தேர்தல் பிரச்சாரத்தில் அருண்நேருவை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள் !

மகளிர் உரிமைத் திட்ட பணமான 1000 ரூபாய் தங்கள் பகுதியில் பல பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என அருண் நேருவிடம் முறையீடு......

0

தேர்தல் பிரச்சாரத்தில் அருண்நேருவை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள் !

பெரம்பலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளராக களம்காணும் கே.என்.அருண்நேரு, சமீபத்தில் துறையூர்  மலைப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். துறையூர் உப்பிலியபுரம் அடுத்த 16-க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட பச்சைமலை தென்புறநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட பிரச்சார பயணத்தின் போது, மலைவாழ் பழங்குடியின மக்கள் தங்களின் குறைகளை கொட்டி தீர்த்தனர்.

குறிப்பாக இருவழிச்சாலை, பேருந்து நிழற்குடை,மகளிர் சுகாதார வளாகம், குழந்தைகள் படிக்க நூலகம், கழிவுநீர் கால்வாய் வசதி, மகளிர் இலவசபேருந்து வசதி செல்போன் டவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி திமுக வேட்பாளரான அருண் நேருவிடம் மலைவாழ் பழங்குடியின பெண்கள் கோரிக்கை விடுத்தனர். மகளிர் உரிமைத் திட்ட பணமான 1000 ரூபாய் தங்கள் பகுதியில் பல பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என முறையிட்டனர்.

அவர்களின் குமுறல்களை பொறுமையாக கேட்ட பின்னர் அவர்களிடம் பேசிய அருண் நேரு, ”பல வருடங்களாக உங்களுடைய பட்டா திருத்தம் செய்யப்படாமல் உள்ளதால் உரிமைத்தொகை உங்களுக்கு வந்து சேராமல் உள்ளது. இன்னும் சில நாட்களில் அதற்கென தனி முகாம் பச்சை மலையில் உள்ள உங்கள் பகுதியில் அமைக்கப்பட்டு பட்டா திருத்தங்கள் செய்த பிறகு, பயனாளிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் திட்ட பணம் வந்து சேரும்” என உறுதி அளித்தார்.

- Advertisement -

தண்ணீர் பள்ளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நம்மிடையே  பேசும்போது, “கடந்த பாராளுமன்ற தேர்தல்களில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி.-க்கள் தங்கள் பகுதிகளுக்கு ஒரு முறை கூட வந்து செல்லவில்லை. பல்வேறு வாக்குறுதிகளைக்கூறி வெற்றி பெற்ற பின் இதுநாள் வரை எங்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. தென்புற நாடு ஊராட்சிக்குட்பட்ட சோழமாத்தி கீழ்கரை பெரும் பரப்பு சித்தூர் ஆகிய மலைவாழ் குக்கிராமங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வருகிறது. அதிலும் வெறும் பத்து நிமிடமே வருவதால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுகிறது. மலைப்பகுதி என்பதால், அதற்கேற்ப அவசரகால சிகிச்சைகள் விபத்து மற்றும் விஷக்கடி உள்ளிட்டவற்றை கையாள்வதற்கேற்ப டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான சிகிச்சை முறைகள் இல்லை. இங்கிருந்து துறையூருக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய சூழல் உள்ளது. அவசர சிகிச்சைக்காக இங்கு போதிய மருத்துவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தற்போது மலைவாழ் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனை வாகனம் கூட வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது மாதத்திற்கு ஒரு முறை கூட வருவது கிடையாது.” என நம்மிடமும் நீண்ட புகாரை வாசித்தனர்.

இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக சிலவற்றை அப்பகுதி இளைஞர்களும் பெண்களுமாக நம்மிடம் சில விசயங்களை முன்வைத்தனர். அவற்றுள்,

* தென்புறநாடு ஆத்தி நாடு வண்ணார கோம்பை நாடு இவற்றை ஒன்று சேர்த்து பச்சை மலைக்கு என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தேவை. தனி ஒன்றியமாக அமைத்திட வேண்டும்.

* மலைவாழ் மக்களுக்கு உண்டான அரசு பணிக்கென வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு ஏற்கனவே மூன்று சதவீதம் இருந்த நிலையில் தற்போது ஒரு சதவீதமாக குறைந்து விட்டது.

4 bismi svs

* டாப் செங்காட்டுப்பட்டியில் மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை மிகவும் மோசமாக உள்ளது.

* தென்புறநாட்டுக்கு உட்பட்ட தண்ணீர் பள்ளம் என்ற கிராமத்தில் தினந்தோறும் காலை 6 மணி பகல் 11 மணி மதியம் 1 மணி சாயங்காலம் 7 மணி என துறையூரிலிருந்து தங்கள் கிராமத்திற்கு அரசு பேருந்து வந்து சென்று கொண்டிருந்ததை பல்வேறு ஊர்கள் சுற்றி செல்வதாக மாற்றிவிட்டார்கள்.

* துறையூர் செல்லும் அரசு பேருந்தில் முன்பு பயணக் கட்டணமாக 20 ரூபாய் வசூலித்த நிலையில், தற்பொழுது எவ்வித முன் அறிவிப்பும் இன்றி 25 ரூபாய் கூடுதலாக 45 ரூபாய் கட்டணம் அரசு பேருந்து வசூலிக்கப்படுகிறது.

* தினமும் நான்கு முறை வந்து செல்லக்கூடிய அரசு பேருந்து தற்போது இரண்டு முறை மட்டுமே வந்து செல்வதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக துறையூர் சென்று வரும் பொதுமக்கள் மிகவும் அவதியுறுகிறார்கள்.

இதுபோன்று நிறைய குறைகள் உள்ளது எனவும் தேர்தல் நேரத்தில் வரக்கூடிய வேட்பாளர்கள் அனைவரும் நீங்கள் ஓட்டு போடுங்கள். நாங்கள் வந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்கிறார்களே தவிர அதனை நிறைவேற்றாமல் எங்களை மறந்து விடுகின்றனர் எனவும் கூறினர்.

பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் இடத்தில் நேரடியாக சென்று மனு அளித்திருந்தோம். அருகில் இருக்கக்கூடிய புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகவே எங்களது பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றக்கோரி மனு அளித்திருந்தும் இது நாள் வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தனர்.

இந்தமுறை தேர்தல் பிரச்சாரத்தில் சென்னை மற்றும் திருச்சி பகுதியிலிருந்து வந்திருந்த யூடியூப் சேனல்கள் வேட்பாளரின் தனிப்பட்ட பேட்டிக்காக அவரை அடுத்தடுத்து சூழ்ந்து கொண்டதால், திட்டமிட்டபடி பல கிராமங்களுக்கு செல்லாமல் திரும்பிவிட்டதாக விசனப்பட்டனர் உள்ளூர் பகுதி மக்கள். இருந்தாலும், மக்களின் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டறிந்து, அவற்றையெல்லாம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உதவுவேன் என்பதாக அருண் நேரு கொடுத்த வாக்குறுதி தந்த மனநிறைவோடு கலைந்து சென்றனர்.

ஜோஷ்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.