தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி ஏமாற்றிய 2 பேர் திருச்சியில் கைது !
தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி ஏமாற்றிய 2 பேர் திருச்சியில் கைது !
தமிழகம் முழுவதும் போலி துப்பறியும் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவரை திருச்சியில் சைபா் கிரைம் போலீஸார் 08.08. 2022 அன்று கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், முசிறியைச் சோ்ந்த கிறிஸ்டோபா் என்பவா், காணாமல் போன தனது உறவினரின் மகளை ரகசியமாக கண்டறிய தனியார் துப்பறியும் நிறுவனத்தை இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது, திருச்சி டிடெக்டிவ் ஏஜென்சி trichy detective agency என்ற பெயரின் விளம்பரத்தில் இருந்த எண்ணில் தொடா்பு கொண்டார்
அப்போது, அந்த நிறுவனத்தை நடத்துபவா்கள் கூறியபடி திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று காணாமல் போன பெண்ணின் விவரங்களை கிறிஸ்டோபா் தெரிவித்துள்ளனர். அவா்களும் கண்டுபிடித்து தருவதாகக் கூறி ரூ. 21,000 கட்டணம் பெற்றுள்ளனா். ஆனால், கூறியபடி அந்தப் பெண்ணை கண்டுபிடித்து தராமல், அப்பெண் மீது குறித்து தவறான தகவல்களையும் அந்த நிறுவனத்தினா் கூறியுள்ளனா்.
இதனால் சந்தேகமடைந்த கிறிஸ்டோபா் திருச்சி சைபா்கிரைம் போலீஸில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமார் வழிகாட்டுதலின் பேரில், சைபா் கிரைம் காவல் கண்காணிப்பாளா் தேவராணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பால்வண்ணநாதன் ஆகியோரின் அறிவுருத்தலின்பேரில் காவல் ஆய்வாளா் அன்புச்செல்வன் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் சதீஷ் குமார் (தொழில்நுட்பப் பிரிவு) உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள துப்பறியும் நிறுவனம் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த சதீஷ்குமார்ர் (31), வசந்த் (24) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்தனா். விசாரணையில், தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இவா்கள் போலியாக துப்பறியும் நிறுவனம் நடத்தி வந்ததும், போலி திருமண உதவி மையம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இந்த நிறுவனங்கள் மூலம் தங்களை தொடா்பு கொண்டு வருபவா்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் பெற்றுக் கொண்டு தவறான தகவல்களை தெரிவிப்பது, தனிநபா்களை மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவா்களிடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவா்கள் சைபா் கிரைம் போலீஸில் புகார் தெரிவிக்கலாம் எனவும், இதுபோன்ற போலியான நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.