ஃபாலோ அப் : பையனுக்கு பீஸ் கட்டிட்டா போதுமா? குடும்பத்துக்கு யாரு கஞ்சி ஊத்துறது?

0

”கல்விப்பணியின் வழியே சமூகத்தை நேசிக்கும் அரசு அதிகாரி – சிவயோகம் !!” என்ற தலைப்பில், கடந்த மே-16 அன்று நமது அங்குசம் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், வட்டார வள மைய அதிகாரியான சிவயோகம் அவர்களது மனநிறைவான பணி குறித்து விவரிக்கையில் பதினோராம் வகுப்பில் இடைநின்ற சதீஸ்வரன் என்ற மாணவனை மீண்டும் படிக்கவைத்த சம்பவத்தை குறிப்பிட்டிருந்தார்.

இடைநின்ற அப்படிப்பை முடிக்கும் வரையிலான கால கட்டத்தில் அக்குடும்பத்திற்கு மாதந்தோறும் மூன்றாயிரம் ரூபாய் நிதிஉதவியும் சகபணியாளர்களிடமிருந்து திரட்டி கொடுத்து வந்திருந்தார் என்பதையும் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில், அடுத்தடுத்து பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு இரண்டிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார் சதீஸ்வரன். பன்னிரெண்டாம் வகுப்பில் அவர் எடுத்த மதிப்பெண் 258. இடைநிற்றல் மற்றும் ஒரே முயற்சியில் அடுத்தடுத்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வை எதிர்கொண்ட சதீஸ்குமார் 258 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதே பெரிய விசயம்தான்.

சதீஸ்வரன்
சதீஸ்வரன்

சதீஸ்குமாரின் நிலையறிய, அவரது குடும்பத்தினரை தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவர்களது பேச்சில் ஆர்வமின்மை வெளிப்பட்டது. அவரது ஊர்க்காரர்களிடம் விசாரித்தோம்.

”பையன காலேஜ்ல சேர்த்துவிட்ருவாங்களோனு பயப்படுறாங்க சார். பையனை பீஸ் கட்டி படிக்க வச்சிட்டா மட்டும் போதுமா? பையன் படிச்சு முடிச்சு வர்ற மூனு வருஷத்துக்கு எங்க குடும்பத்துக்கு சோறு யாரு போடுவா?னு கேட்குறாங்க. அந்த அம்மாவுக்கு கையிலிருந்து முழங்கால் வரைக்கும் கடுமையான தோல் வியாதி. பார்க்கவே அறுவெறுப்பா இருக்கும். அதனாலேயே அந்த அம்மாவுக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டாங்க. சித்தாள் வேலைக்குதான் போயிட்டு இருக்காங்க. அதுவும் ரெகுலராலா இருக்காது. இந்த பையனுக்கு கீழே இன்னும் மூனு பசங்க இருக்காங்க. இப்போ இருக்க நிலைமைக்கு இந்த பையன் வேலைக்கு போனா மட்டும்தான் சார் அந்த குடும்பம் பொங்கி திங்கும்… ” என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத அவரது உறவினர்.

இந்த விசயத்தில் நாம் யாரை குறைபட்டுக்கொள்வது? படிக்கும் ஆசையிருந்தும் குடும்பச்சூழல் காரணமாக படிப்பைத் தொடரமுடியாத சதீஸ்வரனின் துர்பாக்கிய நிலையை கண்டு மனம் வருந்துவதா? பையனை படிக்க வைக்காமல் வேலைக்கு அனுப்பத் துடிக்கும் தாய் என்று கோபம் கொள்வதா? பையனுக்கு பீஸ் கட்டி படிக்க வைப்பதே பெரிய விசயம். இதில் அவர்கள் குடும்பச் செலவுக்கும் சேர்த்து பணம் கொடுப்பதென்பது நிச்சயம் நம்மால் சாத்தியமற்றது.

அறந்தாங்கி அருகே அரசு கல்லூரியில் அம்மாணவரை சேர்ப்பதற்கும், முடிந்தவரை அக்குடும்பத்திற்கு மாதாந்திர உதவித்தொகையாக சிறு பங்களிப்பை வழங்குவதற்குரிய ஏற்பாடுளையும் செய்துவருவதாகவும் சதீஸ்குமாரின் நிலை குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டு மாவட்ட ஆட்சியர் வரையில் அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார், வட்டார வள மைய அதிகாரி சிவமயம்.

கல்வி இடைநிற்றல் என்பது இவ்வாறு சமூகக்காரணிகளோடு பிணைந்ததாகத்தான் இருக்கிறது. அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றும் சிவமயம் போன்ற அரசு அதிகாரிகள் முன்நிற்கும் சவாலும் இதுதான். சதீஸ்வரன் குடும்பத்தின் வயிற்றுப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அவனது கல்வி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது.

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.  

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.