நீதிமன்றத்தை ஏமாற்றிய வங்கி அதிகாரிக்கு சிறை தண்டனை !
நீதிமன்றத்தை ஏமாற்றிய வங்கி அதிகாரிக்கு சிறை தண்டனை !
நீதிமன்றத்தில் தவறான மற்றும் முரண்பட்ட தகவல்களை வழங்கிய கோடக் மகிந்திரா வங்கி நிர்வாகத்துக்கு அபராதமும் வங்கி நிர்வாகிக்கு மூன்று மாத சிறை தண்டனையும் விதித்திருக்கிறது, சென்னை பெருநகர தலைமை நீதிமன்றம்.
சென்னை சி.ஐ.டி.நகரை சேர்ந்தவர் செல்வராஜ். கோடக் மகிந்திரா வங்கியில் கடந்த 2006 ஆம் ஆண்டு 1.5 கோடி கடன் பெற்றிருக்கிறார். வாங்கிய கடனை வட்டியுடன் கடன் காலத்துக்கு முன்னதாகவே, கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச்-28 அன்று 1.70 கோடி ரூபாய் செலுத்தியுமிருக்கிறார். வட்டியுடன் கடன் தொகையை செலுத்தியும், அவருக்கு தடையில்லாச் சான்று வழங்க மறுத்திருக்கிறது, கோடக் மகிந்திரா வங்கி நிர்வாகம்.
இந்நிலையில், கடனை திருப்பி செலுத்தியதிலும் கூடுதலாக தொகை வசூலிக்கப்பட்டிருப்பது மற்றும் கடன் தொகை செலுத்தியும் தடையில்லா சான்று வழங்காதது ஆகியவற்றுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012, 2013 இல் அடுத்தடுத்து இரண்டு வழக்குகளை தொடுத்தார் செல்வராஜ்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு வழக்கில் “கூடுதல் பணம் வசூலிக்கவில்லை” என்பதாக கோடக் மகிந்திரா வங்கியின் சட்டப்பிரிவு மேலாளர் கார்த்திக்கேயன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதே நீதிமன்றத்தில் நடைபெற்ற மற்றொரு வழக்கில், “செல்வராஜிடம் இருந்து கூடுதலாக 1.70 கோடியில் கடனுக்கு வரவு வைத்தது போக, ரூ.14.30 இலட்சம் திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாக” அதே வங்கியின் சாரல் ஆட்டோ கடன்பிரிவு துணைத்தலைவர் எழிலரசன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து, ஒரே வழக்கில் கோடக் மகிந்திரா வங்கியின் இரு அதிகாரிகள் மாறுபட்ட தகவல்களை பதிவு செய்திருப்பதையறிந்து, நீதிமன்றத்தை ஏமாற்றும் நோக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, உயர்நீதிமன்ற துணைப்பதிவாளருக்கு உத்திரவிட்டிருந்தார் நீதிபதி அனிதா சுமந்த்.
இந்த பின்னணியில்தான், உயர்நீதிமன்ற துணைப்பதிவாளர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், கோடக் மகிந்திரா வங்கியின் துணைத்தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிபதி என்.கோதண்டராஜ், “தெரிந்தே நீதிமன்றத்தில் தவறான தகவலை வழங்கிய வங்கி நிர்வாகத்துக்கு 1.5 இலட்சம் அபராதமும்; சட்டப்பிரிவு மேலாளர் கார்த்திக்கேயனுக்கு 3 மாத சிறை தண்டனையும் 10,000 அபராதமும்” விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
ஏற்கெனவே, கடனை திருப்பி செலுத்தியும் தடையில்லா சான்று மற்றும் அடமான பத்திரங்களை வழங்க மறுத்த கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாரித்துரை என்பவர் வீட்டுக்கே சென்று ஆவணங்களை வழங்க வேண்டும்; வங்கி மேலாளர் தனது சொந்த சம்பளப் பணத்திலிருந்து 25,000 வழங்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, இங்கே குறிப்பிடத்தக்கது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கேள்வி கேட்பாரற்று வாடிக்கையாளர்களிடம் அடாவடியாக நடந்து கொள்ளும் இதுபோன்ற வங்கிக்கு எதிராக, பலரும் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், நீதிமன்றங்களும் உரிய அக்கறை செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. இனியாவது, வங்கிகள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளுமா?
— அங்குசம் புலனாய்வுக்குழு.