திருச்சி கலெக்டர் பெயரில் ஆன்லைன் மோசடி ! உஷார் !
ஆன்லைன் மோசடி கும்பலின் உத்திகளில் ஒன்று, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்து அல்லது போலியான அக்கவுண்ட்டை உருவாக்கி அதன் வழியே மோசடியில் ஈடுபடுவது.
அதுபோலத்தான், திருச்சி மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பிரதிக் தயாள் பெயரில் முகநூல் பக்கத்தை உருவாக்கி, நட்பு பட்டியலில் உள்ளவர்களிடம் கைவரிசையை காட்டியிருக்கிறது, ஆன்லைன் மோசடி கும்பல். மிக சமீபத்தில்தான், தனது முகாம் அலுவலத்தில் இன்ட்ரியர் பணிக்காக வந்திருந்த வடமாநில இளைஞர் ஒருவர், ரீல்ஸ் எடுத்து போட்டது வைரலாகி, சர்ச்சையானது. அந்த சூடு தணிவதற்குள் இப்படி ஒரு விவகாரம்.
திருச்சி கலெக்டர் பிரதிக் தயாளின் புகைப்படம், அரசின் இலட்சினை இடம்பெற்ற அந்த முகநூல் பக்கத்தில் திருச்சியை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் சாட்டிங்கை தொடங்கிய மோசடி கும்பல், ”தனக்கு நெருங்கிய சிபிஆர்எஃப் போலீசார் ஒருவர் பணியிட மாறுதலில் வேறு இடத்திற்கு செல்வதால், அவர் பயன்படுத்தி வந்த பர்னிச்சர் பொருட்களை குறைவான விலைக்கு விற்க விரும்புகிறார். உங்களுக்கு தேவை எனில் பெற்றுத்தருகிறேன்.” என்பதாக மோசடி வலை விரித்திருக்கிறது, அந்தக்கும்பல். உஷாரான பத்திரிகையாளர் முகநூல் பக்கத்தை பிளாக் செய்து வெளியேறிவிட்டார்.
கடந்த ஆண்டில் இதே பாணியில் திருச்சியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் நட்பு பட்டியலில் இருந்த உயர் போலீசு அதிகாரி ஒருவர் இவ்வாறு கேட்டு அனுப்பிய லிங்கை தொட்ட பாவத்துக்கு அக்கவுண்டிலிருந்து பத்தாயிரம் ரூபாயை இழந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த சம்பவமும் நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் சொல்லப்போனால், 2022 இல் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு பெயரிலும், கலெக்டருக்கான சி.யு.ஜி. எண்ணிலிருந்து வாட்சப் வழியாக அவசரத் தேவைக்கு பணம் கேட்டதாக புகார் எழுந்ததும், அதற்கு கலெக்டர் சிவராசு அது மோசடி கும்பலின் கைவரிசை என அறிக்கை வெளியிட்ட சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
இந்த மோசடி கும்பலை நம்பி இன்னும் பலரும் ஏமாறுவதற்கு முன்னர், சம்பந்தபட்ட முகநூல் பக்கத்தை முடக்குவதோடு, ஒரு மாவட்டத்தின் கலெக்டரின் பெயரிலேயே இப்படி ஒரு மோசடியை அரங்கேற்றத் துணிந்த ஆன்லைன் மோசடி கும்பலை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
– அங்குசம் செய்திப்பிரிவு.









Comments are closed, but trackbacks and pingbacks are open.