பல்கலைக்கழக மானியக் குழுவா? பாஜகவின் கொள்கை பரப்பும் குழுவா?
பல்கலைக்கழக மானியக் குழுவா? பாஜகவின் கொள்கை பரப்பும் குழுவா?
பல்கலைக்கழக வளாகங்களில் மோடியின் உருவப்படம் தாங்கிய செல்ஃபி பாயிண்டுகளை ஏற்படுத்து மாறு அறிவித்து பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பி யுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செல்வாக்கைப் பெருக்கவும், தனி நபர் துதிபாடவும் பல்கலைக்கழக வளாகங்கள் பயன்படக் கூடாது என கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார், கல்வியாளரும், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளருமான பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு.
இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவின் சமீபத்திய சாதனைகளை விளக்கி, ஏற்பு அளிக்கப்பட்ட வடிவங்களில் மட்டுமே இந்த “செல்ஃபி பாயிண்ட்” அமைக்க வேண்டும் என்ற “கட்டளை” உள்ளடக்கியதாக பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அமைந்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தும் ஏற்பாட்டை பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பும் அதிகாரம் எந்த சட்டத்தாலும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு வழங்கப்படவில்லை.
சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய பல்கலைக்கழக மானியக் குழு, சட்டத்திற்கு புறம்பாக, தனது எல்லைகளைக் கடந்து, ஒன்றிய அரசின் ஆட்சி பொறுப்பில் உள்ள கட்சியின் பரப்புரைப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாக செயல்படுவது மிகவும் ஆபத்தானது. சமூக மாற்றத்திற்கான, நாட்டின் பன்முக வளர்ச்சிக்கான, மனித குல மேம்பாட்டிற்கான, பூமியையும், பிரபஞ்சத்தையும் பாதுகாப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் கல்விச் செயல்பாட்டிற்கான வளாகமே பல்கலைக்கழகம்.
அரசின் கொள்கைகளை ஆராய்ந்து, பகுத்தும், தொகுத்தும் ஆய்வேடுளை வெளியிடும் தன்னாட்சி அமைப்புதான் பல்கலைக்கழகம். அத்தகையப் பல்கலைக்கழங்களை ஒன்றிய அரசின் சாதனைகளை பரப்புகின்ற பணியினைச் செய்யும் அமைப்புகளாக மாற்ற முற்படுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
அரசின் சாதனைகளை விளக்குவதாக கூறிக் கொண்டு, பிரதமராக இருப்பவருக்கு விளம்பரம் தேடித் தரும் “செல்ஃபி பாயிண்ட்”யை வைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது பல்கலைக்கழகத்தின் நோக்கத்தையே சிதைக்கும் செயலாகும். அரசின் கொள்கைகளை விமர்சிக்க வாய்ப்புகளை மறுப்பது மட்டுமல்லாமல், பல்கலைக்கழக வளாகத்தையே ஒன்றிய அரசின் சாதனைகளை விளம்பரம் செய்யும் மையங்களாக மாற்று வது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது.
சமத்துவம் சகோதரத் துவம் சுதந்திரம் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடித்து, மக்களிடம் இறுதி இறையாண்மை என்ற கோட்பாட்டைக் கொண்ட சமயச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இந்தியா இருக்கும் என்பதை அனைவருக்கும் உணர்ந்திடும் வகையில் பல்கலைக்கழக செயல்பாடுகள் அமைவது மட்டுமே பல்கலைக்கழக அமைப்பின் நோக்கம் முழுமையாக நிறைவேற உதவும். “ என அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார், கல்வியாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு.
-அங்குசம் செய்திப் பிரிவு