அறிவியல் கண்காட்சியில் அசத்திய பார்வையற்ற மாணவர்கள் !
மதுரையில் அறிவியல் கண்காட்சியில் அசத்திய பார்வையற்ற மாணவர்கள்…. சாதிக்க பார்வை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் விஷன் எம்-பவர் சார்பாக மாபெரும் அறிவியல் கண்காட்சி மதுரை, பரவை, செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்றது. விஷன் எம்பவர் நிறுவனம் 2017-ம் ஆண்டு அக்டோபர் 4 ம் தேதி தொடங்கப்பட்டது.
தற்போது 14 மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 21 சிறப்புப் பள்ளிகளில் உள்ள பார்வைத்திறனற்ற மாணவர்களுக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கும் இந்நிறுவனம் மூலம் ஸ்டெம் அறிவியல் மற்றும் கணிதம் அணுகக்கூடிய வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிப்ரவரி 28 உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு இந்நிறுவனத்தால் நம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. அறிவியல் மற்றும் கணித துறைகளில் வருங்காலங்களில் பார்வைத்திறனற்ற மாணவர்களும் சிறந்த முறையில் சாதிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது.
செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளியில் பள்ளி தாளாளர்லில்லி ஜோஸ்பின், தலைமையாசிரியை சகோ.பாக்கியமேரி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். விஷன் எம்பவர் நிறுவனத்திலிருந்து சிறப்பு கல்வி ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் மற்றும் சகோ.விமலா நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அறிவியல் சோதனைகள், கணிதம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் கணக்கீட்டு சிந்தனையை வளர்க்கும் விளையாட்டுகள் ஆகியவற்றைப் பற்றி பார்வை குறைபாடுடைய மாணவர்கள் பார்வைத்திறன் உள்ள மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.
பரவை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலிருந்து 150 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்கள். மாணவர்கள் செய்து காட்டிய அறிவியல் சோதனைகள், கணித செயல்பாடுகள் மற்றும் கணக்கீட்டு சிந்தனை விளையாட்டுகளை கண்டு வியந்து பாராட்டினார்கள். மேலும் ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திலிருந்து காமாட்சி மற்றும் கற்பகம் இருவரும் பார்வையிட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து நெருப்பில்லா சமையலின் கீழ் பல்வேறு விதமான உணவுப்பொருட்களை பார்வைத்திறனற்ற மாணாக்கர்கள் பிற மாணவர்களுக்கு செய்து காட்டி ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கூறினார்கள். மேலும் நீரின் முக்கியத்துவம் பற்றி நாடகம் நடித்துக் காட்டினார்கள். இறுதியில் பங்கேற்ற மாணாக்கர்களுக்கு விஷன் எம்- பவர் சார்பாக பதக்கங்கள் வழங்கப்பட்டு அறிவியல் தினம் நிறைவடைந்தது.
–ஷாகுல்
படங்கள் ஆனந்த்