அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி திருச்சி ஒத்தக்கடை இளைஞர்கள் 60 லட்சம் வரை மோசடி
அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி திருச்சி ஒத்தக்கடை இளைஞர்கள் 60 லட்சம் வரை மோசடி
ஏதேனும் அக்கிரமங்கள் தலையெடுத்து ஆடினால் ‘எல்லாம் கலிகாலம்’ என்போம். அதேபோல், எத்தனைதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பாடு கொண்டாட்டம்தான். நிரந்தரமானது அரசு வேலைதான் என்று குறுக்கு வழியில் அரசு வேலை பெற ஆசைப்பட்டு பணத்தை இழப்பவர்கள் ஏராளம். நாளிதழ்களில் மோசடி குறித்து எத்தனை செய்திகள் வந்தாலும், ஏமாறும் மக்களின் பேராசை அவர்களை பலி கொண்டு விடுகிறது. இத்தகைய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு திருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடையில் வசிக்கும் ஒரு இளைஞனின் மாய்மால பேச்சில் மயங்கி பணத்தை இழந்து சிக்கி தவிக்கும் பலரின் நிலைதான் இந்த சம்பவம். கடந்த ஆறு ஆண்டுகளில் இதுவரை சுமார் 60 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ள அந்த இளைஞன் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் இதுவரை தப்பித்தே வந்துள்ளனர்.
திருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடை புதுத்தெருவில் வசித்து வருபவர் நகுலன்(70). இவருடைய மகன் உபேந்திரன்(31). இவரின் கூட்டாளிகள் முத்து(39), பீமநகரைச் சேர்ந்த கதிரவன்(35), கிராப்பட்டியைச் சேர்ந்த செந்தில் வடிவு. இதுவரை இவர்கள் நான்கு பேரும் கூட்டாளிகளாக சேர்ந்து கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை சுமார் 60 லட்ச ரூபாய் வரை ஏமாற்றியுள்ளதாக தெரிகிறது.
இந்த நான்கு பேரின் மூளையாக இருந்து செயல்பட்ட உபேந்திரன், தான் மாநகராட்சியில் பணிபுரிவதாகவும், முத்து அரசு கருவூலத்தில் பணியாற்றுவதாகவும் சிலரிடம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைபார்ப்பதாகவும் கூறியுள்ளார். கதிரவன் திருச்சி சையது முர்துஷா பள்ளியில் எழுத்தாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார். செந்தில் வடிவு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஹோம் கார்டாக பணியாற்றி வருகிறார். இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து திருச்சி, மணப்பாறை, சேலம் போன்ற பகுதிகளில் உள்ள 25 பேரிடம் 1 லட்ச ரூபாய் முதல் 6 லட்சம் வரையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் உபேந்திரனை செல்போனில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், வெளியூரில் இருப்பதாகவும், உங்கள் வேலைக்காகத்தான் அமைச்சரை பார்க்க வந்துள்ளேன் என்றும் இன்னும் ஓரிரு வாரங்களில் வேலை கிடைத்து விடும் அதற்கு மேலும் பணம் தேவைப்படுகிறது என்று எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறந்துள்ளார். சமாளிக்க முடியாத நிலையில் இவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து போலியாக அரசு வேலைக்கான ஆணையினை தாங்களே தயாரித்து அனுப்பியுள்ளனர்.
இதுவரை மணப்பாறையில் மட்டும் 5 நபர்களிடம் இருந்து 15 லட்சம் வரையில் பெற்றுள்ளனர் இந்த கூட்டத்தினர். தற்போது, பணம் கொடுத்து ஏமாந்த அனைவரும் பணத்தை திரும்பி கேட்பதாலும், காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பதாலும் உபேந்திரன் தலைமறைவாகியுள்ளார். கதிரவன், முத்து, செந்தில்வடிவு உள்ளிட்டோரும் முறையாக பதில் சொல்லாத காரணத்தினால், பாதிக்கப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ‘‘என்னுடைய நண்பர்கள் மூலமாக உபேந்திரன் எனக்கு அறிமுகமானார். பலருக்கு இவர் அரசு வேலைவாங்கி கொடுத்திருப்பதாக கூறினார். உபேந்திரனின் நண்பன் முத்து, கதிரவன், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஹோம் கார்டாக பணியாற்றும் செந்தில்வடிவு உள்ளிட்டோர் ஆசை வார்த்தைகள் பேசி எங்களிடம் பணத்தை வாங்கினர்.
மேலும், எங்களை நம்ப வைக்க ‘உபேந்திரன் எனக்கு வேலைவாங்கி கொடுத்ததாகவும் நான் தற்போது நல்ல நிலைமையில் இருப்பதாகவும் அவருடைய நண்பர் ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் கூறினார்’. பின்பு தான் அது அவர்கள் நடத்திய நாடகம் என்பது தெரியவந்தது.
உபேந்திரன், தான் எப்போதும் பெரிய ஆட்களிடம் பழக்கம் வைத்துள்ளது போலவே காட்டிக்கொள்வார். எனக்கு அமைச்சர் விஜய பாஸ்கர், டிஎன்பிஎல் மேனேஜர் ரமேஷ், மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் உள்ளிட்டோரை நன்கு தெரியும் உங்களுக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கிக்கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார்.
கிட்டத்திட்ட 2 வருடங்களுக்கு மேலாகியும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பணத்தை திரும்பகொடுங்கள் என்று கேட்டதற்கு ஆரம்பத்தில் கொடுத்துவிடுகிறேன் என்றவர். தற்போது, அலைபேசி எண்ணை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருகிறார். முத்து, கதிர் ஆகியோரும் தற்போது அழைப்புகளை ஏற்பதில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். இச்சம்பவம் குறித்து சென்னையில் முதல்வரின் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தேன். சென்னையில் இருந்து பாலக்கரை காவல் நிலையத்தில் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கூறியுள்ளார்கள். தற்போது காவல் நிலைய விசாரணைக்கு வரச் சொல்லியுள்ளனர்’’ என்றார்.
இது குறித்து மணப்பாறை பகுதியில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ‘‘கிராப்பட்டியில் வசிக்கும் செந்தில்வடிவின் சொந்த ஊர் எங்கள் பகுதியில் உள்ளது. இவர் மூலமே உபேந்திரன் பற்றி தெரியவந்தது. செந்தில்வடிவை நம்பியே அவரது வங்கி கணக்கில் நாங்கள் அரசு வேலைக்காக பணம் கொடுத்தோம். ஆனால், அவரோ இப்போது எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் பேசுகிறார். முத்து என்பவரிடமும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவோம். இப்போதெல்லாம் அவர் அழைப்புகளை எடுப்பது இல்லை. எங்களில் பலர் கடன் வாங்கித்தான் பணம் கொடுத்தனர். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.
உபேந்திரன் அரசுவேலை வாங்கித்தருவதாக கூறி பலரை ஏமாற்றியிருப்பது அவனின் தந்தைக்கு நன்குதெரியும். இருப்பினும் இது குறித்து அவர்கள் எதுவும் செய்வதாக தெரியவில்லை. கடன் வாங்கி பணத்தை ஏமாந்த நாங்கள் வட்டிக்கட்ட முடியாமல் திணறுகிறோம், ஆனால், உபேந்திரனோ தனது வீட்டை 15 லட்ச ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளார்’’ என்றார்.
திருச்சி மட்டுமின்றி மணப்பாறை, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து இவர்களிடம் பணத்தை ஏமாந்தவர்கள் ஏராளம். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் உள்ள காவலர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தரும்படி இவர்களிடம் 1 லட்ச ரூபாய்க்கு மேல் கொடுத்து ஏமாந்துள்ளார். மேலும், திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் பணிபுரியும் ஹோம்கார்டு நான்கு பேரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து விரைந்து காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளுமா? பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் நிலையினை கருத்தில் கொண்டு துரிதமாக இதனை விசாரிக்குமா காவல்துறை.
நூதனமாக செயல்படும் இவர்கள் அடுத்தது தமிழகம் முழுவதிலும் கைவரிசையை காட்ட ஆயத்தம் ஆகி வருகிறார்களாம்.