துறையூர் பச்சைமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் கேட்ட எம்.எல்.ஏ. ! ஷாக் கொடுத்த அமைச்சர் !
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், துறையூர் பச்சைமலை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் மணலோடை பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ”சட்டப்பேரவை உறுப்பினர் கூறுவது போல அங்கு 30 கிராமங்கள் இல்லை.” என்றும், “ஒன்றிய அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சாத்தியமில்லை” என்பதாகவும் பதிலளித்திருந்தார். சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த விவாதம் துறையூர் பகுதி மலைவாழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1300 அடி உயரத்தில் 34 மலை கிராமங்கள் அமைந்துள்ளன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் புள்ளிவிவரங்களின் படியே, மேற்படி மலை பகுதியில் வண்ணாடு மற்றும் கோம்பை ஆகிய இரு ஊராட்சிகள் செயல்படுகின்றன.
வண்ணாடு ஊராட்சியில் 21 கிராமங்கள் இருக்கின்றன. மொத்த மக்கள் தொகை 4191. கோம்பை ஊராட்சியில் 13 கிராமங்கள் இருக்கின்றன. இதன் மக்கள் தொகை 2418. இந்த இரண்டு ஊராட்சிகளிலும் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், பெரிய இலுப்பூர், செம்புளிச்சாம்பட்டி, கிணத்தூர் ஆகிய கிராமங்களில் துணை சுகாதார நிலையங்கள் அமைந்திருக்கின்றன.
சுமார் 20 கி.மீ. தொலைவில், செங்காட்டுப்பட்டியில்தான் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. துணை சுகாதார நிலையம் என்பது, செங்காட்டுப்பட்டியிலிருந்து பகுதி நேர அடிப்படையில் செவிலியர்கள் வருகை புரிவார்கள். குறிப்பிட்ட நேரம் இருப்பார்கள். குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவது; காய்ச்சல், தலைவலிக்கு மாத்திரை கொடுப்பது; அதிகபட்சமாக காய்ச்சலுக்கு செவிலியரே ஊசி போடுவது என்ற அளவில்தான் இந்த சேவையும் கிடைக்கிறது. மற்றபடி, மேற்படி 34 மலை கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தீவிர காய்ச்சல், பிரசவம், பாம்புக்கடி போன்ற அடிப்படையான மருத்துவ தேவைக்கும் கூட செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தைதான் நாட வேண்டும்.

செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் வழக்கமான நோயாளிகளை கவனிக்கவே போதிய கட்டமைப்பு இல்லாத சூழலில், மலை கிராமங்களிலிருந்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்துவிட்டு, துறையூர் மருத்துவமனைக்குத்தான் அனுப்பி வைக்கிறார்கள் என்கிறார்கள். குறிப்பாக, மலைவாழ் மக்கள் என்பதால் பாம்புக்கடிக்கு ஆளாக நேரும் அபாயத்தை எந்நேரமும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற ஆத்திர அவசரத்திற்குக்கூட, 35 கி.மீ. பயணித்து துறையூருக்குத்தான் சென்றாக வேண்டும். இங்கே கவனிக்கத்தக்க இன்னொரு விசயம், இவையனைத்தும் மலை கிராமங்கள். கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாங்கான பாதைகள். நகரத்தில் இருப்பதை போல, எல்லோரது வீட்டிலும் இருசக்கர வாகனங்களையும் கார்களையும் நிறுத்தி வைத்திருப்பதில்லை. 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேரவே, எப்படியும் ஒரு மணி நேரம் ஆகிவிடும்.
இந்த பின்புலத்திலிருந்துதான், மேற்படி 34 மலை கிராம மக்களும் பயன்பெறும் வகையில், ”ஏற்கனவே சுகாதாரத் துறை மருத்துவ துணை இயக்குனர் மூலம் பச்சமலை மணலோடை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பச்சமலையில் உள்ள வண்ணாடு மற்றும் கோம்பை ஊராட்சி பகுதிகளுக்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று திமுக ஆட்சிக்கு வந்ததும் செய்து தருவதாக முதல்வரும், துணை முதல்வரும் அப்பகுதி மக்களிடம் உறுதி கூறியுள்ளனர். நானும் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் இது குறித்து கோரிக்கையாக வழங்கியுள்ளேன். ஆகையால் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் பழங்குடியின மக்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றித்தர வேண்டும்” என்பதாக கோரிக்கையை சட்டப்பேரவையில் முன்வைத்திருந்தார், எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், மேற்படி இரு ஊராட்சிகளிலும் 8 கிராமங்கள்தான் இருக்கின்றன என்று அளித்த தகவல் பிழையானது. கோம்பையில் 13 கிராமங்கள் இருக்கின்றன என்பதை அந்த ஊராட்சியின் செயலர் முத்துக்குமாரும், வண்ணாடு ஊராட்சியில் 21 கிராமங்கள் இருக்கின்றன என்பதை முன்னாள் ஊராட்சி செயலர் நீலமேகமும் உறுதிபடுத்துகிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அடுத்து மக்கள் தொகை அடிப்படையிலான கணக்கீட்டை சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, ஓரிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றால், சமதளப்பகுதி எனில், 30,000 மக்கள் தொகையும்; அதுவே, மலை கிராமம் என்றால், 20,000 மக்கள் தொகையும் இருக்க வேண்டும் என்பது, ஒன்றிய அரசின் விதி. இந்த கணக்கீட்டின்படி, ஆரம்ப சுகாதார நிலையம் அமைய வாய்ப்பில்லை என்ற தகவலை பதிவு செய்திருக்கிறார், சுகாதாரத்துறை அமைச்சர்.
இதன்படி பார்த்தால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் புள்ளிவிவரங்களின் படியே இந்த இரண்டு ஊராட்சிகளிலும் வசிக்கும் மொத்த மக்கள் தொகையே வெறும் 6500 தான். இந்த கணக்கீட்டின்படியும், ஒன்றிய அரசின் விதியின்படியும் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைய வாய்ப்பில்லை என்பதை மறுப்பதற்கில்லை.

அதேசமயம், மலைவாழ் மக்களின் தனிச்சிறப்பான வாழ்க்கை சூழலையும் அப்பகுதியின் தகவமைப்பையும் கருத்திற் கொண்டு, அப்பகுதி மக்களின் மருத்துவ தேவைக்கான பொருத்தமான ஏற்பாட்டை தமிழக அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே கோரிக்கையாக அமைந்திருக்கிறது.
புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைய, ஒன்றிய அரசின் விதி இடம் தரவில்லை என்றாலும்கூட, குறைந்தபட்சம் மணலோடை பகுதியில் துணை சுகாதார நிலையத்தையாவது ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அம்மக்களின் கோரிக்கை. அதுவும், வழக்கமான துணை சுகாதார நிலையமாக அல்லாமல், பாம்புக்கடி உள்ளிட்டு அவசரத் தேவைக்கு எளிதில் அணுகும் வகையில், 24 மணி நேரமும் அரசு மருத்துவர் மற்றும் குறைந்தபட்சம் ஒரு செவிலியர் பணியாற்றும் வகையில் அதனை மேம்படுத்தித் தர வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள். நிறைவேற்றித்தருமா, அரசு?
— ஜோஷ்.