தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை கத்தியை தூக்குகிறவனுக்கு உருவாக்கிய இரண்டு விடுதலை…?
தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை கத்தியை தூக்குகிறவனுக்கு உருவாக்கிய இரண்டு விடுதலை…?
“அரிவாள்மனையால் வெட்டிய குற்றத்தை மாமியார் மன்னித்ததால், மருமகன் விடுதலை”.
”மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்த கணவன் மீதான குற்றச்சாட்டை சாட்சிகள், ஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தில் காவல்துறை நிரூபிக்காததால் ஆயுள் தண்டனையிலிருந்து விடுதலை”. இந்த ஒரு வாரத்தில் மட்டுமே இப்படி இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல் சம்பவத்தில் மாமியார் உண்மையிலேயே மன்னித்திருப்பாரா? மகளின் வாழ்க்கைக்காக நிர்பந்திக்கப் பட்டிருப்பரா? என்ற கேள்வி எழுகிறது.
இரண்டாவது சம்பவத்தில், ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டது உண்மை. ஆனால், காவல்துறை சரியாக புலனாய்வு செய்து ஆவணங் களை சமர்ப்பிக்காததால் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
இரண்டு சம்பவங்களிலுமே விடுதலை செய்யப்பட்டவர்கள் மிகப்பெரிய ரவுடிகளோ, அரசியல்-அதிகார பின்புலம் கொண்டவர்கள் போல தெரியவில்லை. அப்படியிருக்க, அவர்களே ஈஸியாக சட்டத்திலுள்ள ஓட்டையை பயன்படுத்தி கொலை குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்றால் பல கொலைகள் செய்த ரவுடிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் எப்படியெல்லாம் தப்பிப்பார்கள் என்பதற்கு இச்சம்பவங்களே உதாரணம். ”பேசி தீர்த்துக்கொள்ளலாம்” “காவல்துறை சரியான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் தப்பித்துக்கொள்ளலாம்” என்ற மனநிலையை கத்தியை தூக்குகிறவனுக்கு உருவாக்கினால் குற்றங்களை எப்படி கட்டுப்படுத்தமுடியும்?
காவல்நிலையங்களிலுள்ள புலனாய்வு விசாரணை அதிகாரிகளுக்கு சட்டம் தெரிய வில்லையா? அவர்களுக்கு ஆலோசனை வழங்கக் கூடிய அரசு வழக்கறிஞர்கள் சரியான சட்ட ஆலோசனைகளை வழங்கவில்லையா?
-மனோ – பத்திரிகையாளர்