போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வசூல் வேட்டை நடத்திய ஆசாமி அதிரடி கைது ?
திருச்சி மாவட்டம் துறையூர் – உப்பிலியபுரம் பகுதிகளில் இயங்கிவரும் கிழங்கு மில் , மாவுமில் மற்றும் உணவகங்களில் சென்று தான் ஒரு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக் கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உப்பிலியபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாவு மில் இயங்கி வருகிறது. அந்த நபர் அவர்களிடம் தனியாகச் சென்று மாத மாதம் வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும், மாவு மில் வைத்திருப்பவர்களும் இவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தான் என நினைத்து தொடர்ந்து பணம் கொடுத்து வருவதாகவும் சொல்கிறார்கள். தண்டல் வசூல் செய்பவர் போல, கடை கடையாக வசூல் செய்து வருவதாகவும் அவரது வாகனத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஒரு பெண்ணிடம் பணம் வாங்குவது போல வெளியான வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த நபர் திருச்சி மாவட்டம் துறையூரையடுத்த கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பதும் இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருவதாகவும் சொல்கிறார்கள்.
மேற்படி, பிரபாகரன் தனது இரு சக்கர வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு தனிப்பட்ட முறையில் பணம் வசூலித்து வருகிறாரா? இல்லை, லோக்கல் போலீசாருக்காக மாமூல் வசூலிக்கிறாரா? என்பதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த விவகாரம் குறித்து துறையூர் போலீசு இன்ஸ்பெக்டர் முத்தையனிடம் பேசினோம்.
“எங்களது விசாரணையில் நடந்த சம்பவம் உண்மை என தெரிய வந்திருக்கிறது. அவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். தனது வாகனத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இதுபோல் செய்திருக்கிறார். அவரை கைது செய்து சிறையிலடைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்.” என்றார்.
வசூல் வேட்டையில் ஈடுபட்டு ஊர்க்காவல் படையை சேர்ந்த பிரபாகரன் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
— ஜோஷ்