கஞ்சா கடத்திய 2 பேருக்கு 27 ஆண்டுச் சிறை- புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துரை பகுதியில் போலீசார் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில் அன்று சந்தேகத்திற்கிடமான வாகனமொன்று நிற்காமல் சென்றதை பார்த்த போலீசார் வாகனத்தை பிடித்து நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தின் 181 கிலோ கஞ்சா மூட்டை இருந்தது தெரியவந்தது.
இவ்வளவு கஞ்சா முட்டை சிக்கியது மாவட்ட போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக வாகனத்தில் இருந்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்திய போது ஒருவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முனியசாமி என்பதும் மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழிவிடு முருகன் என்பதும் தெரியவந்தது.
பிறகு இருவரையும் அன்று மங்கலமேடு டிஎஸ்பியாக இருந்த தேவராஜ் கைது செய்தார். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் சட்ட சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி செப்டம்பர் 23 நேற்று தீர்ப்பளித்தார். இதில் முனியசாமி, வழிவிடு முருகன் ஆகிய 2 பேரும் கஞ்சா கடத்தியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இரண்டரை லட்சம் அபராதமும் விதித்தார். இந்தத் தீர்ப்பு தமிழ்நாடு அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.