“எனது வெற்றிக்கு காரணகர்த்தாக்கள் யார்?” தயாரிப்பாளரான பெண் பத்திரிகையாளர் சொன்ன நியூஸ்!
பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். மார்ச் 14-ல் படம் ரிலீஸ் ஆவதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 07-ஆம் தேதி நடந்தது.
முதலில் பேசிய தயாரிப்பாளர் கவிதா
“என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் தினமலர் நிறுவனமும் இங்கிருக்கும் அத்தனை பேரும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
நான் ஒரு படம் தயாரித்திருக்கிறேன். அந்த விழாவிற்கு தினமலர் சார்பாக நீங்கள் வரவேண்டும் என்று எனது பாஸ் ரமேஷிடம் கேட்டபோது 38 ஆண்டுகளாக ஊழியராக இருந்து இப்போது முதன்மை மக்கள் தொடர்பாளராக இருக்கும் கல்பலதா வை அழைத்துச் செல் என்று கூறினார்கள். இவர் என்னுடைய குறும்படத்திற்கும் சிறப்பு விருந்தினராக வந்தார் அவருக்கு மிக்க நன்றி.
ராபர் படம் பெரிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது. ஆகையால், இனி சிறிய படத்திற்கு நான் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
இப் படம் மட்டுமல்லாது இனி அடுத்தடுத்து நிறைய படங்களோடு பயணிக்கப் போகிறோம். நாம் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அதில் உழைப்பும், உண்மையும்,உறுதியாக இருந்தால் நாம் நினைத்த இலக்கை அடையலாம் என்ற மிகப்பெரிய அனுபவத்தை இந்தப் படம் எனக்கு கொடுத்திருக்கிறது.
பெண்கள் தானே என்று யோசித்துக் கொண்டே இருந்தால் அதே இடத்தில் தான் இருக்க வேண்டும். எந்தப் பக்கமும் திரும்பாமல், நம்முடைய பயணம் என்ன? அடுத்த அடி என்ன? எதை நோக்கிப் போகப் போகிறோம்? என்பதை யோசித்தால் எந்த தடங்கலையும் சந்திக்க வேண்டியதில்லை. நம்முடைய பாதையும் பயணமும் வெற்றியை நோக்கி மட்டும் தான் போகும். இந்த துறைக்கு நிறைய பெண்கள் வந்திருக்கிறார்கள் இருப்பினும் இன்னும் நிறைய பெண்கள் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இந்தப் படம் மூலம் நான் ஒரு புதிய அடியை எடுத்து வைத்திருக்கிறேன். இந்தப் பயணமும் நிச்சயமாக ஒரு பாதையை போட்டு கொடுத்திருக்கிறது. உங்கள் துணையோடு இந்தப் பாதையில் பலரை கைபிடித்து அழைத்துச் செல்வேன்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் என்னுடைய ஊர்க்காரர். அவரிடம் எப்போது வேண்டுமானாலும் உரிமையோடு போன் செய்து பேசுவேன். எல்லாப் படமும் நல்ல படம் என்று சொல்கிறீர்களே, நல்ல படம் என்றால் என்ன என்று சில சமயம் மிரட்டிக் கூட இருக்கிறேன். ஒவ்வொரு படத்தை பற்றியும் அபிப்ராயம் கேட்பார்.
இங்கிருப்பவர்கள் அனைவரும் சிறிய படத்திற்கு உதவி செய்பவர்கள் தான். என்னோடு பயணித்து எனக்கு பாதை போட்டுக் கொடுத்தவர்கள். என்னுடைய இந்த அழகான பயணத்தில் இன்னும் பலரை அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன். நான் நிகழ்ச்சித் தொகுப்பு செய்தாலும், புது முயற்சிகள் எடுத்தாலும் இங்குள்ள பத்திரிகையாளர்களிடம் புகைப்படம், காணொளி மற்றும் செய்திகளை வெளியிட்டு அனுப்புங்கள் என்று உரிமையோடு கூறுவேன். அவர்களும் மறுநாளே எனக்கு அனுப்பி விடுவார்கள். அந்தப் பாசத்திற்கு ஈடு இணை கிடையாது.
அக்காவாக தங்கையாக தோழியாக எனக்கு ஆதரவைத் தரும் அனைவருக்கும் நன்றி. என்னுடைய எல்லா நல்லது கெட்டதிலும் என் அம்மா என்னுடனே இருந்திருக்கிறார். எனது கணவர் குழந்தைகள் மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் நன்றி. இவர்களுடைய ஆதரவு இல்லை என்றால், பிரச்சினைகள் போராட்டங்களைத் தாண்டி ஒரு பெண்ணால் தனித்து நின்று சாதிக்க முடியாது. அதேபோல், தைரியம், தன்னம்பிக்கை, துணிவு, உண்மை இந்த சக்தி பெண்களிடம் இருந்தாலே ஜெயித்து விடலாம்.
வந்திருந்த அனைவருக்கும் நன்றி. ராபர் படம் வெற்றியடைய வேண்டிக் கொள்கிறேன்” என தனது பேச்சை முடித்தார்.
வாழ்த்திப் பேசியவர்கள்…..
நடிகர்& இயக்குனர் தியாகராஜன்
“கவிதா மேலும் பல சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்தப் படத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”.
நடிகை அம்பிகா
“இதில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என்பது நண்பர்களாகிய உங்கள் அனைவரின் கைகளில் உள்ளது. இதை ஒரு கடமையாக எடுத்து இப்படத்தை வெற்றிப்படமாக்குவோம்”.
கலைப்புலி எஸ். தாணு
“கவிதா என் மகள் மாதிரி. அவருடைய தமிழ் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அவர் நேரில் பேசினால், சொல் புதிதாக இருக்கும். சொல்லின் பொருள் புதிதாக இருக்கும். சொல்லின் சுவை பெரிதாக இருக்கும். அப்படிப்பட்டவர் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன் என்று நேற்று முன்தினம் தான் கூறினார். படத்தின் நாயகன் சத்யா வருங்காலத்தில் உயர் சிற்பியாக வருவார் என்று வாழ்த்துகிறேன் “.
தினமலரின் முதன்மை மக்கள் தொடர்பாளர் கல்பலதா,
“கவிதா எங்களில் ஒருவர். அவரை தயாரிப்பாளராக பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தினமலர் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நீங்களும் எப்போதும் எங்களுடன் தான் இருப்பீர்கள். படகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் “.
நடிகை ரம்பா
” நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு தெரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றாக இங்கு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர், இயக்குனர் என்று யாராக இருந்தாலும் எங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர்கள் தான்.
பெண் பத்திரிகையாளராக இருந்து, ஒவ்வொரு படியாக சொந்த உழைப்பில் ஒரு படத்தை கவிதா தயாரித்திருப்பது பெருமையாக இருக்கிறது. எனவே உங்களில் ஒருவரான கவிதாவின் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து மக்களிடம் சேர்த்து வெற்றிப் படமாக கொண்டு வருவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது”.
இயக்குனர் பாக்யராஜ்
“இம்ப்ரெஸ் பிலிம்ஸ் மாதிரி படத்தின் பேரும் இம்ப்ரெஸ்ஸாக தான் இருக்கிறது.
கவிதாவிற்கு இவ்வளவு பேர் வந்து ஆதரவு கொடுப்பதற்கு காரணம் அவருடைய நல்ல குணம்தான். சும்மா எல்லோரும் முன்னுக்கு வந்துவிட முடியாது. ஆணுக்குப் பின் பெண் இருக்கிறாள் என்பது போல, கவிதாவிற்கு பின் பல ஆண்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே நல்ல விதத்தில் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படத்திற்காக பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விழாவில் கலை இயக்குனரால் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த பொக்கிஷப் பெட்டியில் சங்கிலி மற்றும் கிரெடிட் கார்டு மூலம் கோர்த்து செய்து இருந்த ‘ராபர்’ இசைத்தகட்டை தாணு, தியாகராஜன், பாக்யராஜ் வெளியிட அம்பிகா, ரம்பா இருவரும் பெற்றுக் கொண்டார்கள்..
விழாவில், மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், பெண் பத்திரிகையாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்த நினைவுப் பரிசை அம்பிகா ராதா இருவரும் சேர்ந்து வழங்கினர். வரும் வெள்ளிக் கிழமை (14ம் தேதி) வெளியாகிறது ‘ராபர்’-ஐ சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் ரிலீஸ் பண்ணுகிறார்.
— மதுரை மாறன்.