அங்குசம் பார்வையில் ‘துரிதம்’
தயாரிப்பு: திருவருள் ஜெகநாதன், டைரக்ஷன்: ஸ்ரீனிவாசன். நடிகர்—நடிகைகள்: ’சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், ‘பூ’ராமு, ராம்ஸ், வைஷாலு, ஸ்ரீநிகிலா, ஐஸ்வர்யா. ஒளிப்பதிவு: வாசன் & அன்பு டென்னிஸ், எடிட்டிங்: நாகூரான் & சரவணன், பாடல்கள் இசை: இசை அமுதன்( அறிமுகம்) பின்னணி இசை: நரேஷ்( அறிமுகம்) ஸ்டண்ட் டைரக்டர்: மணி, பி.ஆர்.ஓ. கே.எஸ்.கே.செல்வா
சில படங்கள் மீது நம்பிக்கை வைத்து தியேட்டருக்குள் போனால், நம்மள பாடாய்படுத்தி எடுத்து, தியேட்டரைவிட்டு தெறித்து ஓடும்படியாக்கிவிடுவார்கள். “என்னத்த இருக்கப்போகுது”ன்னு அரைகுறை மனசுடன் சில படங்களுக்குப் போனால் “அடடே பின்னிட்டாய்ங்களே”ன்னு நம்மை அசர வைப்பார்கள். இந்த ‘துரிதம்’ இதில் கண்டிப்பாக இரண்டாவது ரகம் என்பதில் சந்தேகமில்லை.
கதைப்படி மதுரையைச் சேர்ந்த ஹீரோ ஜெகன், சென்னையில் கால்டாக்சி டிரைவராக வேலை பார்க்கிறார். அதே மதுரையைச் சேர்ந்த ஹீரோயின் ஈடன், தனது தோழிகளுடன் சென்னையில் தங்கி ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார். மதுரையில் இருக்கும் ஈடனின் அப்பா ஏ.வெங்கடேஷ், தனது மகளின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவராக, அடிக்கடி மகளுடன் செல்போனில் பேசி கறாராக இருக்கிறார்.
ஈடனை பிக்கப் & டிராப் செய்கிறார் ஜெகன். ஒருதலையாக காதலிக்கிறார். அப்பா விதித்த ஆறு மாத கெடு முடிந்ததும் மதுரைக்குச் செல்ல ஆயத்தமாகிறார் ஈடன். காதலைச் சொல்ல முடியாமல் ஏமாற்றமடைகிறார் ஜெகன். காலை டிரெயினை தவறவிட்டதால், மதுரைக்கு மோட்டார்பைக்கிலேயே செல்லும் ஜெகனுடன் செல்ல வேண்டிய சூழல் ஈடனுக்கு. அவரது அறைத் தோழிகளும் அவரவர் ஊர்களுக்குச் செல்ல புறப்படுகிறார்கள். எல்லோரும் காரில் வருவதாக அப்பா-அம்மாவிடம் பொய் சொல்கிறார் ஈடன்.
டிரைவரிங் தெரிந்தும் வேலை கிடைக்காததால், ஓட்டலில் க்ளீனிங் வேலை பார்க்கிறார் ராம்ஸ். அதே ஓட்டலில் தோசை மாஸ்டராக இருக்கும் பூ ராமுவின் போதனையால் கெட்ட பாதைக்குப் போக ஆயத்தமாகிறார் ராம்ஸ்.
ஜெகனும் ஈடனும் சென்னை—மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, பைக் ரிப்பேராகிவிட, காரில் வரும் நபரிடம் லிப்ட் கேட்கிறார்கள். காருக்குள் ஈடன் ஏறியதும் திடீரென வண்டி கிளம்பிவிடுகிறது. ஏதோ வில்லங்கம் ஆகிப்போச்சு என்ற பதைபதைப்புடன் துரிதமாக காரியத்தில் இறங்குறார் ஜெகன். ஈடனை காப்பாற்றி, தனது காதலை சொன்னாரா ஜெகன்? என்பது தான் இந்த ‘துரிதம்’.
சிம்பிளான காதல் கதையை, ஹைவேஸில் த்ரில்லிங்காக பயணிக்க வைக்கும் திரைக்கதை உக்தியைக் கையிலெடுத்து க்ளைமாக்ஸ் வரை நம்மை ஆச்சர்யப்படுத்தி அசர வைக்கிறார் டைரக்டர் ஸ்ரீனிவாசன். அதிலும் இடைவேளைக்குப் பிறகு, படபடப்புடன் பைக்கில் ஈடனைத் தேடும் ஜெகன், உதவிக்கு வேனில் தேடும் பாலசரவணன், ஈடனின் அப்பாவைச் சமாளித்தபடியே பஸ்ஸில் பயணிக்கும் தோழிகள், ரயிலில் பயணிக்கும் இன்னொரு தோழி என கட் பண்ணி, கட் பண்ணி சீன்களைக் கனெக்ட் பண்ணிக் காண்பித்து ரசிகர்களை பரபரக்க வைக்கும் டைரக்டரின் ஸ்பீட் ஐடியாவுக்கு தூணாக நிற்கிறார்கள் எடிட்டர்கள் நாகூரானும் சரவணனும்.
ஈடனின் அப்பாவாக வரும் டைரக்டர் ஏ.வெங்கடேஷ், ஜெகனின் நண்பனாக வரும் பாலசரவணன் இவர்களைத் தவிர வேறு யாரும் நமக்கு பரிச்சயம் இல்லாதம் முகங்கள் தான். ஆனாலும் ஹீரோ ஜெகன், ஒரு சில சீன்களில் தான் தடுமாற்றமாக தெரிகிறார். மற்றபடி ரொம்பவே கேஷுவலாக பண்ணி பாஸ் மார்க் வாங்கிவிட்டார். அதே போல் ஹீரோயின் ஈடனும் பல சீன்களில் அனுபவசாலி நடிகை போல் பெர்ஃபாமென்ஸ் பண்ணி டிஸ்டிங்ஷனில் பாஸாகிவிட்டார். ஹீரோயின் தோழிகள் மூவருமே கவனம் ஈர்க்கிறார்கள்.
ஈடனை காரில் கடத்திக் கொண்டு போகும் ராம்ஸுக்கு தங்கச்சி செண்டிமெண்டை கரெக்டாக கனெக்ட் பண்ணிவிட்டார் டைரக்டர். பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் கண்டிப்பாக ஓகே சொல்லலாம்.
பட ரிலீசுக்கு முன்பாக ஒரேயொரு புரமோஷன் வேலையை துரிதமாக பண்ணியிருந்தால், இந்த ‘துரிதம்’ இன்னும் கவனம் பெற்று எல்லாத்தரப்பிலும் ‘ரீச்’ சாகியிருக்கும்.
–மதுரைமாறன்