கன்னட சினிமாவில் ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டர்!
கன்னட சினிமாவின் புகழ்பெற்ற ஹீரோ யாஷ் & கே.வி.என்.புரொடக்ஷன் வெங்கட் நாராயணா இணைந்து தயாரிக்கும் ‘டாக்சிக் ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன் –அப்ஸ்’ படம் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. அதன் பின் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் டப் செய்யப்படும் இப்படத்தை கீது மோகன் தாஸ் டைரக்ட் பண்ணிவருகிறார்.
இப்படத்தின் ஸ்டண்ட் டைரக்டராக ‘ஃபாஸ்ட் & ஃபியூரியஸ்’, ‘டே ஷிப்ட்’,
‘ஜான் விக்’ படங்களின் ஜே.ஜே.பெர்ரி கமிட்டாகி, ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இப்போது மும்பையில் மழை பெய்தாலும் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது. மழை சற்றே ஓய்ந்த நிலையில் தொடர்ந்து 45 நாட்கள் எடுக்கப் போகும் ஸ்டண்ட் சீக்வென்ஸை ஆரம்பித்துள்ளார் பெர்ரி. இதில் முழுக்க முழுக்க இந்திய ஸ்டண்ட் கலைஞர்களையே பயன்படுத்துகிறார். இந்திய சினிமாவில் இதுவரை பார்க்காத ஆக்ஷன் காட்சிகளாக இருக்கும் என்கிறது படக்குழு.
இதுகுறித்து ஜே.ஜே.பெர்ரி கூறும் போது,
“எனது முப்பத்தைந்து வருட சினிமா அனுபவத்தில் 39 நாடுகளில் வேலை பார்த்திருக்கேன். இந்திய சினிமாவின் ரசிகனான நான் இப்போது முதன்முதலாக இந்தியாவில் அதுவும் தென்னிந்திய சினிமாவில் வேலை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய ஸ்டண்ட் கலைஞர்களின் திறமையில் எனக்கு அபார நம்பிக்கை உள்ளதால் 45 நாட்கள் எடுக்கப் போகும் இந்த ஆக்ஷன் சீக்வென்ஸில் முழுக்க முழுக்க இந்திய ஸ்டண்ட் கலைஞர்களையே பயன்படுத்தியுள்ளேன். டைரக்டர் கீது மோகன் தாஸின் தொலைநோக்குப் பார்வையும் கேமராமேன் ராஜீவ் ரவி, புரொடக்ஷன் டிசைனர் ஆகியோரின் பங்களிப்பும் அசாத்தியமானது. மிகுந்த பாதுகாப்புடனும் கவனமுடனும் ஆக்ஷன் சீன்களை எடுத்து வருகிறோம். இந்திய சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் டிஃபெரெண்டான ஆக்ஷன் சீக்வென்ஸ் காத்திருக்கிறது” என்றார்.
— மதுரை மாறன்