பெரிய மிருகங்களையே மிரள வைக்கும் ஆட்காட்டி பறவையின் ஓலம்! பறவைகள் பலவிதம்- தொடா் 8
ஆண் பறவையும் பெண் பறவையும் மாறிமாறி முட்டைகளை அடைகாக்கும். சில இடங்களில் ஆண் பறவைகள் பகலின் மிகவும் கடுமையான வெப்பத்தை கொண்ட மதிய வேளைகளில் பெண் பறவைகளுக்கு அடை காக்கும் பொறுப்பில் இருந்து ஓய்வு கொடுத்து, ஆண் பறவை அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பறவைகள் நீர் நிலைகளுக்கு சென்று வயிற்றுப் புறம் உள்ள இறக்கைகளை நனைத்து முட்டைகளையும் குஞ்சுகளையும் குளிர்விக்கும். குஞ்சுகளுக்கு அந்த நீரை ஊட்டி விடும்.

நிதர்சனத்தில் ஆட்காட்டி பறவைகளின் வாழ்க்கை இவ்வளவு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் செல்லாது. பிறக்கும் முன்பு முட்டை பருவத்தில் இருக்கும் போதிலிருந்து குஞ்சுகளாகி பின்னர் தன்னிச்சையாக தன் வாழ்க்கையை நடத்தும் தகுதி பெறும் வரை பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முட்டை பருவத்தில் இருக்கும்போது குஞ்சுகளைப் பாதுகாக்க ஆட்காட்டி பறவைகள் உருமறைப்பு செய்யும் என்பதை பார்த்தோம். அதையும் மீறி சில கொன்றுண்ணி விலங்கினங்கள் முட்டைகளை வேட்டையாடி அவை இந்த உலகத்திற்கு வருவதற்கான கனவை சிதைத்துவிடும். அது தவிர பல நேரங்களில் இப் பறவைகளுக்கு தீங்கு விளைவிக்காத விலங்குகள் கூட, ஏன் மனிதர்களும் கூட அதை மிதித்து உடைத்து விட வாய்ப்புகள் அதிகம்.
அத்தகைய நேரங்களில் ஆட்காட்டி பறவையின் கையில் இருக்கும் வழி ஒன்றே ஒன்றுதான். தன்னுடைய குரலை உச்சஸ்தாயில் வெளிப்படுத்தும். அதை சத்தம் என்று கூறுவதைவிட ஓலம் அல்லது அலறல் என்றே கூறலாம். கிரீச்சென்ற அந்த ஓலத்தை பார்க்கும் போது முட்டைகளை மிதித்து விடாதீர்கள் என்று அழுது புலம்புவது போல் இருக்கும். பெற்றோர் பறவை களின் அலறல் எந்த அளவிற்கு இருக்கும் என்றால், அது முட்டையிட்டு இருக்கும் பகுதியில் யாராவது வர நேர்ந்தால் அவர்கள் அந்த இடத்தை நெருங்க விடாமல் அது சத்தமிட்டு, வந்தவர் அது மிருகமாய் இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி ஏதோ இந்தப் பக்கத்தில் பிரச்சனை இருக்கிறது என்று எண்ணி பயந்து வேறு பக்கத்திற்கு சென்று விடுவார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த சத்தத்திற்கு பெரிய மிருகங்கள் கூட பயந்துதான் ஆக வேண்டும். அந்த பாதையில் வந்தவர்கள் அந்த வழியை கைவிட்டு வேறு திசைக்கு செல்லும்வரை அதனுடைய ஓலத்தை நிறுத்தாது. சில சமயங்களில் முட்டைகளின் அருகில் வருபவர்களை திசை திருப்புவதற்காக காயம் பட்டது போல் நடித்து கூக்குரலிடும். இவ்வாறு தனது முட்டையை பாதுகாக்க அரும்பாடு படும். வேளாண் நிலங்களில் இவை கூடுகட்டி முட்டைகள் இடும் போது எதிர்பாராதவிதமாக அங்கு விவசாய பணிகள் தொடங்கினால், முட்டைகள் ஒவ்வொன்றாக பெற்றோர் பறவைகளால் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும். முட்டை குஞ்சு பொரித்த பின்னரும், அதற்கான சவால்கள் முடிந்து போவதில்லை.
(தொடர்ந்து பேசுவோம்)
ஆற்றல் பிரவீன்குமாா்