திருச்சி மக்கள் ஏமாளியாகும் பொருட்காட்சி
திருச்சி மக்கள் ஏமாளியாகும் பொருட்காட்சி
கரூர் பைபாஸ் சாலையில் ஶ்ரீ விக்னேஷ் வித்யாலயா ஏற்பாட்டில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலக அதிசயங்களை மையமாக கொண்ட இக்கண்காட்சி கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 14 ல் ஆரம்பிக்கபட்டது. கலைஞர் அறிவாலயம் எதிரே அமைக்கபட்டுள்ள இந்த கண்காட்சி “வீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சி” என்று விளம்பர படுத்தி கொண்டாலும் டவர் பேன் ஸ்டால் தவிர்த்து வேறெந்த வீட்டு உபயோக பொருட்களுக்கான கடைகளும் தென்படவில்லை.
கலைஞர் அறிவாலயம் எதிரில் அசுத்தமான கால்வாய் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதனால் கொசுக்கள் மற்றும் பாட்சாக்களுக்கு பஞ்சம் இல்லை. இலக்கு பார்வையாளர்களாக குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பான ஒரு இடம் தேர்வு செய்திருக்கலாம் அமைப்பாளர்கள்.
உள்ளே சென்றபோது நுளைவு கட்டணம் நாற்பது ரூபாய் என்றும் பார்க்கிங் கட்டணம் இருபது ரூபாய் என்றும் தெரிந்து கொண்டோம். இருபுறம் உள்ள பொம்மைக் கடைகளை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த ஓரிரு குடும்பங்களுடன் நாம் நகர்ந்து செல்ல இரண்டு குழந்தைகளின் உரையாடலை கேட்க நிகழ்ந்தது. நான்கு வயது தம்பியை ஆசுவாசபடுத்த ஐந்து வயது மதிக்கதக்க அக்கா கூறியதாவது: “இங்க கோல்டியே (க்வாலிடி) இருக்காது. சீக்கிரம் உடைஞ்சிரும்”. பொருட்காட்சி குறித்து மக்களின் கருத்து இதுவே என நிருபணம் ஆகிறது.
கடைகளை கடந்து விளையாட்டு பகுதிக்கு சென்றோம். அங்கு மொத்தமே ஏழு விளையாட்டு கருவிகள் தான் இருந்தன. அதில் இரண்டு பழுதடைந்து காணபட்டன. இரண்டு விளையாட்டுக்கள் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கானது. ஒவ்வொரு சவாரிக்கும் குறைந்தது ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. உணவு பொருட்களின் விலையும் சளைத்ததல்ல.

கை ராட்டினம் இயக்கும் ஒருவரிடம் தொழில் பற்றி விசாரித்தபோது இந்த இயந்திர உலகில் பிளைப்பது கடினம் என்றும் மக்கள் இயந்திரங்களையே விரும்புவதாகவும் சலித்து கொண்டார்.
குழந்தை தொழிலாளர்களை நியமிப்பது சட்டபடி குற்றமானாலும் நிறைய சிறுபிள்ளைகள் வேலை செய்வதை காண முடிந்தது. நாங்கள் வெளியேறும் முன் ஈரோட்டை சேர்ந்த ஒரு ப்ளாஸ்டிக் வியாபாரியிடம் உரையாடிய போது அவர் கூறியதாவது: ” போட்ட முதலீடு கூட கிடைக்கலபா. நாலு வருஷமா பொழப்புக்காக எக்சிபிஷன்ல ஸ்டால் போடுறேன். ஆனால் இந்த வருஷம் நஷ்டம்தான்பா”. என்றார்.
இந்த வருடம் கோடை காலத்தில் ஆரம்பம் முதலே மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாத நிலையிலேயே திருச்சியில் அமைந்திருந்த பொருட்காட்சிகள் இருந்தன. அதற்கு காரணம் மக்களை ஈர்க்கிரதோ இல்லையோ ஏதாவது விளையாட்டுகளை உள்ளே வைத்து குழந்தைகளை மட்டும் ஈர்த்துவிட்டால் போதும் என்ற நோக்கத்துடனே வடிவமைத்திருப்பதே. அதேபோல எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் நுழைவுக்கட்டணம் அதிகம் வசூல்செய்வதால், மக்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும் என்பதையும் பொருட்காட்சி அமைப்பாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.