கன்னிப் பேச்சில் கவர்ந்த உதயநிதி ; கலைஞரின் பேரன் என்பதை நிரூபித்துவிட்டார்!
திமுக இளைஞரணி செயலாளரும் திமுக தலைவர் மு க ஸ்டாலினின் மகனுமான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆகஸ்ட் 18 சட்டமன்றத்தில் தனது முதல் கன்னிப் பேச்சை தொடங்கினார். பேச்சில் யாரும் எதிர்பாராத விதமாக சென்டிமென்ட்டும், செயல்திட்டமும், கோரிக்கை, நட்பு, நன்றி, கோபம் என கலந்த கலவையாக அமைந்தது அவருடைய பேச்சு.
பேச்சின் தொடக்கத்திலேயே கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தது, மேலும் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தது என்று மட்டுமில்லாமல் தனது நண்பனும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நன்றி தெரிவிக்கும் போது தாத்தா அன்பில் பொய்யாமொழி, மாமா அன்பில் தர்மலிங்கம் எனது நண்பன் மகேஷ் பொய்யாமொழி என்று கூறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்தார். மேலும் தனது தொகுதியில் பணியாற்றிய பகுதி செயலாளர்களின் பெயரையும் குறிப்பிட்டு, மேலும் முக்கிய நிர்வாகிகளின் பெயரையும் உச்சரித்து நன்றி கூறியது மற்ற எம்எல்ஏக்களை வியப்படைய செய்திருக்கிறது.
மேலும் ஸ்டாலின் கலைஞரை சட்டமன்றத்தில் முதல்வர் என்றும், கூட்டத்தில் தலைவர் என்றும் அழைப்பார். அதையே பின்பற்றி உதயநிதி ஸ்டாலினும் சட்டமன்றத்தில் முதல்வர் என்றும் பிற இடங்களில் தலைவர் என்றும் அழைக்கும் வழக்கத்தைக் கையாண்டு வருகிறார்.
இது மட்டும்தானா என்றால் தொகுதி கோரிக்கை, மாநில கோரிக்கை என்று 30 நிமிடத்திற்கு மேலாக தனது கன்னிப் பேச்சில் தலையை மேலே தூக்காமலேயே, தாழ்த்திய பார்வையோடு தனது உரையை நிகழ்த்தியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
மேலும் அமைச்சர்களிடம் அளித்த கோரிக்கைகளையும் பட்டியலிட்டு, அதேசமயம் கடந்த அதிமுக ஆட்சியை விமர்சித்தும் முழு அரசியல்வாதியாக கலைஞரின் பேரன் என்பதை நிரூபித்து விட்டார் உதயநிதி என்று கூறுகின்றனர் சட்டமன்றத்தில் நேற்று பார்த்து வியந்த மற்ற எம்எல்ஏக்கள்.
திமுகவின் நாளைய தலைவர் என்று உதயநிதியின் பெயர் தற்போது உச்சரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு தான் தகுதியானவர் என்று நிரூபிக்க வகையில் உதயநிதியும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி தன்னுடைய தலைமை பண்பையும் நிரூபித்து வருகிறார். இந்த நிலையில் சட்டமன்றத்தில் உதயநிதி பேசிய கன்னிப்பேச்சு அவரின் அரசியல் பார்வையையும், கட்சியினரை அரவணைப்பதில் தன்னுடைய நிலைப்பாட்டையும் மேலும் கூட்டணிக் கட்சியினரின் முக்கியத்துவத்தின் மூலம் தனது வருங்காலத்தை எண்ணி உதயநிதி தற்போதே நடை போடத் தொடங்கி விட்டார் என்றே தெரிகிறது.