இலாபத்தில் இயங்கிய பால் சொசைட்டிக்கு பால் ஊத்திய நிர்வாகிகள் ! கலெக்டரிடம் கதறிய முகவர்கள் !
14 ஆண்டுகளாக தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வந்த இந்த சொசைட்டி, திவால் ஆனது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த, “நரியம்பட்டு பகுதியில் கடந்த 20 வருடங்களாக பால் சொசைட்டி இயங்கி வருகிறது. இந்த சொசைட்டி, தொடக்கம் முதல் 2022 ஆண்டு வரை, சுமார் 8 லட்சத்து 17 ஆயிரத்து 709 ரூபாய் லாபத்தில் இயங்கி வந்தது. ஆனால், செயலாளர் மோகன் பொறுப்பேற்றப் பிறகு 2023 மற்றும் 2025 வரை சுமார் 9 லட்சம் வரை முறைகேடு நடந்திருப்பதாகவும் ஆர்டிஐ ஆதாரத்துடன், காவேரிபட்டு பால் முகவர்கள் கடந்த செப்- 8-ந் தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டத்தில் பால் முகவர்கள் சார்பில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் …
20 ஆண்டுகளுக்கு மேலாக காவேரிபட்டு கூட்டுறவு சொசைட்டியில் பால் வழங்கி வருகிறோம். எங்களுக்கு வருடம் தோறும் போனஸ் மற்றும் ஆண்டின் டிசம்பர் மாதம் கடைசியில் ஒரு லிட்டருக்கு 30 பைசா வீதம் கணக்கீடு செய்து ஊக்கத்தொகை வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால் 2022 முதல் 2025 வரை, சொசைட்டியில் நஷ்டம் ஏற்பட்டதாக காரணம் காட்டி ஊக்கத்தொகை மற்றும் ஆண்டுக்கான போனஸ் தொகை வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர்.
ஆரம்பம் முதல் 2022 வரை லாபத்தில் போய்க் கொண்டிருந்த இந்த பால் சொசைட்டி கடந்த 3 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.
14 ஆண்டுகளாக தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வந்த இந்த சொசைட்டி, திவால் ஆனது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் காவேரிப்பட்டு பால் சொசைட்டியை காப்பாற்ற வேண்டும். 2023 முதல் 2025 வரை மூன்று ஆண்டிற்கான அனைத்து நிலுவை தொகையை கொள்ளை அடித்தவர்களிடம் பெற்று தரவேண்டும் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்” என்பதாக பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்கள்.
இதுகுறித்து அதே பால் சொசைட்டியில் உதவியாளராக பணிபுரிந்து வரும் விஜயகுமாரிடம் பேசும்போது, “ஆமாங்க மோகன் என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டும் காணாமல் இருக்க என்னால் முடியல. அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால், சில மாதங்களாக பணியில் சேர்க்காமல் கோபு மற்றும் மோகன் அலைக்கழித்தார்கள். அதனைத்தொடர்ந்து, இந்த சொசைட்டியின் ஆட்களை புதிதாக மாற்றக் கோரியும் உதவியாளரான என்னை உடனடியாக கூட்டுறவு சொசைட்டியில் சேர்க்கக் கோரி இந்த சொசைட்டியின் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு ஆதரவு அளித்ததால் பணியில் தொடர்கிறேன்” என்றார்.

ஆர்.டி.ஐ.யில் தகவல் பெற்ற ஆனந்தன் கூறுகையில், “ஏற்கெனவே, காவேரிப்பட்டுப் பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்த கோபு, செயலாளர் மோகன் ஆகியோர் பால் கேன்கள் வாங்கிய கணக்கில் 42,000 ரூபாயையும், உள்ளூரில் பால் விற்பனை செய்யப்பட்ட தொகையிலிருந்து மூன்று லட்சம் ரூபாயையும் கையாடல் செய்துவிட்டதாக அப்போது ஏகப்பட்டப் புகார்கள் குவிந்தன.
அதன்பேரில் விசாரணையைத் தொடங்கி அதிகாரிகள் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கோபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார் . கோபுவின் முறைகேடுகளுக்கு சங்கச் செயலாளராக இருக்கும் இதே மோகன் உடந்தையாக இருந்ததாக பால் உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து புகார் கூறப்பட்டதால், கூட்டுறவு சரக முதுநிலை ஆய்வாளர் விசாரணையில் இறங்கினர்.
2019 -ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிய ஊக்கத்தொகை மற்றும் கறவைப்பசு கடனுக்கான தவணைத் தொகை ஆகியவற்றிலும் கையாடல் நடந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, காவேரிப்பட்டுப் பால் கூட்டுறவுச் சங்கத்தின் வரவு – செலவு கணக்குகளும் தனி அலுவலர் மூலம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வில், 1.50 லட்சம் ரூபாயை முறைகேடாக சுருட்டியது தெரியவந்ததால், பால் கூட்டுறவுச் சங்க செயலாளர் மோகனும், அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 23 /4/ 2021 இல் அன்றைய, மாவட்ட (வேலூர்) துணை பதிவாளர் தயவில் தண்ட தீர்வு என்ற பெயரில் ரூ 52,640 கட்டிவிட்டு, இதே சங்கத்தில் சங்க செயலாளர் பொறுப்பில் மீண்டும் மோகன் பணியில் அமர்த்தப்பட்டார். இவரோடு கோபு தலைவராகவும் , 9 இயக்குனர்களோடு உதவியாளர் விஜயகுமார் ஆகியோர் நிர்வாகத்தை நடத்தி வந்தனர்.
ஆர்.டி.ஐ.யிடம் பதில் கேட்டிருந்ததை ஒன்றிய பால் உற்பத்தி அலுவலகம் மூலம் தெரிந்து கொண்ட மோகன் இந்த விஷயத்தினை பெரிதுபடுத்த வேண்டாம் தணிக்கையாளர் உதவியோடு கணக்கை சரி செய்வதாக எண்ணிடம் கெஞ்சினார். பணத்தை சுருட்டாதவர் ஏன் பதற்றப்பட வேண்டும்? இவர்களை சும்மா விட கூடாது. 2019 இல் புகாரில் மோகனை கைது செய்து இருக்க வேண்டும் அல்லது பதவியிறக்கமாவது செய்து இருக்க வேண்டும் . சம்பிரதாயத்துக்காக தண்ட தீர்வு கட்டவைத்து மீண்டும் அதே செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டார் அதன் விளைவுதான் அதே கைவரிசையை காட்டி இருக்கிறார்” என்றார்.

புகார் குறித்து மோகனிடம் பேசினோம், “நான் பணம் எல்லாம் கொள்ளை அடிக்கலைங்க. பால் கொள்முதல் செய்வதில் சிறு சிறு தவறுகள் நடந்திருக்கலாம். அதனால் நஷ்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. 2021 பால் கேன்கள் விவகாரத்தில் நான் தண்ட தீர்வு கட்டியது உண்மைதான் . இந்த இரண்டு ஆண்டுகள் தான் நஷ்டத்தில் சங்கம் தள்ளாடுகிறது. புகார் குறித்து இனிமேதான் அதிகாரிகள் வந்து விசாரிப்பார்கள் அப்போது அவர்களிடம் காரணத்தை சொல்வேன்” என்றார்.
மாவட்டப் பதிவாளர் சித்ரா அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ”நான் சமீபத்தில் பணி மாறுதலில் வந்தேன். நீங்கள் குறிப்பிடும் காவேரிபட்டு சொசைட்டி மீது புகார் வந்துள்ளது . கண்டிப்பாக பால் முகவர்களுக்கு உண்டான ஊக்கத்தொகை, போனஸ் தொகை வழங்காமல் இருக்கும் பட்சத்தில் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுபேன். செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டது ஆய்வில் தெரியவந்ததால், சட்டப்படி நடவடிக்கை உண்டு” என்றார்.
மாவட்டப் பதிவாளர் சொன்னது போலவே, செய்தும் காட்டினால் மகிழ்ச்சிதான் !
– மணிகண்டன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.