அனுமதி இல்லாத விளம்பர பதாகைகள் ! அலட்சியத்தில் அதிகாரிகள்!
திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் முசிறி பிரிவு ரோடு முதல் பாலக்கரை மற்றும் பெரிய கடை வீதி ஆலமரம் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் குறிப்பாக திருச்சி ரோட்டில் உள்ள சென்டர் மீடியனில் நடுவே உள்ள மின்கம்பங்களில் வணிக நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விளம்பர பதாகைகளால் வாகன ஓட்டிகளின் கவனங்கள் திசை திரும்பி , சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மின்வாரியத்திற்கு சொந்தமான நகர்ப் புற பகுதி மின்கம்பங்களின் நடுவே கட்டப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளால், மின் பழுது காரணமாக சரி செய்வதற்காக பணியாளர்கள் மின்கம்பங்களில் ஏறி சரி செய்ய முடியாத சூழலும் ஏற்படுகிறது.

மேலும் சாலையோர மரங்களிலும் ஆணி அடித்து மரங்களைச் சேதப்படுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து இது போன்ற அத்துமீறல் செயல்களை கண்டிக்காமல், கண்டுகொள்ளாமல் இருக்க , துறையூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, இத்தகைய செயலை அனுமதித்தனரா என சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று துறையூர் நகராட்சிக்குட்பட்ட மின்கம்பங்களில் அத்துமீறி விளம்பரப் பதாகைகளைக் கட்டி வரும் நிறுவனங்கள் மீது அபராதம் விதித்து, துறையூர் நகர் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் நகராட்சி மற்றும் மின்வாரியம் சார்பில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.