திருச்சி புத்தகக் கண்காட்சி : தவிச்ச வாய்க்கு தண்ணீர் வைக்க நாலு நாளா ? திருத்தப்படுமா மாவட்ட நிர்வாகத்தின் வஞ்சகம் ?
திருத்தப்படுமா திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் வஞ்சகம் ???
தவிச்ச வாய்க்கு தண்ணீர் வைக்க நாலு நாளா ?
திருச்சி புத்தகக் கண்காட்சி பரிதாபங்கள் – பாகம் – 01
அறிவுத்திருவிழாவாக நடைபெற வேண்டிய புத்தகக்கண்காட்சிகள், சடங்குத்தனமாகவும், கணக்குக் காட்டப்படுவதற்காகவும் நடத்தப்படுவதை கண்டு தொடர்ந்து தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள், திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள். திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் இந்திரஜித், எழுத்தாளர் ஆங்கரை பைரவி, பத்திரிகையாளர்கள் ஜவஹர் ஆறுமுகம், நந்தவனம் சந்திரசேகரன் வரையில் பலரும் பல்வேறு பதிவுகளை பதிவிட்டிருக்கிறார்கள்.
அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும் புத்தக திருவிழாக்கள், அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனாலும், அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவே வேதனைப்படுகிறார்கள்.
திருச்சி மாவட்ட நிர்வாகமும், பொது நூலக இயக்ககமும் இணைந்து திருச்சியில் “திருச்சி புத்தகத் திருவிழா 2௦26” வை நடத்தி வருகிறது. தொடக்கமே சர்ச்சையானது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை கலந்தாலோசிக்காமலே, தன்னிச்சையாகவும், மிகவும் ரகசியமான முறையிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதை ஏற்கெனவே போதுமான அளவுக்கு அம்பலப்படுத்திவிட்டார்கள்.
அங்குசம் செய்தியும் இந்த விவகாரம் குறித்து, “ரகசியமாய் … ரகசியமாய் … திருச்சியில் ஒரு புத்தக்ககண்காட்சி” என்ற தலைப்பில் விரிவான விமர்சன செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்த பின்னணியில்தான், உள்ளூர் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவர்களாகவே சிலரை அழைத்து மேடையேற்றி குறிப்பிட்ட தலைப்பில் பேச வைத்திருக்கிறார்கள்.
இதுதவிர, இதற்கு முன்னர் அவர்களே தயாரித்த பட்டியலின்படி தினசரி உரை நிகழ்த்துபவர்களும் பாராட்டு பெறுபவர்களும் பங்கேற்று வருகிறார்கள்.
இதன்படி, விழாவின் முதல் நாள் மூன்று நபர்களுக்கும், அதன் இரண்டாம் நாள் இரண்டு நபர்களுக்கும், மூன்றாம் நாள் இரண்டு நபர்களுக்கும், 2௦.௦2.2௦26 வெள்ளிக்கிழமை இரண்டு நபர்களுக்கும், 22.௦2.2௦26 ஞாயிற்றுக்கிழமை மூன்று நபர்கள் என மொத்தம் 12 நபர்கள் பாராட்டு பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பாகத் தயாரிக்கப்பட்ட சொற்பொழிவாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களுக்கு எவ்வளவு மதிப்பூதியம் வழங்குவது? விமான பயண கட்டணம் எவ்வளவு? எந்த ஹோட்டலில் தங்க வைக்கப்படுகிறார்கள்? என்பது உள்ளிட்ட பட்டியலை தயாரித்திருக்கிறார்கள்.
மதிப்பூதியம் 25,000 ரூபாய்க்கு குறைவில்லாமல் இருக்கிறது. திருச்சியின் முன்னணி நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல் பிளாசமில் சிலருக்கு அறை ஒதுக்கியிருக்கிறார்கள்.

இந்த உபசரிப்பை குறை சொல்வதற்கில்லை. மேலும், திருச்சி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஒரு விழாவில் இதே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதும் அல்ல வாதம்.
தமிழக அளவில் பிரபலமான ஆளுமைகளை அழைப்பதில் தவறில்லை.
அவர்களுக்கு வழங்கப்படும் உபசரிப்புகளிலும் கருத்து வேறுபாடுகள் இல்லை.
ஆனால், எழுத்தாளர்களை சமமாக பாவிக்காமல், ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவும் போக்குதான் விமர்சனத்திற்குரியதாக அமைந்திருக்கிறது.


சென்ற புத்தகக்காட்சி வரையில், உள்ளூர் அளவில் சிறப்பு செய்யப்படும் எழுத்தாளர்களுக்கு மேடையேற்றி ஒரு சால்வையும் சான்றிதழும் தரமான கேடயத்தையும் பரிசளித்திருந்தார்கள். ஆனாலும், இவ்வளவு பொருட்செலவில் நடத்தப்படும் விழாவில் கௌரவிக்கப்படும் எழுத்தாளர்களுக்கு குறைந்தபட்ச சன்மானமாவது வழங்க வேண்டும் என்பதைத்தான் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இந்நிலையில்தான், உள்ளூர் அளவில் பாராட்டு பெறும் 12 நபர்களுக்கு நபர்களின் பெயர்களும் ஒவ்வொரு நபருக்கும் தலா ரூபாய் பத்தாயிரம் மற்றும் சால்வை ஒன்றும் பரிசளிக்கப்படும் என்பதாக அந்தப் பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் விழாவின் முதல் நாளிலிருந்து 16.௦2.2௦26 திங்கட்கிழமை வரை “பாராட்டு” பெற்ற குறிப்பிட்ட ஏழு நபர்களுக்கும், அந்த பட்டியலில் குறிப்பிட்டிருந்தபடி பத்தாயிரம் ரூபாய் சன்மானம் இதுவரையில் வழங்கப்படவில்லை. மாறாக, வழக்கம்போலவே சால்வையை போர்த்திவிட்டு ஒரு கேடயத்தை கொடுத்து வழியனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரங்கத்தின் கைத்தட்டலோடு, வெறும்கையோடு திரும்பினார்கள்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியில், “நீ யாருகிட்ட கேட்குற அண்ணன்கிட்டதானே கேட்கிற, எவ்வளவு வேனாலும் கேளு” னு சொல்லிபுட்டு வெறும் பையை பிதுக்கிக்காட்டுவதைப்போல, உள்ளூர் எழுத்தாளர்களை வெறும்கையோடு திருப்பியனுப்பியிருக்கிறார்கள் என்பது வேதனையானது அல்லவா? இந்த அவலத்தை, எழுத்தாளர் ஆங்கரை பைரவி தனது முகநூல் பதிவில் “உள்ளூர் இலக்கியவாதிகளுக்கும், அந்த விழாவில் பாராட்டு பெறுபவர்களுக்கும் வாயும் இருக்கிறது. வயிறும் இருக்கிறது. வாழ்க்கையும் இருக்கிறது.” என்று நயமாய் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதுமட்டுமா, சிறார் அரங்கம் பட்டியலில் கதை சொல்லிகளாக இடம்பெற்றிருந்தவர்களுக்கும் மதிப்பூதியம் ரூ 12,500 வழங்குவதாக பட்டியலில் மட்டும் குறிப்பிட்டுவிட்டு, இதுவரை அந்நிகழ்வை நடத்தியவ திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இன்னும் பட்டுவாடா செய்யாமல் இருப்பதும் வேதனையை கூட்டியிருக்கிறது.
இவையெல்லாம், அவர்களே ஆற அமர கலந்தாலோசித்து எடுத்த முடிவுகள். யார் யாரை அழைக்க வேண்டும்? என்ன தலைப்பில் அவர்கள் உரையாற்ற வேண்டும்? யாருக்கு விமான பயணம்? யாரை எந்த இடத்தில் தங்க வைப்பது என்பதையெல்லாம் கலந்தாலோசித்து நிதானமாக தயாரித்த பட்டியல்கள். இந்த முன்தயாரிப்பை மிக இரகசியமாகவும் உள்ளூரைச் சேர்ந்த எழுத்தாளர்களைக்கூட கலந்தாசிக்காமல் தன்னிச்சையாக எடுத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருந்தாலும்; அவர்களே தீர்மானித்த மதிப்பூதியத்தைக்கூட, அதிலும் குறிப்பாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்காமல் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதுதான் இங்கே மீண்டும் மையமான சிக்கலாக நீடிக்கிறது.
”அட நீங்க வேற. புத்தகக்கண்காட்சி தொடங்கி மூன்றாவது நாள்தான் குப்பை கூடையை கொண்டு வந்து வைத்தார்கள். நாவறண்டு போனவங்களுக்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. கேட்டால், வியாபாரம் பண்ணதானே வந்திருக்கீங்க. உங்க செலவுல தண்ணியகூட வாங்கிக்க முடியாதானு கேட்கிறாங்க. சரி, ஸ்டால் போட்டிருக்கவங்க நாங்க வாங்கிக்கிறோம். டெய்லி பஸ் பிடிச்சி பள்ளிக்கூட பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் வந்து செல்கிறார்களே? வயதானவர்களும், சர்க்கரை நோயாளிகளும்கூட வருகிறார்களே? அவர்கள் எங்கே போவார்கள்? என்ற கேள்விக்கு பதிலில்லை. நீண்ட போராட்டத்திற்குப்பிறகு, நாலாவது நாள்தான் நாலு கேனை இறக்கி வைத்து சென்றிருக்கிறார்கள்.” என நொந்துகொள்கிறார்கள், புத்தகக்காட்சியில் ஸ்டால் போட்டிருப்பவர்கள்.
”புக் ஃபேர் தொடங்கி மூனு நாளாச்சு இன்னும் குடிக்க தண்ணீர் கூட வைக்காம இருக்காங்களே”னு மாவட்ட ஆட்சியரிடம் அங்குசம் சார்பில் கேட்டபோது, “அப்படியா, என்னனு பார்க்கிறேன்னு” சொன்னதோடு சரி. அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் கழிச்சுதான் தண்ணீர் ஏற்பாடே நடந்திருக்கு. திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் திருச்சி மாவட்ட ஆட்சியர்தான் இந்நிகழ்வுகளுக்கு முழு பொறுப்பானவர் ஆகிறார்.
நான்கு நாட்களாக புத்தகக்காட்சியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தண்ணீரே வைக்க வில்லை என்ற விவரம்கூட மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்று சேராமல் இருந்திருக்கிறது என்பதும்; அவரது நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றும் ஒரு நாள் கழித்து ஆற அமரத்தான் தண்ணீர் கேன்களும் வந்து சேர்ந்திருக்கிறது என்பதும் இங்கே அழுத்தமாக சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
சம்பந்தபட்ட அதிகாரிகளின் அலட்சியம், மாவட்டத்தின் ஆட்சியருக்கு மட்டுமல்ல; தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கும்தான் அவப்பெயரை ஏற்படுத்தி தந்திருக்கிறது என்பதுதான் அவலமான ஒன்று.
தேர்வு காலத்தில், இவ்வளவு அவசர கோலத்தில் இப்படி ஒரு புத்தகத்திருவிழா அவசியம்தானா? என்ற கேள்வியை எழுப்பியிருந்த நிலையில், அதற்கேற்றார்போலதான் பார்வையாளர்களின் பங்கேற்பும் கவலைக்கிடமாக அமைந்திருக்கிறது. காலி இருக்கைகளை பார்த்து ஆளுமைகளை பேச வைத்த அவலங்களையெல்லாம் என்னத்த சொல்ல? குறிப்பாக, இந்தமுறை விளம்பரம் அறவே இல்லை என்றே சொல்லலாம். ஜம்போ சர்கஸூக்கும், பொருட்காட்சிக்கும் வீதி வீதியாக வாகனங்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நகர் முழுவதும் கண்கவர் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. சுவரொட்டி விளம்பரம்கூட இல்லாமல், எப்படி வருவார்கள் புத்தக்காட்சிக்கு? இதைவிடக்கொடுமை, புத்தக்காட்சியின் மாலை நேர நிகழ்வுகள் அனைத்தும் திருச்சி புத்தகக்காட்சி விழாவுக்கென்றே உருவாக்கப்பட்ட யூடியூப் தளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது என்பது எத்துனை பேருக்கு தெரியும்? நேரலைக்கு சென்றால், பார்வையிடும் ஒரே நபராக நாம் மட்டுமே இருக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?
ஒவ்வொன்றாய் பேச, பேச தலைதான் சுற்றுகிறது. அடுத்த சுற்று பேசுவோம் விரிவாக …
அடிக்குறிப்பும் – அழுத்தமான குறிப்பும் :
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு பல்வேறு தளங்களில் இயங்கும் இலக்கிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அவர்களின் ஆலோசணைகளையும் பெற்று, இப்புத்தக்கண்காட்சியை நடத்தப்படுவதன் உண்மையான நோக்கம் ஈடேறும் வகையில், உரிய முன் ஏற்பாடுகளுடன் தெளிவான திட்டமிடல்களுடன் புத்தகக்கண்காட்சியை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த புத்தகக்காட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டுவதன் நோக்கமேயன்றி … குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல !
இந்த பட்டியல் எல்லாம் எப்படி வெளியானது? யார் வழியாக வெளியாகியிருக்கக்கூடும்? என்ற ஆராய்ச்சியில், பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்காமல், இந்த ஆண்டின் படிப்பினைகளிலிருந்து எதிர்வரும் ஆண்டில் இக்குறைபாடுகள் எல்லாம் எப்படி சரிசெய்யப்பட வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளைத்தான் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான திருச்சி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என்றே திடமாக நம்புகிறோம். குறைகளை ஆதங்கமாக சுட்டிக்காட்டும் மண்ணின் மைந்தர்களான திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் உள்ளக்கிடக்கையும் அதுவொன்றுதான் !
– அங்குசம் புலனாய்வு குழு.




Comments are closed, but trackbacks and pingbacks are open.