கழகத்தைக் காத்திட… கட்டாய ஒய்வு தரலாமே இவருக்கு…???

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கழகத்தைக் காத்திட… கட்டாய ஒய்வு தரலாமே இவருக்கு…??? தி,மு,கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின், “ஒருங்கிணைப்புக் குழு” ஒன்றினை 20.07.2024  அன்று அறிவித்துள்ளார்.

வரவிருக்கும் 2௦26 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் – அமைப்பு ரீதியான சீரமைப்புகளை மாண்புமிகு கழகத் தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைக்க வேண்டியும், தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து  மேற்கொள்ளவும் “ஒருங்கிணைப்புக் குழு” ஒன்றினை அமைத்து அறிவித்துள்ளார் தி.மு.கழகத் தலைவர்.

Sri Kumaran Mini HAll Trichy

திமுக ஒருங்கிணைப்புக் குழு
திமுக ஒருங்கிணைப்புக் குழு

அந்தக் குழுவில் (1). மாண்புமிகு கே.என். நேரு  (2). திரு. ஆர்.எஸ். பாரதி  (3). மாண்புமிகு எ.வ. வேலு  (4). மாண்புமிகு தங்கம் தென்னரசு   (5). மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகிய ஐவர் இடம் பெற்றுள்ளனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்தக் குழுவிலேயே இரண்டாமவராக இடம் பெற்றிருக்கும் ஆர்.எஸ். பாரதியை அகற்றி விட்டு, புதிய வேறொருவரை நியமித்து, அந்த ஒருங்கிணைப்புக் குழுவினையே கொஞ்சம் சீரமைக்கலாம் என்பது, கழகத்திலேயே “குரலற்றவர்களின்” ஒட்டு மொத்தக் குரலாக, உள்ளக் குமுறலாக இருந்து வருகிறது. பொது மேடைகளில், பொது இடங்களில் ஆர்.எஸ். பாரதியின் சில்லறைத்தனமான அருவெறுக்கத்தக்க பேச்சுகள் தான் காரணம் எனில், அது ஒன்றும் பொய்யல்ல.

தி.மு.கழகம் எனும் அரசியல் இயக்கத்தின் வளர்ச்சிக்கு அதன் முன்னணி தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களின் மேடைப் பேச்சுகளே முக்கிய காரணிகளில் ஒன்று எனில் அது மிகையல்ல. அது ஒரு காலம். அப்போதும் திமுகவில் நல்ல நகைச்சுவையாகவும் சற்றே விரசமாகவும் பேசுகின்ற மேடைப் பேச்சாளர்கள் பலரும் உலா வந்தனர். அப்போது அந்தப் பேச்சானது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதி

போலீஸ் கண்ணன், கோவை மணியன், நன்னிலம் நடராஜன், இரா. வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம்

போன்றோரின் நகைச்சுவை அதிகமாகவும் விரசம் குறைவாகவும் வெளிப்படும் மேடைப் பேச்சுகளைக் கேட்டு ரசித்திட, இரவு நேர மேடைப் பேச்சுகளுக்கு என்றே ஒரு தனிப் பெரும் கூட்டம் திரண்டு வந்ததும் உண்டு. இப்போது இருப்பது போல அந்தக் காலங்களில் அதிலும் நவீன சமூக வலைத்தளங்கள் ஏதுமில்லை. ஆனால், இப்போது அப்படி இல்லை.

ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதியோ அல்லது திமுகவின் சிற்சில இம்சை அரசர்கள் யாரேனும் கொச்சையாகவோ அநாகரிகமாகவோ பொது வெளிகளில் கொட்டுகின்ற வார்த்தைகள், சட்டென அடுத்த ஒரு நொடியில் தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதுமாகச் சென்று சேர்ந்து, திருப்பித் திருப்பி மீண்டும் மீண்டும் என கண்களையும் காதுகளையும் வந்தடைந்து கொண்டேயிருக்கின்றன.

சரி. இதற்கு என்ன செய்வது?

Flats in Trichy for Sale

கழகத்தவர்கள் ஒளி மற்றும் ஒலி வாங்கிகள் முன்பாக சற்று கூடுதலாகவே அடக்கி வாசிப்பது, கட்சித் தலைமைக்கும் கட்சிக்கும் நல்லது.

திமுகவில் முன்பெல்லாம் மேடைப் பேச்சாளர்களுக்கு என்று ஆறு மாதங்கள் அல்லது ஆண்டுக்கு ஒரு முறையாவது, எது பேச வேண்டும்? ஏன் பேசப்பட வேண்டும்? அதனை எப்படிப் பேசுதல் வேண்டும் என்று பயிற்சி அரங்குகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. இப்போது அதெல்லாம் நடக்கிறதா இல்லையா என்றும் தெரியவில்லை.

யார் இந்த ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி…???

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற திருநாளில் பிறந்தவர் தான் ஆர்.எஸ். பாரதி. அவருக்கு வயது 77. அவர் வழக்கறிஞரும் ஆவார். கடும் உழைப்பாளி. சிறந்த மனிதர். ஆகச் சிறந்த கட்சிக்காரர். 1986லிருந்து ஆலந்தூர் நகராட்சித் தலைவராகத் தொடர்ந்து நான்கு முறையாக நல்லதொரு மக்கள் பணியாற்றியவர்.

கலைஞருடன் ஆர்.எஸ். பாரதி
கலைஞருடன் ஆர்.எஸ். பாரதி

திமுகழகம் மற்றும் கழகத்தவர்கள் மீதான நீதிமன்ற வழக்குகள் பலவற்றிலும் தொடர்ந்து வாதிட்டு, நீதிமன்ற வழக்குகளில் இருந்து கட்சியையும் கட்சியினரையும் மீட்டுத் தந்தவர். 2௦16ல் டெல்லியில் திமுகவின் மாநிலங்களவை  உறுப்பினர் பதவியை அலங்கரித்தவர்.

இத்தனைச் சிறப்புகள் வாய்ந்தவருக்கு, இன்றைக்கு இப்போது என்னவாயிற்று என்கிற கேள்வி எழலாம். அது இயல்பானது. சமீப காலங்களில் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி அவர்களின் வார்த்தைகள் பல நேரங்களில் பல தரப்பினரின் வேண்டாத விமர்சனங்களுக்கும் தேவையற்ற கசப்புகளுக்கும் வித்திட்டு வருகிறது.

இட ஒதுக்கீடு வகையில் சாதிய ரீதியாக நீதிமன்றங்களில் உயர் பதவிகள் வகிப்போரை, “இதெல்லாம் அவர்களுக்கு திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை.” என்று கடுமையான வார்த்தைகளை அள்ளி வீசுவது அநாகரிகம் அல்லவா? ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த ஜமீன்தார் மிட்டா மிராசுதார் காலத்திய வார்த்தைகள் தானே அது? மக்களாட்சியில் அதன்  மக்களுக்குப் பிச்சைப் போட யார் இவர்கள்?

உயர் கல்வி எனப்படும் கல்லூரி, பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் மிகப் பெரிய சட்டப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக சாதிய ரீதியாக இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து விட்டு, நன்கு வளர்ந்து விட்ட சமூகத்தில் “நாயெல்லாம் பி.ஏ. பட்டம் போட்டுக்குது.” என்று ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி பொது வெளிகளில் வார்த்தைகளை வாந்தி எடுப்பது, எவ்வகையில் சமூக நீதியாகும்?

தங்களது பேச்சுகளினால் கழகத் தலைவரின் இரவு நேரத் தூக்கம் கெடுக்கும், ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி போன்ற இம்சை அரசர்களின் சிறு பட்டியல் ஒன்றும் இருக்கின்றது. எது எப்படியோ. அந்த இம்சை அரசர்களின் நாவினை அடக்கி வைப்பது திமுகழகத் தலைமைக்கு நல்லது. கட்சிக்கும் மிக மிக நல்லது. இதன் அடிப்படையில் தான் திமுகவின் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதிக்கு கட்டாய ஓய்வு தந்து, திமுக ஒருங்கிணைப்புக் குழுவில் வேறு ஒருவரைப் பொருத்துவது, திமுகழக வளர்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கும்.

கட்டுரை –  இருள்நீக்கியான்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.