மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்!
மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டிய
அரசுப் பேருந்து ஓட்டுநர்
பணியிடை நீக்கம்!
மொபைல் போனில் அடிக்கடி பேசிக் கொண்டே ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு நேற்று காலை 8.30 மணியளவில் TN63 N 1983 என்ற பதிவெண் கொண்ட அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அதை அரசு போக்குவரத்துக் கழக ராமநாதபுரம் கிளையைச் சேர்ந்த ஓட்டுநர் மோகன் ஓட்டியுள்ளார்.
அவர் அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டே பேருந்தை ஓட்டியுள்ளார். இதனால் பயணிகள் அனைவரும் ஒருவித அச்சத்துடனேயே பயணம் செய்துள்ளனர்.
இக் காட்சியை வீடியோ எடுத்த பயணி ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட அது பரவி வைரலாகியது.
இதுபற்றி தகவலறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துக் கழக (காரைக்குடி) பொது மேலாளருக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், மொபைல் போனில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மோகனை பணியிடை நீக்கம் செய்து காரைக்குடி பொது மேலாளர் சிங்காரவேல் உத்தரவிட்டுள்ளார்.