உதயநிதி என்ட்ரி உதவியா, உபத்திரவமா?
அண்ணா உள்ளிட்ட ஐம்பெரும் தலைவர்கள் இணைந்து தோற்றுவித்த திமுக என்ற ஆலமரத்தை இன்று, தேர்தல் அரசியலின் சாலையோரக் குருவிகள்கூடச் சகட்டுமேனிக்குச் சாடுவதற்கு முக்கியக் காரணம் வாரிசு அரசியல்தான்.
திமுகவைக் கடுமையாக எதிர்க்கும் யாரும் ஸ்டாலினை வாரிசு அரசியல் என்ற பிம்பத்துக்குள் முழுமையாகப் பொருத்திப் பார்க்க முன்வர மாட்டார்கள். காரணம், ஸ்டாலினைப் பல பட்டறைகளில் கூர் தீட்டி, பயிற்சிகளின் மூலம் வார்த்தெடுத்தார் கலைஞர். ஆனால் இன்று உதயநிதி அப்படியெல்லாம் வார்க்கப்படவில்லை.
எப்படி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் சந்திரசேகர ராவ், அவரது மகன் கேடி.ராமராவ், மருமகன் ஹரிஷ், மகள் கவிதா என்று குடும்ப வலைப்பின்னல் இருக்கிறதோ அதேபோல தமிழகத்தில் திமுகவில் இருக்கிறது என்ற ஒப்பீடுகள் எழுந்துள்ளன. ஆனால் வியப்பூட்டும் உண்மை என்னவெனில் டிஆர்எஸ் கட்சிக்கு அந்தக் குடும்ப வலைப் பின்னல் உதவியது. திமுகவுக்கோ குடும்ப வலைப்பின்னல் உதவுமா என்பதுதான் கேள்விக்குறி.
முன்பு கலைஞர் குடும்பம் என்பது கலைஞர், முரசொலி மாறன், ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி என்றிருந்தது. ஆனால் இப்போது அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கிறார், தயாநிதி மாறனுக்கும் ஸ்டாலினுக்குமான உறவு சீராக இருப்பதாகச் செய்திகள் இல்லை, கனிமொழி புறக்கணிக்கப்படுவதாக ஒரு புழுக்கக் குரல் கேட்கிறது. ஆக திமுகவில் கலைஞர் குடும்பம் என்பது இப்போது ஸ்டாலின் குடும்பமாக மாறிவிட்டது. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அவரது மருமகன் சபரீசன் என்று திமுகவின் சித்திரிப்புகள் பரிணாம மாற்றம் பெற்றிருக்கின்றன.
அதன் விளைவே பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் ’இளஞ்சூரியன்’ உதயநிதி 25 ஆயிரம் தென்னங்கன்றுகளை வழங்கியிருக்கிறார்.
தஞ்சாவூரில் நம்மிடம் வேடிக்கையாகப் பேசிய ஓர் உடன்பிறப்பு, “உதயநிதி தென்னங்கன்னு கொடுக்கறதுக்கு பதில் வாழைக் கன்னு கொடுக்கலாம். அதான் பொருத்தமா இருக்கும்” என்றார் திமுகவுக்கே உரிய குறும்போடு. தென்னங்கன்று வளர்த்து உரம்போட்டு சில வருடங்கள் கழித்தே பலன் கொடுக்கும். ஆனால் வாழைதான் குலைதள்ளும்போதே வாழைக் கன்றுகளையும் வளர்க்கும். வாழையடி வாழை என்ற வரிசையில் வந்தவர்தானே உதயநிதி” என்று விளக்கமும் கொடுத்தார்.
ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் அண்மைக் காலமாக போன் வருகிறது. கட்சியினர் அனைவரும் மதிக்கும் அப்பெண்மணி, மாவட்டச் செயலாளர்களிடம் பதமாக வேண்டுகோள் வைக்கிறார். ‘தம்பிய மீட்டிங்குக்கெல்லாம் கூப்பிடுங்க” என்று. முதன் முதலாக சென்னையின் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டார் உதயநிதி. பின் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கூட்டங்களில் தலைகாட்டினார். இப்போது அனைத்து மாவட்டங்களிலும் திமுக பொதுக்கூட்டங்களுக்கு உதயநிதியை அழைத்திட வேண்டும் என்பது திமுகவின் தீர்மானமாகவே ஆகிவிட்டது.
திமுக மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளிலுமே இன்று விக்ரமன் படத்தில் வருவதுபோல, ஐந்து நிமிடப் பாடலில் வளரத் துடிக்கும் ‘கன்ஸ்யூமர்’களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அப்படிப்பட்ட கன்ஸ்யூமர்கள் தலைமை யாரை முன்னிறுத்த முனைகிறதோ அவரைத் தலைமையை விட அதிகமாக முன்னிறுத்தித் தங்களைத் தலைமையிடம் அடையாளப்படுத்திக் கொள்ளத் துடிப்பார்கள். அப்படி ஒரு கன்ஸ்யூம் கூட்டம் இன்று உதயநிதியையும் உயர்த்திப் பிடிப்பதில் தங்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்று சொல்லிக்கொள்கிறது. இவர்களது அதீத துதிபாடல்களே மக்களிடம் திமுகவைப் பற்றிய குடும்பச் சித்திரிப்பைத் திரும்பத் திரும்ப ஏற்படுத்துகின்றன.
பலவீனமான முதல்வர் என எதிர்க்கட்சிகளால் சாடப்படும் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்:
“நான் கிளைக் கழகத்தில் இருந்து உழைத்து படிப்படியாக முன்னுக்கு வந்தேன். ஸ்டாலின் எப்படி அரசியலுக்கு வந்தார்? திமுகவில் கருணாநிதி குடும்பம் மட்டும்தான் முன்னேற முடியும். கருணாநிதி வந்தார், அவரது மகன் ஸ்டாலின் வந்தார். இப்போது ஸ்டாலின் மகனும் வந்துவிட்டார். அங்கே எல்லாம் வாரிசு. ஆனால் அதிமுகவில் திறமை இருப்பவர்கள் மக்களுக்கு உழைப்பவர்கள்தான் பதவிக்கு வர முடியும். சாதாரண விவசாயி, தொழிலாளி கூட வர முடியும். ஆனால் திமுகவில் தாத்தா, மகன், பேரன் தான்” என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இந்தப் பேச்சு மக்களிடம் எடுபடுவதற்கு யார் காரணம்? எடப்பாடியின் எத்தனையோ பலவீனங்களைக்கூட பலமாக்குவதற்கு வாரிசு அரசியல் என்ற இரு வார்த்தைகள் போதுமானதாக இருக்கிறது அவர்களுக்கு. அங்கேயும் வாரிசுகள் இருந்தாலும் திமுகவின் வேகத்துக்கு அதிமுக ஈடுகொடுக்கவில்லை.
இது மட்டுமல்ல… திமுகவில் ஏற்கனவே வேலூர் நாடாளுமன்றத் தொகுதியை தன் மகனுக்காக பல ஆண்டுகளாக துரத்தி வருகிறார் துரைமுருகன். இப்போது கள்ளக்குறிச்சி எம்பி தொகுதியில் தன் மகனை நிறுத்தலாமா என்று தொகுதி முழுதும் சைலண்ட்டாக நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டுவருகிறார் பொன்முடி. இதேபோல ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தங்கள் வாரிசுகளை முன்னிறுத்த ஆரம்பித்தால் திமுகவில் எத்தனை இளஞ்சூரியன்கள் உதிக்க வேண்டியிருக்கும்? இதை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்வார்? கலைஞரிடமே வாரிசு அரசியல் பற்றி வீரபாண்டி ஆறுமுகம் நேருக்கு நேர் கேட்டதாக ஒரு செவி வழிச் செய்தி திமுகவில் உண்டு.
கன்ஸ்யூம் கூட்டங்கள் வாரிசுகளை ஏற்றுக் கொண்டுவிடும். ஆனால் தேர்தலில் ஓட்டளிக்கும் கூட்டம் ஏற்க வேண்டும். ஸ்டாலின் மீதான வாரிசு அரசியல் கறையை முற்றாகத் துடைத்து எறிவதற்கே திமுகவிற்கு இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இப்போதைய இளஞ்சூரியன் உதயசூரியனுக்கு உதவுமா, உபத்திரவம் செய்யுமா என்பதை ஸ்டாலின் ஆராய வேண்டிய தருணம் இது!