் தன்னிடம் கொடுத்துள்ள சாவி வீட்டின் கதவில் பூட்டப்பட்டுள்ள பூட்டுக்கு பொருந்ததால், இதுபற்றி திருச்சியில் மகள் வீட்டிற்கு சென்றிருந்த ராதாகிருஷ்ணனை அவரது மொபைலில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகள் ஆகியோர் திருவிசநல்லூர் கிராமத்திற்கு விரைந்து வந்தனர்.
வீட்டின் கதவில் இவர்கள் பூட்டிச் சென்றிருந்த பூட்டுக்கு பதிலாக வேறொரு பூட்டு போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அப்பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அவற்றில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி ராதாகிருஷ்ணன் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கடந்த 4-ம் தேதிக்கும் 16-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், குறிப்பாக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மழை பெய்தபோது, இத்திருட்டுச் சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பொதுவாக வீட்டின் பூட்டை உடைக்கும் திருடர்கள் அப்பூட்டை தூக்கி எறிந்து விட்டுச் செல்வர். ஆனால் இங்கு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகைகளைத் திருடிய கொள்ளையன் வேறொரு பூட்டை மாட்டிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் வித்தியாசமாக உள்ளது என்கின்றனர் காவல்துறையினர்
வேறொரு பூட்டு போட்டதன் மூலம் இவ்வீட்டிற்கு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து வந்து வீட்டில் ஒவ்வொரு பகுதியாக முழுவதும் தேடி ரொம்ப சாவகாசமாக இக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.