தமிழிசை, பொன்.ராதா பிஜேபி கோஷ்டிப் பூசல்!
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட கஜா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதேநேரம் கஜா புயலை மையமாக வைத்து தமிழக பாஜகவுக்குள்ளும் உட்கட்சி மோதல் என்ற புயல் வீசிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை ஒரு பக்கம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு பக்கம் என்று இரண்டு அதிகார மையங்களைச் சுற்றிலும் இரு தரப்பினர் குவிந்து கிடக்கின்றனர். இதனால் தமிழக பாஜக தலைமைக்கும், மத்திய ஆட்சியின் தமிழகப் பிரதிநிதியான மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டேபோகிறது.
இதற்கு கஜா புயல் பணிகளே சிறந்த உதாரணம். தமிழிசை கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தானே நேரில் சென்று பார்வையிட்டார். அரசியல்வாதியாக மட்டுமல்ல, ஒரு மருத்துவராகவும் அப்பகுதிகளுக்குச் சென்று பல்வேறு மருத்துவப் பணிகளை செய்து, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினார்.
இது மட்டுமல்ல. டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கஜா புயல் சேதாரங்களை பொதுமக்களின் பாதிப்புகளை அறிக்கையாகத் தயார் செய்து தருவதற்காக ஒரு குழுவை நியமித்தார் தமிழிசை. இந்தக் குழு பாஜக மாநில விவசாயி அணி துணை தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் அமைக்கப்பட்டது. குழுவில் மாநில செயலாளர்கள் கரு.நாகராஜன், புரட்சிக்கவிதாசன், மாநில துணைத்தலைவர் மீனவர் பிரிவு .வெங்கடாச்சலம், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இளங்கோ ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
டெல்டா முழுதும் ஆய்வு செய்த இந்தக் குழு தனது அறிக்கையை டிசம்பர் 1ஆம் தேதி கமலாலயத்தில் தமிழிசையிடம் ஒப்படைத்தது.
இன்னொரு பக்கம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். பல அறிவுப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டிசம்பர் 19 ஆம் தேதி, மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை டெல்லியில் சந்தித்தார்.
அப்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ,டெல்டா பகுதியைச் சேர்ந்தவரும் மாநில பொதுச் செயலாளருமான கருப்பு முருகானந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஜகவின் செயலாளர் வேதரத்தினம், தமிழக பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் பொன்.விஜயராகவன் ஆகியோரும் உடனிருந்தனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்ய வேண்டிய உதவிகள் பற்றி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் இவர்கள்.
இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினர் கமலாலய வட்டாரங்களில்.
“தமிழிசை அமைத்த குழுவில் மாநில விவசாயப் பிரிவுத் தலைவர் பொன். விஜயராகவன் இல்லை. காரணம் அவர் தமிழிசையின் ஆதரவாளர் இல்லை. இதனால் தமிழிசை விவசாய அணி துணைத் தலைவர் தலைமையில் குழுவை நியமித்தார். அந்தக் குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கை இன்னும் கமலாலயத்தில்தான் இருக்கிறது.
அதேநேரம் இந்த விவகாரத்தில் தமிழிசையை ஓரங்கட்டி முந்த வேண்டும் என்று நினைக்கும் இன்னொரு தரப்பு தமிழிசை தயாரித்த கள ஆய்வு அறிக்கையை ஓரங்கட்டிவிட்டுத் தமிழிசைக்கே தெரியாமல் மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
இதில் அப்பட்டமான கோஷ்டி அரசியல் வெளிப்படுகிறது. பாஜக ஆட்சி செய்யும் நிலையில் டெல்லியில் மற்ற மாநில பாஜகவினர் எல்லாம் மத்திய அமைச்சர்களை சந்திக்கும்போது அம்மாநில பாஜக தலைவர்கள் உடன் இருப்பார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை இல்லை. நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் தனியாக சென்று மத்திய அமைச்சரை சந்திப்பார்கள். கொஞ்ச நாள் கழித்து மாநிலத் தலைவர் தமிழிசை தனியாக டெல்லி சென்று சந்திப்புகளை நடத்துவார். எல்லாரும் சேர்ந்து சென்று தமிழக நலனுக்காக டெல்லியிடம் வற்புறுத்தியதே இல்லை.
கஜா புயல் விவகாரத்திலேயே இவ்வளவு கோஷ்டி அரசியல் செய்கிறார்கள் என்றால் கட்சி விவகாரத்தில் பாஜகவுக்குள் எவ்வளவு கோஷ்டி அரசியல் இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்” என்று குமுறுகிறார்கள் பாஜக நிர்வாகிகள் சிலர்.
“பிரதமர் மோடி ஒருபக்கம் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் வீடியோ கான்பிரன்சில் பேசுகிறார். ஆனால், தமிழக பாஜக தலைவர்களோ நேருக்கு நேர் சந்திக்க நேரும்போதுகூட பேசிக்கொள்வதில்லை. பாஜக பிற கட்சிகளோடு கூட்டணி அமைப்பதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதலில் பாஜகவுக்குள் தலைவர்கள் தங்களுக்குள் கூட்டணியாக இருக்கிறார்களா என்பதை டெல்லி தலைமை கவனிக்கட்டும்” என்றும் தெரிவித்தனர் பாஜகவில் நடப்பதை அறிந்த அக்கட்சியின் இளைய தலைமுறையினர் .