தொட்டியம் ஸ்ரீ மதுரைகாளியம்மன் கோவில் பங்குனித்தேர் திருவிழா ! உஷார் நிலையில் திருச்சி போலீசார் !
தமிழ் மாதமான பங்குனியின் சிறப்பே, கோயில் திருவிழாக்கள்தான். தமிழகத்தின் பிரசித்திபெற்ற திருக்கோயில்கள் பலவற்றிலும் பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளும் தேர் திருவிழாக்களும் பங்குனி மாதத்தில்தான் பிரதானமாக நடைபெறும்.
திருச்சி மாவட்டத்தை பொருத்தமட்டில், ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், சமயபுரம், வயலூர் என தமிழகம் தழுவிய அளவில் பிரசித்த பெற்ற திருக்கோயில்களை கணிசமாக கொண்ட ஒரு மாவட்டம் என்றே சொல்லலாம். சமீபத்தில்தான், எந்தவிதமான சர்ச்சைகளுக்கும் இடமளிக்காத வகையில் சமயபுரம் பூச்சொரிதல் விழாவை நடத்தி காட்டியிருக்கிறார்கள், திருச்சி மாவட்ட போலீசார்.

அதன் வரிசையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டியம் ஸ்ரீ மதுரை காளியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினத்தின் ஆலோசனையின் பேரில், போலீசார் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட போலீசார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த செய்திக் குறிப்பில், “தொட்டியம் ஸ்ரீ மதுரை காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித்தேர் பெருந்திருவிழா இந்த ஆண்டு 01.04.2025 முதல் 08.04.2025 வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பெரியதேர் மற்றும் சிறியதேர் என இரு தேர்கள் மதுரை காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மூன்று சுற்றுகளாக தொட்டியம் பகுதிகளில் உள்ள முக்கிய தேரோடும் வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று மீண்டும் கோவிலை வந்தடையும். இத்திருவிழாவில் தொட்டியம் மற்றும் அதை சுற்றியுள்ள 48 கிராம பொதுமக்கள், பக்தர்கள் என திருவிழா முடியும் வரை தினசரி சுமார் 50000 பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பாக, மேற்படி திருவிழாவில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தேர்திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், அதிரடி சிறப்பு தனிப்படைகள், மதுவிலக்கு அமலாக்க சிறப்பு தனிப்படைகள், குற்றத்தடுப்பு சிறப்பு தனிப்படைகள், வெடிபொருட்கள் கண்டறியும் சிறப்பு தனிப்படைகள் அமைத்து, அதில் காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளினர்கள் வரை சுமார் 1020 காவல்துறையினர் மற்றும் 280 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் மதுரைகாளியம்மன் கோவில் முக்கிய சாலை சந்திப்புகள், தேரோடும் வீதிகள் ஆகிய பகுதிகளில் 125-அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள், 5 ட்ரோன் கேமராக்கள், 10 – அதி நவீன தொலைநோக்கியுடன் கூடிய கண்காணிப்பு கோபுரங்கள், தேரை சுற்றி வீடியோ பதிவு செய்யும் 5 அதி நவீன கேமராக்கள், வருண் மற்றும் வஜ்ரா வாகனங்கள் ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.” என்பதாக, அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.