அங்குசம் பார்வையில் ’டூரிஸ்ட் ஃபேமிலி’
தயாரிப்பு : ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ & எம்.ஆர்.பி.எண்டெர்டெயின்மெண்ட்’ நசரேத் பசலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசலியான். எழுத்து & இயக்கம் : அபிஷன் ஜீவிந். நடிகர்-நடிகைகள் : எம்.சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜாரவி, பக்ஸ் [எ] பகவதி பெருமாள், ரமேஷ் திலக். ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன், இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : பரத் விக்ரமன், ஆர்ட் டைரக்டர் : ராஜ்கமல். பி.ஆர்.ஓ. : யுவராஜ் .
இலங்கை வல்வெட்டித்துறையிலிருந்து தர்மதாஸ் [ சசிகுமார் ], வசந்தி [ சிம்ரன்] தம்பதியர் தங்களது இரு மகன்களுடன்[ மிதுன், கமலேஷ் ] கள்ளத் தோணி மூலம் இரவு நேரத்தில் இராமேஸ்வரம் வந்து இறங்குகின்றனர். சிம்ரனின் அண்ணன் யோகிபாபு உதவியுடன் சென்னையில் வாடகை வீட்டில் குடியேறுகின்றனர். சென்னைக்கு வந்து பதினைந்து நாளில் தர்மதாஸ் குடும்பத்திற்கு ஏற்படும் தர்மசங்கடம், குடியுரிமைச் சிக்கலிலிந்து எப்படிவிடுபட்டது என்பதன் ‘ஹேப்பி எண்டிங்’ தான் இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி.
நமது தொப்புள்க்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் [ குறிப்பாக ஏழ்மையில் ஏதிலிகளாகிவிட்டவர்கள் மட்டுமே] இப்போதும் அனுபவித்து வரும் நரக வேதனை சொல்லிமாளாது. சிங்கள பேரினவாதத்தால் மயான பூமியாகிவிட்ட ஈழத் தமிழ் நிலம். சிங்களக் காடையர்களால் சிதைக்கப்பட்ட நமது சகோதரிகள், உயிர் வேட்டையாடிய அரக்கன்களின் அடங்காத ரத்தவெறி இவையெல்லாம் தான் நமது தமிழ்நாட்டை நோக்கி அவர்களை ஓடிவர வைத்தது. இதையெல்லாம் ரத்தமும் சதையுமாக பல சினிமாக்களில் நாம் பார்த்திருக்கிறோம், துயரடைந்திருக்கிறோம்.
ஆனால் இந்த டூரிஸ்ட் ஃபேமிலியின் தர்மதாஸ் குடும்பம் வந்திறங்குவதோ, இலங்கையில் இப்போது இருக்கும் விண்ணைத் தொடும் விலைவாசி, பொருளாதாரச் சீரழிவு காரணிகளால் மட்டுமே என்பதை மெயின் லைனாக கையில் எடுத்த இயக்குனர் அபிஷன் ஜீவிந் பாராட்டுக்குரியவர் தான்.
அதே நேரத்தில் சிலபல லாஜிக் மீறல்களையும் அனாயசமாக செய்திருக்கிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை. யோகிபாபுவே தர்மதாஸ் குடும்பத்திற்கு ஆதார் அட்டை வாங்குவது, வாக்காளர் அடையாள அட்டை வாங்குவது என்பதெல்லாம் நடக்கவே நடக்காது. ஏன்னா அவர்களுக்கு இங்கே குடியுரிமையும் இல்லை, வாக்குரிமையும் இல்லை என்பது தான் உண்மை நிலவரம்.
இந்த நான்கு ஆண்டுகளில், அதாவது தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தான் அகதிகள் முகாம் என்பது அழிக்கப்படு, இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்ற புதுப்பெயர் சூட்டப்பட்டது. அங்கு வாழும் நமது உறவுகளுக்கு சொந்த வீடு, கல்வி உதவி, நல்ல மருத்துவ உதவி, தற்காலிக ஓட்டுனர் உரிமம் உட்பட பல நல்ல காரியங்கள் நடந்து வருகின்றன. அவர்களின் மனதில் நம்பிக்கை ஒளிபரவுகிறது. எனவே இந்தச் சூழலில் இப்படிப்பட்ட படம் வந்திருப்பதும் மகிழ்ச்சியே.
இராமேஸ்வரம் கடற்கரையில் ரமேஷ்திலக், சசிகுமார் குடும்பத்தை மடக்கி விசாரித்து, அவர்களின் கதையைக் கேட்டதும், “நீங்க போகலாம், இனிமே நீங்க யாரோ? நான் யாரோ?” என அவர்களை வழியனுப்பிய போதே தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் சில மனிதாபிமானிகளின் முகம் தெரிந்தது. அதே ரமேஷ் திலக் க்ளைமாக்ஸில் “ஒருத்தன் இவ்வளவு மனுஷங்களை சம்பாரிச்சிருக்கான்னா ஒன்னு பவர் இருக்கணும், இல்ல பணம் இருக்கணும். ஆனா உனக்கு நல்ல மனசு இருக்குய்யா” என சசிகுமாரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, சில அடி தூரம் நடந்து சென்ற பின் திரும்பிப்பார்த்து, “உன்னை யாருய்யா அகதின்னு சொன்னது?” இந்த ஒத்த டயலாக்கில் தான் படத்தின் மொத்தமும் அடங்கிவிட்டது.
‘அயோத்தி’க்குப் பிறகு சசிகுமாருக்கு ஆத்ம திருப்தி தரும் படம் என்றால் இதான். அதில் மதவெறியர்களின் மண்டையில் ஓங்கி அடித்திருந்தார். இதில் அன்பை விதைத்து தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்தியிருக்கார். வாழ்வாங்கு வாழ்க சகோதரா…
சசிகுமாரின் மனைவி வசந்தியாக சிம்ரன், தான் ஒரு சிறந்த சீனியர் நடிகை என்பதை சில சீன்களில் நிரூபித்திருக்கிறார். “கோஃபி”, [ அட நம்ம ஊர்ல காபின்னு சொல்வோம்ங்க] எனச் சொல்லும் வசந்தியின் இலங்கைத் தமிழ் அழகோ அழகு. சிம்ரனையே கலாய்க்கும் யோகிபாபு, செண்டிமெண்ட்டுக்கு இளங்கோ குமரவேல்-ஸ்ரீஜாரவி தம்பதி, குட்ஃபீல் டச்சுக்கு எம்.எஸ்.பாஸ்கர் என அனைவருமே இரண்டு மணி நேர டிராவலுக்கு க்யாரண்டி தருகிறார்கள்.
இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டான் சசிகுமார்-சிம்ரன் தம்பதியின் இளைய மகனாக வரும் கமலேஷ் ஜெகன். ரமேஷ் திலக்கிடம் மாட்டும் போது “மீன் பிடிக்கப் போகும் போது வழி தவறிவந்துவிட்டம்னு சொல்லுங்கோ”, ”எங்கண்ணன் எப்போதுமே கள்ளக் காதலுக்குத் துணை நிப்பான்”, பள்ளிய ஆசிரியரிடமே லிஃப்ட் கேட்டு வந்த பின் பேசும் தடாலடி வசனம் என அந்தச் சிறுவன் வரும் காட்சிகளெல்லாம் கலகலப்பு. பையன் பார்க்க கருப்பா இருந்தாலும் முகம் புஷ்டியா, வடிவாத்தான் இருக்கான்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ரமேஷ் திலக்கை குணாளனாக காட்டிய டைரக்டர் இன்ஸ்பெக்டர் பகவதி பெருமாளை அறிவிலியாகக் காட்டியது ஏனோ? ஏன்னா சசிகுமார் குடும்பம் பேசுறது இலங்கைத் தமிழ்னு எல்லோருக்கும் தெரியுது. ஆனா அந்தக் குடும்பம் குடியிருக்கும் வீட்டு ஓனரான பகவதி பெருமாளுக்கு மட்டும் எப்படிய்யா கேரளான்னு தெரியுது? அதே போல் க்ளைமாக்ஸில் தர்மதாஸின் கதாபாத்திரத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக கேசவன் நகர்வாசிகள் அம்புட்டுப் பேரும் கேவிக்கேவி அழுவதும், இராமேஸ்வரத்திலிருந்து வரும் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொடுக்கும் இம்சையும் கொஞ்சம் ஓவர் டோஸாகிவிட்டது.
”ஊர்கூடி தேர் இழுப்போம்” என்று சொல்வார்கள். அதைப் போல ”மனித உறவுகள் கூடி அன்பை விதைப்போம்” என்பதைச் சொன்ன இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஹானஸ்ட் ஃபேமிலி.
— மதுரை மாறன்.