குளித்தலை: பொதுமக்களால் பொறிவைத்து பிடிக்கப்பட்ட உண்டியல் திருடர்கள்!
குளித்தலை அருகே நள்ளிரவில் கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட குப்பாச்சிபட்டியை சேர்ந்த பிரபாகரன் வயது 23, ஊத்து பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என இருவர் கைது. தொடர் விசாரணையில் தோகைமலை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கூடலூர் பஞ்சாயத்து, சங்காயிபட்டியில் ஸ்ரீ ஜானகி அம்மன், ஸ்ரீ சேனாயி அம்மன், ஸ்ரீ விநாயகர் ஆகிய கோயில்கள் உள்ளது. இக்கோயிலில் நேற்று முந்தினம் வியாழக்கிழமை நள்ளிரவில் கோவிலில் இருந்த இரண்டு உண்டியலில் ஒரு உண்டியல் மட்டும் திருடு போனது. இந்த சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் உஷாராயினர்.
மற்றொரு உண்டியலை எடுக்க உண்டியல் திருடர்கள் வரலாம் என்பதால் ஊர் பொதுமக்கள் கண்காணிப்பில் இருந்துள்ளனர், இதனையடுத்து நேற்று இரவு மற்றொரு உண்டியலை திருட ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர், இருவரும் கோவிலில் உள்ள மற்றொரு உண்டியலை திருடிய போது கையும் களவுமாக உண்டியல் திருடர்களை பொதுமக்கள் பிடித்தனர்.
பொதுமக்கள் நையப் புடைந்து, உண்டியலுடன் இருவரையும் ஊர் பொதுமக்கள் தோகைமலை போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். தோகமலை போலீசார் நடத்திய விசாரணையில், உண்டியலை திருடன் திருடியவர்கள் குப்பாச்சிபட்டியைச் சேர்ந்த பிரபாகரன் 23, ஊத்து பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், நடத்திய தொடர் விசாரணையில், முதல் நாள் திருடிய பெரிய உண்டியலை பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை குப்பாச்சிபட்டி பகுதியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டதாகவும், மறுநாள் அதே கோயிலில் உள்ள மற்றொரு சிறிய உண்டியலை திருட சென்றபோது மாட்டிக்கொண்டதாகவும் பிரபாகரன் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குப்பாச்சி பட்டியில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்ற தோகைமலை போலீசார் உண்டியலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குளித்தலை பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் தொடர்ந்து உண்டியல்கள் திருட்டுப் போய் உள்ளது. இதற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் உண்டியல் திருடிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-நௌசாத்