பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைப் பெருங் கலைஞர் வேலு ஆசானுக்கு பாராட்டு விழா!
திருச்சி மாவட்ட பறை இசை கலைஞர்கள் சார்பாக பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைப் பெருங் கலைஞர் வேலு ஆசான் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது .
இந்நிகழ்விற்கு தமிழக நாட்டுப்புற இசை கலை மன்றத்தின் மாநிலத் தலைவர் வளப்பகுடி வீர சங்கர் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் ஆநிறை செல்வன் என்கிற பேரா.கி.சதீஷ்குமார் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் தம் சிறப்புரையில் தமிழ்நாட்டின் ஆதி இசை தமிழரின் தொல்லிசை தமிழ்ப்பண்ணிசை தமிழ்ப் பண்பாட்டின் இசை ஆதி இசை பறைஇசைதான். தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் பிங்கல நிகண்டு திவாகர நிகண்டு இலக்கியங்கள் காப்பியங்கள் குறிப்பாக சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள் ஆண்டாளின் திருப்பாவை வரை பறை இசைக்கருவி குறித்த குறிப்புகள் சானறாவணங்கள் ஏராளமாக தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது.
இத்தகைய பெருமை மிக்க பறை இசை தமிழர் திணைமரபின் இசை மரபில் முதன்மையானது. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு பறை தமிழர்கள் குறித்துள்ளனர். தமிழருடைய ஒவ்வொரு பண்பாட்டு அசைவுகளிலும் பறை முதன்மை இடம் வகிக்கிறது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் பறை இசை முதன்மையான இடத்தை வகிக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை தெய்வ வழிபாடு திருவிழா தனிமனித குடும்ப நிகழ்வுகள் என யாவற்றிலும் யாதுமாகி பறை முதன்மை அங்கம் வகிக்கிறது. இத்தகைய இசைக் கருவி இசை மரபு தமிழர்களுக்கே உரியது இப்பெருமை மிக்க இசைக்கருவி ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது அல்ல தமிழ் சமூகத்திற்குச் சொந்தமானது.
ஆண் பெண் திருநங்கைகள் என அனைவரும் இன்று இக் கருவியை இசைத்தும் கற்றுக் கொண்டும் கற்பித்தும் வருகிறார்கள் என்பது பெருமைக்குரியது. சமத்துவத்தை நோக்கி மக்களை சாதிய தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து முழங்கும் பறை அனைவருக்கு மானது. இத்தகைய சிறப்பு மிக்க பறையை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து திரைத்துறையிலும் தமிழகப் பண்பாட்டு விழாக்களிலும் தனக்கென்று ஒரு தனித்த இடம் பிடித்து பெருமை சேர்த்து வரக்கூடிய மக்கள் இசை மாண்புமிக்க கலைஞன் பத்மஸ்ரீ வேலு ஆசான் அவர்களை திருச்சி மாவட்ட பறை இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் பெருமையோடு பாராட்டுகின்றோம். புது தில்லியில் தமிழ்நாட்டின் பறை இசைக்கென்று ஒரு தனித்துவத்தை தனித்த அடையாளத்தை பெற்றுக்கொண்ட வேலு ஆசான் தொடர்ந்து இக்கலையில் இன்னும் மென்மேலும் பல்வேறு உயரங்களை எட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறோம் என்று சிறப்புரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பத்மஸ்ரீ வேலு ஆசான் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அவர் தம் ஏற்புரையில் நான் தொடக்க கல்வியைத் தவிர வேறு எந்தக் கல்வியும் கற்காதவன் ஆனாலும் பறை இசைக் கலையில் தொடர்ந்து முனைப்போடு கற்று இன்றைக்கு அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்றுத் தருவதில் நான் பெருமை அடைகிறேன் என்றார். தொடர்ந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் ப தன் உடல் நலத்தையும் குடும்ப நலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் ஒவ்வொரு நிகழ்வு முடிந்த பிறகும் ஒரு குறிப்பிட்ட நிதியை நாம் சேமித்து நமக்கும் நம் குடும்பத்திற்கும் பாதுகாப்பாக உருவாக்கிட வேண்டும் என்றும் கலைகளை வளர்ப்பதோடு நம்மைச் சார்ந்துள்ள குடும்பங்களையும் கவனித்து சமூகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார். ஒவ்வொரு தனிமனித கலைஞனுக்கும் உடல் நலம் குடும்ப நலம் நிதி வளம் இருக்க வேண்டும் எனவே இவற்றை கவனத்தில் கொண்டு ஒழுக்கத்துடன் இந்தக் கலையில் எல்லோரும் புகழ்பெற்று தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்றுத்தரவேண்டும் என்று தனது ஏற்புறையில் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வை ராமச்சந்திரன் ஒருங்கிணைத்தார் .