இதோ எந்தன் தெய்வம் முன்னாலே … திருச்சியில் சேவை என்னும் ஆலமரம் !
திருச்சி மாவட்டத்தின் ஆட்சியராக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி வை.மூர்த்தி, திருச்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று, ”இவர்கள் தான் எனது இரு கண்கள் போன்றவர்கள்” என்பதாக நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருந்தார்.

அவர் சுட்டிக்காட்டிய இருவரில் ஒருவர் சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 2025 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் சிறந்த சேவை நிறுவனம் என்ற விருதை முதல்வர் கரங்களால் பெற்ற Society for education village action and improvement (SEVAI) தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் – இயக்குநர் சேவை கோவிந்தராஜ். மற்றொருவர், நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதை பெற்ற ஸ்கோப் சுப்புராமன்.
நினைத்தால் தூக்கம் வராது …
”அரசுக்கு இணையாக திருச்சி மாவட்டத்தில் இயங்கிவர்கள் இவர்கள். இவர்கள் செயல்படுத்திய பல திட்டங்கள் அரசின் திட்டங்களாக பின்னாட்களில் மாறியிருக்கின்றன. இரவு பகல் பாராத இவர்களது களப்பணிகளை நினைத்தால் தூக்கம் வராது.” என்பதாக அவர்களது சேவை மனப்பான்மையை பதிவு செய்திருந்தார், வை.மூர்த்தி ஐ.ஏ.எஸ்.
சேவை – தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகள் மற்றும் சமூக சேவையில் கால்தடம் பதித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்த சேவை கோவிந்தராஜூவின் சமூகப்பணியை பாராட்டும் வகையில், ஆக-29 அன்று பெட்டவாய்த்தலை சேவை சாந்தி மெட்ரிக் மேநிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில்தான் அவர் இவ்வாறு பேசியிருந்தார்.
இவ்விழாவில், திருச்சிராப்பள்ளி மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிராமியம் நாராயணன், பத்மஸ்ரீ ஸ்கோப் சுப்புராமன், அறிவொளி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் விஞ்ஞானி ஜெயராமன், முன்னாள மத்திய அரசின் கள விளம்பரத்துறை அதிகாரி தெரசநாதன், லயன் நடராஜன், டாக்டர் சங்கரி சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஓசோன் விருதுகள் …
இதனை தொடர்ந்து, ஆக-30 இந்திய சமூக சேவகர் தினத்தை அனுசரிக்கும் வகையில், தென் மண்டல தொடர் கல்வி வாரியம் – ஓசோன் (ozone) அமைப்பின் ஒருங்கிணைப்பில், விழா ஒன்றை திருச்சி கலையரங்கம் அரங்கில் நடத்தியிருந்தார்கள். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி, மற்றும் தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றத்தின் துணைத் தலைவர் விடியல் குகன் (எ) கருணாநிதி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில், சிறந்த சேவை புரிந்த 30-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு ஓசோன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
கருமம் சிதையாமல் …
சேவை- தொண்டு நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் மற்றும் இயக்குநர் சேவை கோவிந்தராஜூவின் அரை நூற்றாண்டு கால தன்னலமற்ற சேவையை பலரும் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து எடுத்துரைத்தனர்.
”கொரோனா ஊரடங்கு காலத்தில், உலகமே ஊடரங்கி இருந்த நேரத்தில் தெருவோரம் வசிக்கும் வீடற்றவர்கள் மூன்று வேளை உணவுக்கு எங்கே போவார்கள் என்பதை யோசித்தோம். லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நாங்கள் நிதியுதவி வழங்க முன்வந்தோம். அப்போதைய ஆட்சியர் சிவராசுவிடம் பேசினோம். இத்தனை பேருக்கு எங்கே சமைப்பது என்ற கேள்வி எழுந்தது. கோவிந்தராஜ் தனது கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபத்தை கை காட்டி இங்கே சமைத்துக் கொள்ளுங்கள் என்றார். சமைப்பதை விட, அதை பக்குவமாக பேக் செய்து அவர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதனை 45 நாளைக்கு நேரம் தவறாது, அவரது உதவியோடு செய்து முடித்தோம். கடைசியில் கேஸ் சிலிண்டருக்கான செலவு மட்டுமே ஒரு இலட்சம் ரூபாயை தாண்டியது. அதையும் கருணை உள்ளத்தோடு அவரே ஏற்றுக் கொண்டார். ”கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு / உரிமை உடைத்து இவ்வுலகு” (குறள்-578) என்ற வள்ளுவன் வாக்குப்படி, எடுத்தக் காரியத்தை சிதையாமல் செய்து முடிப்பவர் சேவை கோவிந்தராஜ். உன்னத சேவை புரிந்தவர்களை பாராட்ட உலகை சுற்றத் தேவையில்லை, தாய்-தந்தையரை சுற்றி ஞானப்பழத்தை பெற்றதை போல சேவை கோவிந்தராஜ் ஒருவரை பாராட்டினாலே அது சேவை மனப்பான்மை கொண்டோர் அனைவரையும் பாராட்டியதற்கு ஈடாகும்” என்பதாக புகழாரம் சூட்டினார் லயன்ஸ் மாவட்ட தலைவர் நடராஜன்.
முன்னுதாரணமான மனிதர் …
இதனை தொடர்ந்து பேசிய முனைவர் இளஞ்செழியன், “எம்.ஏ.சோசியல் ஒர்க் முடித்துவிட்டு புராஜெக்ட் ஒன்றுக்காக சேவை கோவிந்தராஜூவை அணுகினேன். சாக்சீடு, அறிவொளி இயக்கத்தில் பணியாற்றினேன். அப்போது, வேறொரு சேவை நிறுவனத்தில் பணியாற்றி அனுபவம் பெறுவதற்காக நீண்ட விடுப்பு தேவைப்பட்டது. அதுபோன்ற அனுமதி வழங்கிய முன்னுதாரணம் இல்லை. ஆனாலும், எனக்கு தனிச்சிறப்பாக அவரது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஐந்து ஆண்டுகள் எனக்கு சிறப்பு அனுமதி வழங்கினார். இதுபோன்ற துணிச்சலான, முன்னுதாரணமான முடிவு எடுப்பதற்கே தனி மன உறுதி வேண்டும். அதனை சேவை கோவிந்தராஜூவிடம் பார்க்க முடியும். பொதுவில், தனக்கு நிகராக யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். அதுவும் என்னை போன்று களத்தில் சிறப்பாக செயல்படும் நபர்களை வளர அனுமதிக்கவே மாட்டார்கள். தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். ஆனால், சேவை கோவிந்தராஜு இதற்கு நேரெதிரானவர்.
இன்னும் கற்றுக்கொள்ள களத்துக்கு செல்பவர்…
அந்த காலத்தில் செயல்பட்ட வி.ஆர்.ஓ. என்ற முன்மாதிரி தொண்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர் அவர். மற்றவர்கள் செய்யாததை செய்பவர். தான் செய்ததை அப்படியே அரசையும் செய்ய வைப்பதில் கில்லாடி அவர். எப்போதும் எனக்குத் தெரியும் என்று அணுகியதே இல்லை. ஆலோசனை எவர் இடத்திலிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை உடையவர். இப்போதும்கூட, வயதை காரணம் காட்டி தட்டிக் கழிக்காமல், நேரடியாக களத்திற்கே சென்று அந்த திட்டத்தின் செயல்பாடுகளை நேரடியாக கண்டு உணர வேண்டும் என மெனக்கெடுபவர்.
தொண்டு நிறுவனங்களின் தந்தை – சேவை திலகம் …
முக்கியமாக, தற்போதும்கூட சேவை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சேவை நிறுவனம் தொடங்கிய நாளிலிருந்து இப்போது வரையில் ஒன்றல்ல இரண்டல்ல 40 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விசயம். 30 வருடம், 20 வருடம் தொடர்ந்து பணியாற்றி வருபவர்கள் பலர் இருக்கிறார்கள்.
இவரை தொண்டு நிறுவனங்களின் தந்தை என்று சொல்வதே மிகச்சரியானது. இவர் எப்போதும் எங்கும் தன்னை முன்னிலைப்படுத்தாமல், தனது திட்டத்தை முன்னிலைப்படுத்தியவர். கடந்த 50 ஆண்டுகால இவரது சமூக செயல்பாட்டு அனுபவங்களை தொகுத்து தனி நூலாக வெளியிட வேண்டும். அது சமூக சேவை புரிபவர்களுக்கு பாடத்திட்டமாக அமைய வேண்டும். தென்னிந்திய தொண்டு நிறுவனங்களின் தந்தை – சேவை திலகம் என்ற பட்டமும் இவருக்கு வழங்கி கௌரவிக்க வேண்டும். ” என்பதாக, ஒட்டு மொத்த அரங்கையும் மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்கு உணர்வுப்பூர்வமான உரையை நிகழ்த்தி அமர்ந்தார், முனைவர் இளஞ்செழியன்.
ஈதல் இசைபட வாழ்தல் …
நிறைவாக பேசிய முன்னாள் நீதிபதி குகன், அவருக்கே உரிய பாணியில் கலகலப்பான உரையை நிகழ்த்தினார். “ஏன் சமூக சேவையை செய்ய வேண்டும்? சிலர் ஹாப்பியாக இதை செய்கிறேன் என்பார்கள். வேறு சிலர் இதனால் எனக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. அதனால் ஹாப்பிக்காக செய்கிறேன் என்பார்கள். வேறு சிலர், சமூக சேவை செய்தால் எல்லோரும் பாராட்டுவார்கள். புகழ் கிடைக்கும். அந்த புகழுக்காக செய்கிறேன் என்பார்கள்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது / ஊதியம் இல்லை உயிர்க்கு. (குறள்: 231) என்ற குறள் படி வாழ்ந்து வருபவர் சேவை – கோவிந்தராஜ். நாம் பிறந்த, நம்மை வாழ வைத்த வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் திருப்பிக் கொடுக்க வேண்டாமா? நம்மை ஆளாக்கிய இந்த சமுதாயத்துக்கு நாமும் திருப்பிக் கொடுக்க வேண்டுமல்லவா? அதைத்தான் இவர் எந்த பிரதிபலனும் பாராது செய்திருக்கிறார்.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு / என்ஆற்றுங் கொல்லோ உலகு. (குறள்: 211) என்ற வள்ளுவனின் வாக்குப்படி வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே …
ஒரே வரியில் சொல்வதென்றால், இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே… என்ற பாடல் வரிகளைத்தான் சொல்வேன்.
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்… தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்… பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்… அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்… இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…” என்பதாக நெகிழ்வான பாடல் வரிகளோடு நிறைவு செய்தார், விடியல் குகன்.
ஏற்புரை நிகழ்த்திய சேவை கோவிந்தராஜ், தனது பணி அனுபவத்தில் தன்னோடு பயணித்த பலரின் குணாதிசயங்கள் குறித்தும், அவர்களது மேலான ஒத்துழைப்பு குறித்தும், பேசினார். இவர்களின்றி நான் இல்லை என்பதாக, சேவை நிறுவனங்கள் அத்தனையையும் அப்படியே அரவணைத்துக் கொள்வது போலவே ஏற்புரை நிகழ்த்தினார், சேவை கோவிந்தராஜ்.

நிறைவாக, சேவைத்துறையில் தடம் பதித்த சிறந்த சேவை நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு ஓசோன் அமைப்பின் சார்பில், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அரங்கம் நிறைந்த விழாவாக, பங்கேற்பாளர்களின் மனம் நிறைந்த விழாவாக நிறைவுற்றதும் போதாதென்று, அவர்களின் வயிறும் நிறையும்படி வயிறார உணவிட்டு வழியனுப்பி வைத்தார்கள், சேவை கோவிந்தராஜ் மற்றும் சேவை நிறுவன ஊழியர்கள்.
”திருச்சி என்றாலே அரசியலில் திருப்பம் என்பார்கள். சேவை கோவிந்தராஜ் போன்றவர்களால், திருச்சி என்றால் மகிழ்ச்சி … நெகிழ்ச்சி … என்றே கொள்ளலாம்” என்றார் விடியல் குகன். அட, எவ்வளவு உண்மையான வரிகள்? நம்ம திருச்சியில் இப்படி ஒரு மனிதரா? என்றே வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமன்றி, நாமும் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்துதான் பார்ப்போமே என்ற பேராவலை தூண்டியது ஒட்டுமொத்த நிகழ்வும்.
– இளங்கதிர்.
சிறப்பு விருது பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
விடியல் குகன், டி.இளஞ்செழியன், அன்பு வழி அறப்பணி மன்றம், ஸ்கோப், கிராமியம், புதுக்கோட்டை கார்டு, மதுரை எம்.என்.இ.சி., லயன் நடராஜன், விழுப்புரம் அருவி டிரஸ்ட், எஸ்.புதூர் பெட்ரோர் டிரஸ்ட், திருச்சி அபி டிரஸ்ட், திண்டுக்கல் இசை, திருச்சி ஸ்பேஸ்டிக்ஸ் சொசைட்டி, திருச்சி உதயம், ஐ பவுண்டேஷன், திருச்சி, பெரம்பலூர் இண்டோ டிரஸ்ட், திருச்சி ஐ.டி.டி., பூமித்தாய் தோட்டம் திருச்சி, கரூர் எஸ்.டி.ஆர்.ஓ. டிரஸ்ட், கரூர் கே.கே.பாலு, திருச்சி ஷானவாஸ்கான், திருச்சி சுமதி நாகராஜன், திருச்சி சர்வம் எஜூகேஷனல் டிரஸ்ட், திருச்சி அன்னை டிரஸ்ட், திருச்சி கிரியேட் டிரஸ்ட், திருச்சி லயன் எம்.ஜோசப், திருச்சி சிட்டிசன் ஃபோரம், திருச்சி சுப்ரமணியன், திருச்சி மனிதம் அறக்கட்டளை, திருச்சி என்.கிருஷ்ணமூர்த்தி, திருச்சி ஹோப் பவுண்டேஷன், திருச்சி மாவட்ட நலப்பணிக்குழு, ஏ.எஃப்.டி.ஆர்.ஓ.பி., திருச்சி வாய்ஸ் டிரஸ்ட், கங்காரு கருணை இல்லம், திருச்சி, திண்டுக்கல் ஸ்ரீகாந்த், பெட்டவாய்த்தலை சரசு, என்விரான்மெண்டல் அசோசியேசன் ஆஃப் தமிழ்நாடு, பெரம்பலூர், சேவை திருச்சி ஆகிய தொண்டு நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.