“சிலம்பு காலத்து நடனத்தின் மிச்சங்களே இன்றைய நடனங்கள்!”
“சிலம்பு காலத்து நடனத்தின் மிச்சங்களே இன்றைய நடனங்கள்!”
செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை அறக்கட்டளைச் சொற்பொழிவில் புகழாரம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் அருள்தந்தையர்கள் இராசசநாயகம், சே.ச., மற்றும் மணி வளன், சே.ச. ஆகியோரின் அறக்கட்டளைகளின் சார்பாக சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்வுக்குக் கல்லூரி முதல்வர் தந்தை அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர்,சே.ச. தலைமை வகித்தார். அவர் தம் தலைமையுரையில் ஆன்மிகம், சமயம், மதம் என்கிற மூன்று தளத்தில் இன்றைய சமூகம் இயங்குகிறது. எனினும் அடிப்படைவாதத்தைப் பின்பற்றாது கலையை முன்னெடுத்து மனதை விசாலப்படுத்தப் பழக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி தம் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஆ அடைக்கலராஜ் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
“முத்தமிழ் காப்பியம் சிலம்பு வழி இன்றைய நடனம்” என்ற பொருண்மையில் திருச்சிராப்பள்ளி கலைக்காவேரி நுண்கலை கல்லூரி பரதநாட்டிய துறை உதவி பேராசிரியர் முனைவர் . சகாய ராணி சொற்பொழிவு ஆற்றினார். அவர்தம் உரையில் சிலப்பதிகாரம் குறித்த தகவல்களையும் அதன் காதைகளில் ஒன்றான அரங்கேற்ற காதை குறித்து விளக்கமாகவும் கூறினார். முகத்தின் அபிநயங்களை காட்டுவதன் மூலம் நாம் மனதில் என்ன நினைக்கின்றோம் என்பதை மிக அழகாக கூறினார். பேராசிரியர் உரையாற்றும்போது அவர் மாணவிகள் பரதநாட்டியத்தின் மூலம் சிலப்பதிகாரத்தில் உள்ள ஆடல் கலைகளை விளக்கினர்.
எந்த ஒரு நடனமாக இருந்தாலும் அதில் முக பாவனைகள் முக்கியமானவை எனக் கூறியவர், சிலப்பதிகாரமே இன்றைய நடனத்தின் முன்னோடி எனப் புகழாரம் சூட்டினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் இளங்கலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவர் ஆ ஆல்வின் அமல்ராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வின் நிறைவில் இளங்கலைத்தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் சு கரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். மூன்றாம் ஆண்டு மாணவர் மு. சண்முகநாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார், தமிழ் ஆர்வலர்கள், தமிழாய்வுத் துறை மற்றும் பிற துறை பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.
– ஜா.மேரி வலாண்டினா