கல்விப்பணியின் வழியே சமூகத்தை நேசிக்கும் அரசு அதிகாரி – சிவயோகம் !!

0

வட்டார வள மையமும் … கல்விப்பணியும் …  என்னிரு கண்களாகும் …!!!

___________________________________________

ல்வித் துறை சார்ந்த ஒரு வட்டார வள மையத்தினை ஒரு அழகிய பூங்காவனம் போல வடிவமைத்து வைத்துள்ளார் அதன் (பொறுப்பு) மேற்பார்வையாளர். அவர் தான் புதுக்கோட்டை மாவட்டத்தின் மணமேல்குடி வட்டார வள மையத்தின் (பொறுப்பு) மேற்பார்வையாளர் சிவயோகம். கல்லூரிப் படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை இரசாயனம் படித்துத் தேர்ச்சி பெற்றவர். அழகப்பா பல்கலையில் பி.எட்., எனப்படும் ஆசிரியர் பயிற்சி கல்வி பயின்று தேறியவர். எம்.பில்., பயின்றவர். “படிப்பின் மீதான தீராத ஆர்வமா அல்லது தீராத காதலா எனச் சொல்லத் தெரியவில்லை, அஞ்சல் வழிக் கல்வியில் முதுகலை தமிழ் மற்றும் முதுகலை பொருளாதாரம் ஆகியனவும் கற்றுத் தேர்ந்தேன்” என்கிறார் அவர்.

♦  “வட்டார வள மையப் பணிகளில் எப்போது சேர்ந்தீர்கள்?”
- Advertisement -

- Advertisement -

சிவயோகம்
சிவயோகம்

“புதுக்கோட்டை மாவட்டத்தில் பதின்மூன்று வட்டார வள மையங்கள் இயங்கி வருகின்றன. 2௦௦6-இல் முதன்முதலாக நான், அன்னவாசல் வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுநர் ஆகப் பணியில் அமர்த்தப்பட்டேன். அதுவே எனக்கு ரொம்பவும் சந்தோசமாகி விட்டது. காரணம், ஆசிரியர் பயிற்சிக் கல்வியில் தேர்ச்சி பெற்ற எனக்கு, ஆசிரியர்களுக்கு பயிற்றுநராக பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது தான். அதன் பின்னர் 2௦௦7 முதல் 2014  வரை மணமேல்குடி வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணி புரிந்தேன். 2014-இல் அறந்தாங்கி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநராகப் பணியாற்றினேன். 2018-இல் அதே மையத்தில் (பொறுப்பு) மேற்பார்வையாளராகப் பணியில் உயர்வு பெற்றேன். 2௦21-இல் மணமேல்குடி வட்டார வள மைய (பொறுப்பு) மேற்பார்வையாளராகப் பணியிட மாறுதல் பெற்று வந்தேன்.”

♦  “வட்டார வள மைய மேற்பார்வையாளராக உங்களின் பணிகள்தான் என்னென்ன?”

“வட்டார வள மையத்துக்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம், கல்வி வளர்ச்சி, மாணவ மாணவியர்கள் ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் இடையே பாலமாக இருந்து அந்த முத்தரப்புக்கும் வழி காட்டுவது. அவர்களுக்கு  ஆலோசனைகள்  கூறுவது. கல்விப் பணிகள் சார்ந்து பள்ளிக் கல்வித் துறை கொண்டு வரும் சீரிய திட்டங்களைச் செயல்படுத்துதல். புதிய பாரதம் எழுத்தறிவித்தல், இல்லம் தேடிக் கல்வி போன்றவைகளை நடைமுறைப்படுத்துதல். எல்லாவற்றையும் விட குடும்பச் சூழ்நிலைகளால் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு பள்ளிகளில் இடைநின்று விடும் பிள்ளைகளைத் தேடிக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தல். குறிப்பிட்ட இந்தப் பணியானது எனக்கு மிகவும் ஆத்ம திருப்தி தரக் கூடிய செயல் ஆகும்.”

4 bismi svs
♦  “கிராம சபைக் கூட்டங்களில் கூட பங்கேற்கிறீர்கள். கல்வித் துறை சார்ந்து ஒரு வட்டார வள மைய (பொறுப்பு)  மேற்பார்வையாளருக்கு அங்கு என்ன வேலை?”

“என்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஒரு கிராம வளர்ச்சி என்பது, அந்த கிராமத்தில் இருக்கும் அந்தப் பள்ளியின் வளர்ச்சியிலும் பங்கு உண்டு தானே? கிராம சபைக் கூட்டங்களில் அந்தக் கிராமத்துப் பள்ளிக்கு இன்னும் என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஊராட்சி மன்றத்தினர் பார்வைக்கு கொண்டு செல்லலாம் அல்லவா? அவைகளைத் தான் கிராம சபைக் கூட்டங்களில் அந்தப் பள்ளிகளின் சார்பாகக் கோரிக்கைகளாக வைக்கிறேன். பள்ளி வேறு கிராமம் வேறு என்று பிரித்துப் பார்த்திடல் கூடாது.”

கிராம சபைக் கூட்டத்தில் சிவயோகம்
கிராம சபைக் கூட்டத்தில் சிவயோகம்

“மாணவ மாணவியர்க்கான அறிவியல் அரங்குகள், கலைத்திறன் வளர்த்தல், விளையாட்டுகளில் ஆர்வமுடன் அவர்களை ஈடுபடுத்துதல், கல்வி கற்கும் திறனில் மாணவ மாணவியரை ஊக்கப்படுத்துதல் போன்ற இன்னும் பலப்பல  செயல்பாடுகளைத் தொய்வின்றி கொண்டு செலுத்துகிறோம். இவைகள் எல்லாமே என் ஒரு நபரால் மட்டுமே நிகழ்த்தி விட முடியாது. நான் ஒரு ஊக்கப் புள்ளி மட்டும் தான். இந்த வட்டார வள மையத்தின் பணியாளர்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு மற்றும் அவர்களின் தொடர் செயல்பாடுகளால் தான் இன்று வரை நடைமுறையில் சாத்தியமாகி வருகிறது. மேலும் வட்டார வள மையமும் கல்விப் பணியும் என்னிரு கண்கள் போன்றவைகள் என்கிற உணர்வு எனக்கு எப்போதும்  உண்டு.”

♦  “சமீபத்தில் அதாவது கடந்த கல்வியாண்டில் உங்களுக்கு மன நிறைவு தந்த செயல்பாடு என்ன?”
சதீஸ்வரன்
சதீஸ்வரன்

“கடந்த கல்வியாண்டில் மட்டும் பள்ளிகளில் இடைநின்ற பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களில் ஐம்பத்தியாறு பிள்ளைகளை மீண்டும் பள்ளிகளில் கொண்டு வந்து சேர்த்துள்ளோம். ஒரே பள்ளியில் மட்டும் பதினேழு பிள்ளைகளைக் கொண்டு வந்து சேர்த்து அவர்களைப் படிக்க வைத்துள்ளோம். இடைநின்று எங்களால் மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்ட சதீஸ்வரன் என்பவன் மிகவும் முக்கியமானவன். காரணம், அவனது குடும்பச் சூழல். அவன் ஜெகதாபட்டினம் அருகே செல்லநேந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவன். பதினோராம் வகுப்பில் பாதியோடு நின்று விட்டான். பள்ளிக்கு வரவே இல்லை. நாங்கள் அவனைத் தேடிக் கண்டுபிடித்தோம். ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனது அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும் தான். அவனுக்குக் கீழே மூணு பிள்ளைகள் வீட்டில். அம்மாவுக்கு கைகளில் கடுமையான தோல்நோய் பிரச்னை. அவனது அம்மா எங்கும் வேலைக்குப் போய்வர இயலாது. அவர்களை யாரும் வேலைக்கும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். இந்நிலையில்தான் சதீஸ்வரன் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு, பெட்ரோல் பங்க்கில் வேலைக்குப் போய்விட்டான்.

நாங்கள் அவனது அம்மாவிடம் பேசினோம். படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தோம். அது மட்டும் போதுமா என்ன? அவனது வீட்டுக்கு எங்களின் வட்டார வள மையப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் ஆளாளுக்குக் கொஞ்சம் பணம் சேர்த்து மாதாமாதம் மூவாயிரம் ரூபாய் தருவதாக உறுதியளித்தோம். அதன்படி பணம் தந்தும் வந்தோம். சதீஸ்வரனை கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்  பள்ளியில் சேர்த்து விட்டோம். புத்தகங்கள், மிதிவண்டி பெற்றுத் தந்தோம். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் பிளஸ் ஒன் தேர்வும், பிளஸ் டூ தேர்வும் எழுதி இரண்டிலுமே தேர்ச்சி பெற்று விட்டான் சதீஸ்வரன். இப்போது அவனது மேற்படிப்புக்கும், அவனது குடும்பத்துக்கும் பொருளாதார ரீதியாக யாரேனும் உதவினால் அவனுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.” எனக் கூறுகிறார் மணமேல்குடி வட்டார வள மைய (பொறுப்பு) மேற்பார்வையாளர் சிவயோகம்.

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.         

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.