“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” வெற்று கோசம் ஏமாற்றும் பாயாசம்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு… தன்மானத் தமிழனின் வணக்கம்;
தங்களின் தந்தை மரியாதைக்குரிய எஸ்.ஏ. சந்திரசேகரன் அவர்கள் புரட்சிகரமான கருத்துக்களை உள்ளடக்கிய பல்வேறு திரைக்காவியம் படைத்தவர்.
‘புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா!’ என்று நானும் லட்சோப லட்சம் பேரில் ஒருவனாக உங்கள் அரசியல் பிரவேசத்தை அகமகிழ்ந்து வரவேற்றேன். அதற்கு கட்டியங் கூறும் வகையில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் முழக்கம் என்னை கவர்ந்திழுத்தது.
ஏனெனில்… தமிழர்களை சாதியால் பிரித்து ,
பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி வரும் திராவிடக் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாற்று சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உதயமாகி; சாதி, மதம், மொழி, இன வேறுபாடின்றி மனிதச் சமூகத்தை ஓர் குடையின் கீழ் அணித் திரட்டி நல்லதொரு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியர்களை உருவாக்கும் உயரிய கொள்கை, கோட்பாடுகளையே! கேடயமாகவும்; கவசமாகவும் கொண்டு வெற்றி நடை போட, ஓர் தமிழ் மகன் வந்து விட்டான் என்ற பெருமிதம் எனக்குள் ஊறி திளைத்தது.
8000த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கிராமங்களை சிதைத்து, அதன் எழில் கொஞ்சும் இயற்கையையும், விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும், மண்ணையும், மக்களையும் அழிக்கின்ற பேரழிவை தடுத்து நிறுத்த, தன்னை முன்னத்தி ஏராக கொண்டு போராட துணிந்த உங்களின் போர்க்குணம் எனக்குள் ஒரு நம்பிக்கை விதையை விதைத்தது.
ஈவு இரக்கமின்றி காவல் துறையினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட அஜித்தின் கோர படுகொலைக்கு முதல் குரலாக ஒலித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கியதை கண்டு, மனித உரிமை மீறலுக்கெதிராக நீங்கள் வெகுண்டெழுந்த போக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

மனித வரலாறு கரடு முரடான மலைகளிலும், காடுகளிலும், மனிதன் நிர்வாணமாய் அலைந்து, திரிந்து, மர பட்டை, இலை தழைகளை அணிந்து நாடோடியாக வாழ்ந்து வந்தவன், மெல்ல மெல்ல தாய் வழிச் சமூகமாகவும், தந்தை வழிச் சமூகமாகவும், ஓர் குழுவாகவும், சமூகமாகவும், சமுதாயமாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று பல்வேறு சாதனைகளை படைத்து வளர்ந்து, உயர்ந்துள்ளான்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தவன் மாதிரியா மனிதன் இன்று இருக்கிறான் இல்லையே ஆனால் இரண்டாம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சாதியை இன்னும் விடாப்பிடியாக கட்டிப்பிடித்து அழும் அறிவற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனமுவந்து ஒருவரை ஒருவர் விரும்பி தாங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாத ஒரு துர்பாக்கிய நிலையாக, கவின் என்னும் பொறியியல் பட்டதாரி இளைஞனை சாதி வெறிகொண்டு கண்டந் துண்டமாக வெட்டி, தானொரு காட்டுமிராண்டி என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்ட சுர்ஜித் என்னும் சாதி பயங்கரவாதிக்கு எதிராக, அந்த மனித நேயமற்ற செயலுக்காக நீங்கள் கண்டிக்காத போது தான், நான் உங்கள் மீது அச்சம் கொள்ள ஆரம்பித்தேன்.

நீங்கள் பேராபத்தான ஒரு விசக் கிருமி என்பதை உள்ளூற உணர முடிந்தது. திட்டமிட்டு அந்த படுகொலையை கண்டும் காணாமல் மௌனமாக இருந்த காரணம் என்ன ப்ரோ?
பெரியார், அம்பேத்கர், போன்ற புரட்சியாளர்களின் புகைப்படத்தை பயன்படுத்த உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? அந்த புரட்சியாளர்களைப் பற்றி பேச உங்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.
திமுக, அதிமுக, தேமுதிக போன்ற பத்தோடு அத்தோடு கட்சியாகதான் தவெக அமைந்துவிட்டது.
நீங்கள் ஒரு சுயநல சந்து என்பதை உங்கள் நடவடிக்கைகள் இவ்வளவு விரைவாகக் காட்டும் என்பதை நான் நினைக்கவில்லை. ஆமாம்… நீங்கள் கவின் படுகொலையை கடந்து போனீர்கள். காரணம் என்னவென்றால் மதுரை மாநாட்டில் படுகொலை செய்த சாதியினர்கள் கலந்து கொள்ளாமல் போனால் நமது அரசியல் எதிர்காலம் என்ன ஆவது? அல்லது சம்பந்தப்பட்ட சாதியினர் நம்ம கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் நாம் எப்படி முதல்வர் ஆக முடியும? என்று சுயநலமாக சிந்தித்து மௌனமாக கடந்து போகிற உங்களைப் போன்ற ஆபத்தானவர்கள் கையில் இந்த தமிழ்நாடு ஒருபோதும் கிடைத்துவிடக் கூடாது.

பெரியார் வந்தார் சாதியற்றத் தமிழ்ச் சமுதாயத்தை படைத்து விடுவார் என்று நம்பி எங்கள் முன்னோர்கள் அவர் பின்னால் படையெடுத்தார்கள். அண்ணா வந்தார் அவரையும் நம்பி அவர் பின்னால் போனார்கள். எம்ஜிஆர் வந்தார் அவரையும் நம்பி அவர் பின்னால் போனார்கள், கேப்டன் விஜயகாந்த் வந்தார் அவர் பின்னால் நாங்கள் போனோம். இன்று உங்கள் பின்னால் நாங்கள் வர என்ன மாற்றம் செய்ய போகிறீர்கள்?
விட்டில் பூச்சி போல கவர்ச்சியான வார்த்தைகளையும், கபட நாடகங்களை நம்பி இனியும்… ஏமாற நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல, தமிழ்ச் சமூகம் சாதியாலும், மதத்தாலும், ஒற்றுமை இல்லாமல் தினந்தோறும்…
சாதி கலவரங்களாலும், சாதி படுகொலையாலும் சாதி தீண்டாமையாலும் லட்சோப லட்சம் மண்ணின் பூர்வீகக் குடி மக்கள் சொல்லன்னா துயரத்திற்கு ஆளாகின்ற இந்த துர்பாக்கிய நிலைக்குக் காரணம் தமிழகத்தில் தோன்றிய அரசியலும், அரசியல் தலைமைகளும் தான் காரணம். அந்தக் காரணங்களுக்கு மெருகேற்றும் வகையில் நீங்களும் அமைந்ததுதான் தமிழகத்தின் சாபக்கேடு.
இனி இளைஞர் பட்டாளத்தை புதியதொரு மாற்றத்தை நோக்கி அணித் திரட்ட வேண்டிய தேவை எங்களை போன்ற லட்சோப லட்சம் இளைஞர்களுக்கு உண்டான ஒரு வரலாற்று கடமையாக கருதுகின்றோம்.
இனியும் இந்த மக்களையும், மண்ணையும் ஏமாற்ற நினைக்காதீர்கள். அது உங்களுக்கு ஆபத்தாகதான் முடியும். இது கடைசி எச்சரிக்கை.
— வாழையூர்குணா, எழுத்தாளர்