விரைவில் தவெகவின் 2வது மாநாடு – புஸ்ஸி ஆனந்த்
மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு வரும் ஆக -25ம் தேதி மதுரையில் நடத்துவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். அதனை தொடர்ந்து மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் ரோட்டில் பாரபத்தியில் 510 ஏக்கரில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த மாநாட்டு திடல் அமைப்பதற்கான பூமிபூஜையில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மாநாடு நடத்துவதற்கான அனுமதி வழங்குமாறு மனு அளித்தார் விக்கிரவாண்டி மாநாட்டை விட மதுரையில் நடக்கும் 2வது மாநாடு சிறப்பாக இருக்க வேண்டும் என மாநாட்டுப் பணிகளில் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆக – 27 ல் மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா நடப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் சிரமம் ஏற்படும் என்பதால் மாநாட்டை ஆகஸ்ட் 25க்கு முன்னரோ அல்லது அதற்கு பிறகோ நடத்துமாறு போலீசார் சார்பில் புஸ்ஸி ஆனந்திடம் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் வேண்டுகோளை ஏற்று விநாயகர் சதுர்த்திக்கு முன்னரே மாநாடு நடத்த உள்ளதாக கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
இந்நிலையில் மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை சந்தித்த பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது. தவெகவின் 2வது மாநில மாநாட்டை மதுரையில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நடத்துவதாக தலைவர் விஜய் அறிவித்தார். ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படும். எனவே தேதியை மாற்றி வைக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.
எனவே ஆகஸ்ட் 25ம் தேதிக்கு முன்னரே இம்மாதம் 18 முதல் 22ம் தேதி மாநாடு நடத்திக் கொள்ளும்படி கூறினர் தலைவர் விஜயின் ஆலோசனையின் படி ஒரு தேதியை குறிப்பிட்டு எஸ்பியிடம் கொடுத்துள்ளோம். அவரும் அந்த தேதியில் நடத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார் தலைவர் விஜய் விரைவில் தேதியை அறிவிப்பார். மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் நிர்வாகிகள் இரவு, பகல் பாராமல் தீவிரமாக பந்தல், மேடை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அனுமதி கிடைத்தவுடன் திட்டமிட்டபடி மாநாடு வெகு விமர்சையாக நடக்கும் என கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்