திருச்சிக்கு வந்தாச்சு தலை சுற்றல் பிரச்சினைக்கான தனி கிளினிக் !
மாறும் கால சூழல்களுக்கேற்ப மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்களும் புதிய பரிமாணங்களை எடுத்து வருகின்றன. இளம் வயதிலேயே சர்க்கரை, இரத்த அழுத்தம், மூளை நரம்பியல் குறைபாடுகள் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதன் காரணமாகவே, இயல்பாக உணரப்படும் அசௌகரியங்கள்கூட, இந்த நோயின் அறிகுறியாக இருக்குமோ? அந்த நோயின் வெளிப்பாடாக இருக்குமோ? என்ற அச்சத்தையும் தோற்றுவிக்கின்றன.
இந்த வரிசையில், முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் அறிகுறிகளுள் ஒன்று தலை சுற்றல். சர்க்கரையின் அளவு குறைந்தாலும் தலை சுற்றல் ஏற்படலாம். மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்ட தடையின் காரணமாகக்கூட தலை சுற்றல் ஏற்படலாம். இது தவிர, தலைசுற்றல் ஏற்படுவதற்கான மருத்துவ ரீதியான காரணங்கள் பல இருக்கின்றன. இதுதான் என்று அலட்சியப்படுத்திவிடவும் முடியாது. அதே நேரத்தில் பீதியடையவும் அவசியமில்லை. தகுந்த மருத்துவர்களின் ஆலோசனை இங்கே மிக மிக அவசியமாகிறது.
இந்த சிக்கலை உணர்ந்துதான், புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இயங்கிவரும் திருச்சி காவேரி மருத்துவமனை தலைசுற்றல் (Syncope) பிரச்சனையை கையாள்வதற்கென்றே தனிப்பட்ட மருத்துவ சேவைப் பிரிவை தொடங்கியிருக்கிறது.
சிறப்பு கிளினிக் 2025 ஆகஸ்ட் 24ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் ஏ.வி. சுப்ரமணியன் மற்றும் புகழ்பெற்ற எலெக்ட்ரோபிசியாலஜிஸ்ட் டாக்டர் உலாஸ் எம். பாண்டுரங்கி அவர்களால் தொடக்கமிடப்பட்டது.
இந்நிகழ்வில் டாக்டர் வெங்கிடா சுரேஷ் (குழு மருத்துவ இயக்குநர்), டாக்டர் செந்தில் குமார், டாக்டர் செங்குத்துவன் (காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர்கள்), டாக்டர் ஜவாஹர் பாரூக் (TANCSI – தமிழ்நாடு இந்திய இருதயவியல் சங்கத் தலைவர்), டாக்டர் ஜோஸ் ஜாஸ்பர் (நரம்பியல் துறை தலைவர்), மற்றும் டாக்டர் ஜோசப் (முன்னணி எலெக்ட்ரோபிசியாலஜிஸ்ட்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்து முக்கிய விருந்தினர்களும், தலைசுற்றல் பிரச்சனையுடன் வருகை தரும் நோயாளிகளுக்கான முழுமையான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக இந்த தனிப்பட்ட கிளினிக் மிகுந்த பயனளிக்கும் எனக் குறிப்பிட்டனர். இந்த கிளினிக்கில் மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள், இதய நிபுணர்கள் மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் ஒன்றிணைந்து சேவையளிக்க உள்ளனர்.
மேலும், அடிப்படை தானாக இயங்கும் பரிசோதனை (Autonomic Test), ஹோல்டர் (Holter), எலெக்ட்ரோபிசியாலஜி பரிசோதனைகள் மற்றும் டில்ட் டேபிள் பரிசோதனை போன்ற சிறப்பு பரிசோதனைகள் மூலம், தலைசுற்றலுக்கான காரணங்களை (சாதாரணம் முதல் உயிருக்கு ஆபத்தான நிலைகள் வரை) கண்டறிந்து, சரியான சிகிச்சை மற்றும் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு இத்தகைய தனிச்சிறப்பான பிரிவை உருவாக்கியிருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
— இரா.சந்திரமோகன்.