பக்தர்களின் நலன் காக்க “பச்சை பட்டினி விரதம்” தொடங்கிய சமயபுரம் மாரியம்மன்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் முதன்மையானது. வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை மொத்தம் 28 நாட்கள் , சமயபுரம் மாரியம்மன், சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை நோக்கி தவம் இருந்து மாயாசுரணை வதம் செய்த பாவம் நீங்கி ,
அதனால் ஏற்பட்ட உக்கிரத்தைத் தணிக்கவும், உலக நன்மைக்காகவும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு எவ்வித நோய் நொடிகளும் அண்டாமல், அனைவரது நலன் காக்கவும், மரபு மாறி மாரியம்மனே பச்சை பட்டினி விரதம் இருப்பது இத்திருக்கோயிலின் தனிப்பெரும் சிறப்பம்சமாகும்.

இந்த 28 நாட்களும் இத்திருக்கோயிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. அதற்கு பதிலாக துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே அம்மனுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது.
அதன்படி இன்று அதிகாலை கோவில் கொடிமரம் முன்பு ,விக்னேஸ்வர பூஜை புண்ணியாகவாசனம் அனுக்ஞை, வாஸ்துசாந்தி , அங்குரார்ப்பணம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி எஸ் பி இளங்கோவன்கோவில் இணை ஆணையர் பிரகாஷ், மணியக்காரர் பழனிவேல் உள்ளிட்டோர் தலைமையில் கிராம முக்கியஸ்தர்கள் ,பக்தர்கள் பூக்கள் நிரம்பிய தட்டுக்கள் , பூக்கூடைகளை தங்கள் கைகளில் ஏந்தியபடி, முன்னதாக திருக்கோயில் யானை மீது பிரதான பூக்கூடையை வைத்து மேளதாளங்கள் முழங்க நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை சாற்றுபடி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து காலை 07-00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூச்சொரிதல் விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி எஸ் பி இளங்கோவன் தலைமையில் கோவில் இணை ஆணையர் பிரகாஷ் அறங்காவலர்கள் பிச்சைமணி ராஜ சுகந்தி லட்சுமணன் மற்றும் திருக்கோவில் அலுவலர்கள் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து வர இருக்கின்ற ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புறநகர் பகுதியில் இருந்தும்ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நறுமண பூக்களை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூச்செரிதல் விழாவிற்கு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பு கருதி சமயபுரம் நால்ரோடு கடைவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருச்சி, பெரம்பலூர், நாமக்கல்,புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து கோவிலுக்கு பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
மேலும் அக்னி சட்டி ஏந்தியும், அழகு குத்தியும், கரும்புத்தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் 3 டிஎஸ்பி 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இன்று காலை முதல் நாளை (திங்கட்கிழமை ) காலை வரை பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
— அங்குசம் செய்திப்பிரிவு.