திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு – திருச்சி எஸ்.பி. வெளியிட்ட பகீர் தகவல்கள் !
திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு – திருச்சி எஸ்.பி. வெளியிட்ட பகீர் தகவல்கள் !
திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் இன்று (21.09.23) பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியிருக்கிறார். மலிவான விலையில் வெளிநாட்டு தங்கத்தை கொடுக்கிறோம் என்று கூறி, போலியான தங்கக்கட்டிகளை வழங்கி ஏமாற்றுவது அல்லது அவர்களே அடியாட்களை வைத்து பணத்தை பறித்துக்கொண்டு துரத்திவிடுவது என்ற பாணியில் மோசடியில் ஈடுபட்டிருப்பதை பத்திரிகையாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டிய எஸ்.பி. வருண்குமார், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இது என்ன புது உருட்டா இருக்கேன்னு சொல்ற மாதிரிதான் டிசைன் டிசைனாக மோசடிக்கும்பல்கள் படையெடுத்துக் கிளம்பி வருகின்றன. இதில் புதுரகம் போல இது.
துவரங்குறிச்சியை சேர்ந்த அன்வர்பாஷா என்பவர் தன்னிடம் உள்ள வெளிநாட்டு தங்கத்தை குறைந்தவிலைக்குத் தருவதாகக்கூறி தஞ்சாவூரைச் சேர்ந்த ஜியாவுதீன் என்பவரிடம் 15 இலட்சம் விலை பேசியுள்ளார். ஜியாவுதீன் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் 14.5 இலட்சம் ரொக்கப்பணத்துடன் அன்வர்பாஷா சொன்ன இடத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது அடியாட்கள் பணத்தை பறித்து சென்றிருக்கின்றனர். துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் ( 224/2023 ) வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கேரளாவைச் சேர்ந்த அனீஸ் ஜேம்ஸ், மதுரையைச் சேர்ந்த சக்திவேல், திருவண்ணாமலையைச் சேர்ந்த பெருமாள், புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன் ஆகிய நால்வரை தற்போது கைது செய்திருக்கின்றனர்.

மேலும், கடந்த ஜனவரியில் இதே பாணியில் மணப்பாறை மஞ்சம்பட்டியில் பாலசுப்ரமணியன் என்பவரை ஏமாற்றி 10.5 இலட்சத்தை பறித்து சென்றதும் இதே கும்பல்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களிடமிருந்து போலி தங்கக்கட்டிகள்; 2.7 இலட்சம் ரொக்கம்; 21 செல்போன்கள்; போலி பத்திரங்கள், சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருக்கின்றனர். போலீசாரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக இவர்கள் பயன்படுத்திய சிவில் ஜட்ஜ் பெயர் கொண்ட போலி அடையாள பலகையையும் கைப்பற்றியுள்ளனர்.

தனிப்படை போலீசாரின் துரித நடவடிக்கையை பாராட்டிய எஸ்.பி., பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக தான் ஏற்கெனவே அறிவித்திருந்த வாட்சப் எண்ணை ( 94874 64651 ) பொதுமக்கள் மத்தியில் ஊடகங்கள் வாயிலாக பிரபலபடுத்துங்கள் என்ற வேண்டுகோளையும் விடுத்திருக்கிறார். இந்த வாட்சப் எண் வழியே, பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற உபயோகமான பல்வேறு தகவல்களிலிருந்து வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
– ஆதிரன்.