சென்டர் மீடியன் போட ஏழு வருஷமா? எமன் சாலையான அவலம்!
தமிழகத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் சென்டர் மீடியன் என்றழைக்கப்படும் மையத்தடுப்பு அமைப்பதற்கு ஏழு ஆண்டு காலம் தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் தான் இந்த கூத்து. சுமார் 83 கி.மீ. நீளம் கொண்ட இந்த சாலையில், சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரையில் மையத்தடுப்பே இதுவரையில் இல்லை என்பதுதான் சோகம். இதனால், வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் துயரம் தொடர்கதையாகி போனது. சமீபத்தில் கூட, முசிறி ஆர்.டி.ஓ. கோரமான சாலை விபத்தில் சிக்கி மாண்டு போனார்.
திருச்சி குடமுருட்டி தொடங்கி கரூர் மாயனூர் வரையில் சுமார் 7 முதல் 9 மீட்டர் அளவுக்கு தான் சாலையின் அகலம் இருப்பதாகவும்; சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் விதிப்படி குறைந்த பட்சம் 15 மீட்டர் அகலம் இருந்தால் மட்டுமே மையத்தடுப்பு ஏற்படுத்த முடியும் என்பதால் அதற்கேற்ப சாலையை அகலப்படுத்தும் பணியை தொடர்ந்து தட்டிக் கழித்து வருகிறார்கள் என குற்றம் சாட்டுகிறார், சாலை பயணீட்டாளர் நலக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன்.
“திருச்சி கரூர் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கட்டுப்பாட்டிலும் மற்றொரு பகுதி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பொறுப்பிலும் இருந்து வருகிறது.
மாநில நெடுஞ்சாலை துறையினரை அணுகி சில கோரிக்கைகளை தாமதமாகவேணும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். தேசிய நெடுஞ்சாலை துறையினரை எளிதில் அணுகவே முடியாது. அணுகி சொன்னாலும் அவ்வளவு சீக்கிரம் எதுவும் நடக்காது.
ஒரு பக்கம் காவிரி ஆற்றின் கரையும் மற்றொரு புறம் ரயில்வே தண்டவாள பாதையும் அமைந்திருப்பதை காரணம் காட்டி சாலை விரிவாக்கத்தை புறக்கணித்து வருகிறார்கள்” என்பதாக குற்றச்சாட்டுகிறார் அய்யாரப்பன்.
தொடர் விபத்துகளை சந்தித்து வரும் திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில், திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கும் அரைவட்ட சாலையை இணைக்கப் போகிறார்கள். அது இன்னும் சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார் அய்யாரப்பன்.
— நேர்காணல்: வே.தினகரன்
முழுமையான நேர்காணலை காண
சென்டர் மீடியன் போட ஏழு வருசமா?
Comments are closed, but trackbacks and pingbacks are open.