கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான ஸ்ரீரங்கம் குருகுல மாணவர்கள் ! விலகாத மர்மங்கள் !!
அபாயம் நிறைந்த ஆற்றில் தண்டனையின் பெயரில் அம்மாணவர்களை இறங்கச் சொன்னது குருகுலம். இது கொலைக்குற்றத்துக்கு நிகரானது.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான ஸ்ரீரங்கம் குருகுல மாணவர்கள் ! விலகாத மர்மங்கள் !!
திருச்சி, ஸ்ரீரங்கம் ”ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுல”த்தைச் சேர்ந்த மாணவர்கள் மூவர், கடந்த மே-14 அன்று கொள்ளிடம் ஆற்று நீரில் மூழ்கி இறந்துபோன விவகாரத்தில், மடத்தின் நிறுவனரும் மாணவர்களின் இறப்புக்கு காரணமானவருமான பராசர பத்ரி நாராயண பட்டரை தப்ப விட்டிருக்கிறது ஸ்ரீரங்கம் போலீசு.
பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதோடு மட்டுமின்றி, ஸ்ரீரங்கநாதன் வகையறாவைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் தலத்தாரில் முக்கியமானவர் இந்த பராசர பத்ரி நாராயண பட்டர். திருச்சியில் பிரபலமான ஆடிட்ட ரும்கூட! இந்த சகல செல்வாக்கையும் பயன்படுத்தி தான் இவ்விவகாரத்திலிருந்து தப்ப முயன்று வருகிறார், அவர். தன்னை நம்பி, தனது குரு குலத்தை நம்பி ஒப்படைப்பு செய்த உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறைந்தபட்சம், தொலைபேசி வழியாகக்கூட ஆறுதல் சொல்ல முன் வராத, பத்ரி பட்டர் பா.ஜ.க. தயவுடனும், திமுக அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்களைத் தேடி ஒடுகிறார்.
மறைக்கப்படும் உண்மைகள்!
குருகுலத்தில் தங்கிப் பயிலும் மாணவர்களுள் அந்தக்குறிப்பிட்ட நால்வர் மட்டும் அதிகாலை நாலு மணிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு ஏன் சென்றார்கள் என்ற கேள்வியை மட்டும் திட்டமிட்டே தவிர்த்து வருகிறார்கள். குருகுல நிர்வாகிகளுக்குத் தெரியாமல் ஆர்வமிகுதியால் ஆற்றில் குளிக்கச் சென்றார்களா? இல்லை, குருகுல மாணவர்கள் ஆற்றில் குளிப்பது வழக்கமான ஒன்றுதான் எனில் ஏன் குருகுலத்தின் மற்ற மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றுக்குச் செல்லவில்லை? என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை!
ஸ்ரீரங்கம் – ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலம் என்பது அவ்வளவு தொளதொளப்பான நடைமுறையைக் கொண்ட நிர்வாகம் அல்ல! அதிகாலை மூன்று மணிக்கு எழுவது தொடங்கி இரவு உறங்கச் செல்வது வரையில் அவ்வளவு விதிமுறைகள் கட்டுப்பாடுகளைக் கொண்ட, இராணுவ நடைமுறைக்கு நிகரானது, இந்த பட்டர் குருகுலம்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் அதுவும் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பெற்றோர்கள் தம் பிள்ளைகளுடன் தொலை பேசியில் பேச முடியும். மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான், பிள்ளைகளை பெற்றோர்கள் பார்க்க முடியும். தீபாவளி; கோடை விடுமுறை என ஆண்டொன்றுக்கு 22 நாட்கள்தான் மாணவர்கள் குருகுலத்தை விட்டு பெற்றோர்களுடன் வீட்டில் தங்க முடியும். இவ்வளவுக் கட்டுப்பாடுகளையும் கடுமை யான பயிற்சிமுறைகளையும் கொண்ட, குருகுலத்திலிருந்து அவ்வளவு எளிதாக கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்கச் சென்றுவிட முடியுமா என்ன?
குருகுலத்தில் நடந்ததே வேறு !
”என் மகன் ஹரி பிரசாத்தையும் என் தம்பி பையன் விஷ்ணு பிரசாத்தையும் ஒன்னாதான் இந்த குருகுலத்துல சேர்த்தோம். நாலு வருஷமாக இருக்காங்க. பத்து பதினைஞ்சி நாளுக்கு முன்ன, என் தம்பி மகன் விஷ்ணு பிரசாத் பாடம் நடத்திட்டு இருக்கப்போ ஏதோ பசங்களுக்குள்ள தண்ணிய தெளிச்சி விளையாடியிருக்காங்க. அந்த தப்புக்கு தண்டனையா டெய்லி காத்தால கொள்ளிடக்கரைக்கு போயி குளிச்சிட்டு குடம் தண்ணி எடுத்தாந்து, குருகுலத்துல இருக்க துளசி செடிக்கு ஊத்தனும்னு சொல்லியிருக்காங்க. அதுமட்டுமில்ல மூனு வேளையும் உப்பில்லாத தயிர் சாப்பாடுதான் சாப்பிடனுங்கிறது அடுத்த தண்டனை.
இத அவங்க அம்மாகிட்ட சொல்லி அழுது இருக்கான். என் தம்பி மனைவியும் குருகுல நிர்வாகத்திற்கு போன் பண்ணி, ஆத்துக்கு எல்லாம் அனுப்ப வேண்டாம். பையனுக்கு நீச்சல் தெரியாது. குருகுலத்துக்குள்ளேயே வச்சி என்ன தண்டனை வேணா கொடுத்துக்கோங்க. ஆத்துக்கு மட்டும் அனுப்பாதீங்கனு சொல்லியிருக்காங்க. நாங்க சொன்னதையும் மீறி அவங்க அதே தண்டனையை தொடரத தெரிஞ்சி திரும்பவும் சொன்னோம். கூட பாதுகாப்புக்கு ரெண்டு ஆள போட்டுதான் அனுப்பறோம். நாங்க பாத்துக்கறோம்னாங்க. திரும்ப நானும் பேசினேன். “வேணும்னா ஆளுக்கு ஒரு இலட்சம் நஷ்டஈடு கொடுத்துட்டு உங்க புள்ளைங்கள கூட்டிட்டு போங்கனு” கோவமா சொன்னாரு பத்ரிபட்டர். கடைசியில எங்க புள்ளங்கள தொலைச்சிட்டு பொணமா தான் எடுத்துட்டு போனோம்” என்கிறார், ஹரிபிரசாத்தை பறிகொடுத்த தகப்பனார் சம்பத்.
அதாவது, தப்புக்குத் தண்டனையை அனுபவித்தவர்கள் விஷ்ணு பிரசாத்தும், அபிராமும். அவர்கள் தண்டனையை மேற்பார்வையிடும் பொறுப்பு மற்றும் “பாதுகாவலர்”களாக உடன் சென்றவர்கள் ஹரிபிரசாத்தும், கோபாலகிருஷ்ணனும். ஆபத்து நிறைந்த ஆற்றில் இறங்கும் தண்டனை பதிமூனு வயசு பையனுக்கு! அவனை ஆற்று நீர் அடித்துச் செல்லாமல் பாதுகாக்கும் பொறுப்பு பதினாலு வயசு பையனுக்கு!! ”ஜெயில விட மோசமாதான் நடத்துவாங்க சார். கக்கூஸ் கழுவச் சொல்வாங்க.. எனக்கு தெரிஞ்சி சமீபத்துல ஒரு பையனோட கைய உடச்சிட்டாங்கனு பிரச்சினையாச்சு.” என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஒருவர்.
பட்டரை பாதுகாக்கும் போலீசார்
”என் மகன் சாவுக்கு குருகுலமும் பத்ரி பட்டரும் தான் காரணம்னு கம்ப்ளைண்ட் எழுதிட்டு போனேன். வாங்க மாட்டேன் னுட்டாரு. நேத்து என் தம்பி எழுதி கொடுத்த மாதிரியே என்னையும் எழுதி கொடுனு கேட்டாரு. மகனை இழந்த துக்கத்துல என் தம்பி அவங்களே எழுதுன மனுவுல கையெழுத்த போட்டு பாடிய வாங்கிட்டு போயிட்டான். விசயம் தெரிஞ்சுட்டு நானும் அப்படி போக முடியுமா? வக்கீலையும் கூட்டிட்டு போயிட்டு பேசினோம். கடைசி வரைக்கும் ஒத்துக்கல. நாங்க 304 (மிமி) சட்டப்பிரிவில வழக்கு போடனும்னு கேட்டோம். அப்போதான் சடலத்தை வாங்குவேனு நின்னேன். 174 தான் போடுவோம்னாரு. அப்புறம் 304 (ஏ) ல தான் போட முடியும்னாங்க. அந்த இன்ஸ்பெக்டர் எங்கள ஒரு மனுசனாகூட மதிக்கல. என்னமோ அக்யூஷ்டுகிட்ட நடந்துகிற மாதிரியேதான் நடந்துகிட்டாரு.” என்கிறார், சம்பத்.
”அவர் சொல்ற மாதிரி செய்யலைன்னா, கோர்ட்ல பார்த்துக்கோங்கனு சொல்றாரு. கொடுக்கிற புகார வாங்கி அது உண்மையா பொய்யானு விசாரணை செய்வதுதானே இவரது கடமை. அதைவிட்டு, இப்படித்தான் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திப்பதற்கும், முடியாதுனா கோர்ட்டுக்கு போ-ன்னு சொல்றதுக்கும் எதுக்கு சார் போலீஸ் ஸ்டேஷன். கோர்ட்டே போதுமே?.” என்கிறார், சம்பத் சார்பாக இந்த விவகாரங்களை கையாண்டு வரும் வழக்கறிஞர் ஆனந்தராஜா. ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதனை, தொலை பேசியில் தொடர்பு கொண்டாம். ”முதலில் 174 போட்டோம். அப்புறம் அவங்க சொன்ன மாதிரி 304 (ஏ) ல செக்சன் ஆல்ட்டரேஷன் செஞ்சி கொடுத்திட்டேன். இதோட என் வேலை முடிஞ்சது. ஏ.சி. மேடம் நேரடி விசாரணையில் இருக்கு. கமிஷனரே இரண்டுமுறை ஸ்பாட் விசிட் பன்னிட்டாங்க. கலெக்டர், ஆர்.டி.ஓ. வும் விசாரிச்சிருக்காங்க.” என்றார். ”பட்டர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை” என்ற ஒற்றைக் கேள்விக்கு கடைசிவரை பதிலில்லை.
அப்பன் குதிருக்குள் இல்லை! பத்ரிபட்டர் ஸ்ரீரங்கம் வீட்டில் இல்லை!!
பெற்ற மகனை பிணமாக வேனும் பார்த்துவிட முடியாதா? என்ற ஏக்கத்தோடு கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் பெற்றோர்கள் காத்துக்கிடந்த வேளையில்தான், அவசரம் அவசரமாக கையில் திருநீரோடு அமைச்சர் நேருவை அவரது இல்லத்திற்கே சென்று சந்திக்கிறார், பத்ரி நாராயண பட்டர். ”சிறுவர்களின் உடலை மீட்க கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததற்காக நன்றி சொல்ல வந்தார்.” என அமைச்சர் தரப்பிலிருந்து விளக்கமளித்திருக்கிறார்கள்.
பட்டர் ஏன், ஆற்றில் இறங்கித் தேட வரவில்லை என்பதல்ல நம் வாதம். குறைந்தபட்சம், மாணவர்களின் பெற்றோர்களிடம் முகம் கொடுத்து பேசக்கூட அஞ்சி ஓடி ஒளிய வேண்டிய அவசியம் என்ன என்பதே நம் முன் உள்ள கேள்வி! ” அரசின் பொறுப்பின்மையால் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கோவையில் இருந்துகொண்டே, கோரிக்கை வைக்கிறார் வானதி சீனிவாசன். மாணவர்கள் இறப்பில், பட்டரின் பாத்திரம் குறித்துப் பேசாமல் இழப்பீட்டுத் தொகையைப் பற்றி பேசி மடைமாற்றும் வேலையை செய்திருக்கிறார், வானதி சீனிவாசன். ஏறத்தாழ, இதே கருத்தை வலியுறுத்தி அ.ம.மு.க. பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனிடமிருந்தும் அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. இதே பாணியில் தினமலரும் செய்தி வெளியிட்டது.
காசு பணம் வேணாம். நீதிதான் வேணும் !
- ஸ்ரீரங்கம் ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலத்தின் அலட்சியம் அல்ல; அபாயம் நிறைந்த ஆற்றில் தண்டனையின் பெயரில் அம்மாணவர்களை இறங்கச் சொன்னது குருகுலம். இது கொலைக்குற்றத்துக்கு நிகரானது. கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். தலைமறைவாக உள்ள பட்டரை கைது செய்ய வேண்டும்.
- வழக்கின் தொடக்க நிலையிலேயே, குரு குலத்தையும் பட்டரையும் பாதுகாக்கும் நோக்கில், அரசு அதிகாரத்தைக் முறைகேடாக பயன்படுத்திய இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் உள்ளிட்ட அதிகாரிகளை துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
- இவ்வழக்கின் நேரடி சாட்சியமாக, தப்பிப் பிழைத்த பாலகன் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். யாருடைய நிர்ப்பந்தமும் அச்சுறுத்தலும் இல்லாமல் சுதந்திரமாக அக்குழந்தை உண்மையை பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.
- உண்டு உறைவிடப் பள்ளியாகவும் குருகுல மாகவும் செயல்பட்டுவரும் இந்நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள், விதிமீறல்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்பதுதான், இறந்து போன மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பிலிருந்தும் இப்பிரச்சினையை கூர்ந்து நோக்கிவரும் சமூக ஆர்வலர்களும் முன்வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது. ”காசு பணம் வேணாம். நீதிதான் வேணும். அப்பொழுதுதான் என் பிள்ளைகள் ஆத்மா சாந்தியடையும்” என்கிறார், சம்பத். அவர்கள் கோருவது தம் பிள்ளைகளின் மரணத்துக்கான நீதி.
– இளங்கதிர்.