புகுந்த வீட்டில் சிறப்பாகவும் -பிறந்த வீட்டை மறக்காமலும் இருப்பவர் நேரு -மு க ஸ்டாலின் பேச்சு!
திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 1,084 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். இதில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறுகையில், அமைச்சர் நேரு அவர்கள் மீண்டும் ஒரு மக்கள் கடலை இங்கே உருவாக்கி இருக்கிறார். இவருக்கு மாநாடு போன்ற கூட்டத்தை எழுப்புவது என்பது சர்வ சாதாரணம், டீக்கடையில் நின்று டீ குடிப்பது போன்று. அதனால் தான் நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு என்று நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்.
மேலும் நேருவுக்கு நிகர் நேரு தான் என்று நான் பல்வேறு முறை குறிப்பிட்டுள்ளேன். அதோடு எதிரியை நேருக்கு நேராக எதிர்ப்பதிலும் நட்பை நெஞ்சுக்கு நேராக அரவணைப்பதிலும் நிகரானவர் நேரு. இப்படி நான் திருச்சிக்கு வரும் போதெல்லாம் சொல்வது மீண்டும் மீண்டும் எனக்கு எதிரொலியாக கேட்கிறது.
நேரு எங்கு பொறுப்பு போட்டாலும் திறம்பட செயல் படுபவர், சேலத்திற்கு நேருவைப் பொறுப்பாக நியமித்த பிறகு சேலத்திலும் இதே போன்ற அரசு நிகழ்ச்சியை நேரு அவர்கள் முன்நின்று நடத்தினார்.
அங்கிருக்கக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பில் இருக்கும் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அந்த நிகழ்ச்சிக்குக் காரணமாக இருந்திருந்தாலும், முறையோடு, செழிப்போடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு, கம்பீரமாக அதைப் பொறுப்பேற்று நடத்திக் காட்டியவர் நேரு. முதலில் அவர் திருச்சியில் நடத்தாமல் சேலத்தில் நடத்தி முடித்துவிட்டு – அதன்பிறகு தான் திருச்சிக்கு வந்திருக்கிறார்.
இது அவருடைய பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது. சில பெண்கள் – திருமணம் முடித்துச் சென்றதும் புகுந்த வீட்டுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். அது தவறில்லை. அது போன்று தான் நேரு அவர்களும் புகுந்த வீடான சேலத்தில் சிறப்பாக நடத்திவிட்டு – பிறந்த வீட்டையும் மறக்காமல் இங்கும் அவர் சிறப்பாக நடத்திக் கொண்டு இருக்கிறார்.