மெல்ல சாகும் சென்னை பல்கலை ! துணை போகும் அரசு ! வேதனையில் கல்வியாளர்கள் !
சென்னை பல்கலை கழகத்தின் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
“சென்னைப் பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்போம்” எனும் முழக்கத்தின் கீழ்,
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
- சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பல ஆண்டுகளாக முறையாக வழங்க வேண்டிய நிதியை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்ற அலுவலர்களின் ஊதிய குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.
- ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உரிய காலத்தில் முறையாக வழங்க வேண்டிய பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்.
- கடந்த ஏழு ஆண்டுகளாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
- சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள துறைகளில் கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறி துறைகளை ஒன்றிணைப்பதை கைவிட வேண்டும்.
- மாணவர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும்.” உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும் !
சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர், பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு சில கேள்விகளை எழுப்புகிறார்.
போராடுகின்ற சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் – அலுவலர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையில்:
- எந்தெந்த கோரிக்கைகள் நியாயமற்றது?
- எந்தெந்த கோரிக்கைகள் தமிழ்நாடு அரசின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது?
- தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகத்திற்கு முழு மான்யத்தை தமிழ்நாடு அரசு தரவில்லை என்றால், வேறு யார் தருவார்கள்?
- அரசு நிதி வழங்காத காரணத்தால் பல்கலைக்கழம் முடங்கிக் கிடக்கிறது, இதனால் பலனடையப் போது யார்? பாதிக்கப்படப் போவது யார்?
- தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள் இலாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக அரசுப் பல்கலைக்கழகங்கள் முடக்கப்படுகிறதா?
- பேராசிரியர்கள் நியமிக்காமல், பல்கலைக் கழகத் துறைகளை ஒருங்கிணைக்கத் திட்டம் தீட்டுவது சமூகநீதிக்கு சவக் குழி தோண்டும் செயல் அல்லவா?
- பல்கலைக்கழக நிலங்களை வெவ்வேறு துறைகள் எடுத்து, வெவ்வேறு காரணத்திற்காக பயன்படுத்த அனுமதிப்பது, சென்னைப் பல்கலைக்கழகத்தை மூடி விடும் நோக்கத்தின் முதல் படியா?
- மாணவர் பேரவைத் தேர்தல் நடந்தால், சுயநிதிப் பாடப் பிரிவுகளாக பெரும் பகுதிப் பாடப் பிரிவுகளை மாற்றி இருப்பது, குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு பாடம் நடத்துவது, மதிப்பிடப்படமால் தேங்கிக் கிடக்கும் முனைவர் பட்ட ஆய்வேடுகள் ஆகிய மாணவர்கள் நலனுக்கு எதிரான செயல்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதற்காக மாணவர் பேரவைத் தலைவர் நடத்த தயக்கமா?
- பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அதைப் பற்றி கவலைப்படாமல் அரசு இருப்பதன் காரணம் என்ன?
- சமூகநீதியின் அடிப்படையில் அனைவருக்குமான பல்கலைக் கழகமாக சென்னைப் பல்கலைக் கழகம் நீடிக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு யாருடையது? யாரிடம் முறையிட்டால் இந்த கோரிக்கைகள் நிறைவேறும்?
பதிலுக்காக தமிழ்நாடு காத்திருக்கிறது.” என்பதாக, தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
– இளங்கதிர்.