TNSET-2024 தேர்வில் தமிழ்வழி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டு உரிமை மீட்பு ! அங்குசம் செய்தி எதிரொலி
தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணிக்கான மாநிலத் தகுதி தேர்வு ( SET-State Eligibility Test ) கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில் கடந்த பிப்-2024 இல் அறிவிப்பு வெளியாகி சில தொழில்நுட்ப காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டு பின்னர், ஒருவழியாக கடந்த மார்ச்-2025 இல் பல்வேறு குளறுபடிகளுடன் தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டது. குறிப்பாக, இந்த தேர்வுமுறையில், தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீட்டை நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி மறுத்திருந்தது, உயர்கல்வித்துறை. இதனை சுட்டிக்காட்டி கடந்த மே-14 அன்று அங்குசம் இணையத்தில், ”கலைஞர் தந்த இட ஒதுக்கீடு – காவு கொடுக்கும் திராவிடமாடல் உயர்கல்வித்துறை !” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
”வேலைவாய்ப்புகளில் 69% இட ஒதுக்கீடு, பெண்களுக்கு 20%, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20% இட ஒதுக்கீடு மற்றும் உயர்கல்வி பெறும் வகையில் 69% இட ஒதுக்கீடு, பெண்களுக்கு 30%, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % போன்ற மேற்கண்ட இட ஒதுக்கீடுகள் யாவும் இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்களில் இல்லை. இவை யாவும் தமிழ்நாடு அரசு சமூக நீதியின் அடிப்படையில் முன்னோடியாக சாத்தியமாக்கிய கொள்கை முடிவுகள்.
பெண்களுக்கான 30 % இட ஒதுக்கீடு (1989), தமிழ் வழியில் பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீடு (2010) ஆகிய இவ்விரண்டும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அமல்படுத்தப்பட்டன.
அதிலும் குறிப்பாக, தமிழ் வழி பயின்றோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு ( PSTM) என்பது Horizontal Reservation ( கிடைமட்ட ஒதுக்கீடு), ஆகவே தகுதித் தேர்வில் வழங்க வேண்டியதில்லை எனும் அணுகுமுறை தி.மு.க.வின் “சமூகநீதி “ கொள்கைக்கு எதிரானது.
கலைஞர் கருணாநிதியால் 2010- ஆம் ஆண்டிலேயே தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது போன்றதொரு முன்னோடித் திட்டத்தை “ Horizontal Reservation, கல்வித்தரம், தராதரம்” என திரிபுவாதக் காரணங்களால் “ தகுதித் தேர்வில் தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீடு பொருந்தாது” என திமுக அரசின் கொள்கை முடிவு அமையுமானால், நாளடைவில் இந்த இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச்செய்து சமாதி கட்டும் நிகழ்வுக்கு கரசேவை புரிந்து முதல் கல் எடுத்துத் தந்த பெருமை அமைச்சர் கோவி.செழியனுக்கும் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் சேரும் என்பதில் ஐயமில்லை. ” என்பதை அந்த கட்டுரையில் அழுத்தமாக பதிவு செய்திருந்தோம்.
இன்னும் சொல்லப்போனால், கடந்த இருண்ட கால வரலாற்றுப் பின்னணியிலிருந்தும், தொலைநோக்கு பார்வையிலிருந்தும் கலைஞர் கொண்டுவந்த இடஒதுக்கீட்டு கொள்கைகள், இப்போதைய அதிகாரிகளுக்கு புரியப்போவதில்லை. அதிகாரிகள் சொல் கேட்டு நடக்கும் அமைச்சராக இல்லாமல், அந்த அதிகாரிகளை பணித்து வேலை வாங்கும் அமைச்சராக இந்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்றே நாம் பதிவு செய்திருந்தோம்.
இந்த பின்னணியில்தான், ஜூலை 23 தேதியிட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில், ” சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண். W.P.NO 13187/2025 அடிப்படையில் மாநிலத் தகுதித் தேர்வில் (TNSET-2024)மகளிருக்கான இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்வழியில் (PSTM) பயின்றோருக்கான இடஒதுக்கீடு அரசாணை (நிலை) எண் 163 உயர்கல்வி (H1) துறை. நாள் 18.07.2025 இன்படி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.” என்பதாக குறிப்பிட்டு, TNSET-2024 க்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ள விண்ணப்பதாரர்களில் PSTM முன்னுரிமை கோரும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுக்குரிய இடஒதுக்கீட்டு உரிமையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை, கொள்கைகளை சட்டமாக்கியிருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்வதில் மட்டுமல்ல; சமூகநீதியை நிலைநாட்டும் நோக்கில் அமைந்த அத்தகைய கொள்கைகளுக்கு எந்த வகையில் ஊறு வந்தாலும் அவற்றை அப்போதே தடுத்து நிறுத்தி சமூகநீதியை நிலைநாட்டுவதும் அதற்கு இணையான சமூகக்கடமையாகவே ஆட்சியாளர்களின் கடப்பாடுகளாகவே அமைந்திருக்கின்றன என்பதையே இந்த விவகாரம் எடுத்துரைத்திருக்கிறது.
— ஆசிரியர்